புதன், 22 ஜூலை, 2015

ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

புதுடில்லி: 'நம் நாட்டிலேயே, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, முன்னாள் பிரதமர் ராஜிவை கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்தது. 'இவர்களை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்கலாம்' என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து, இந்த மூன்று பேர் மற்றும் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், நளினி உள்ளிட்ட, மேலும் நான்கு பேரையும் விடுதலை செய்வதாக, தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன, 'பெஞ்ச்'சிற்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பினாகி கோஷ், ஏ.எம்.சார்ரே, உதய் லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன, 'பெஞ்ச்' முன், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் வாதத்தில், 'மத்திய அரசு தாக்கல் செய்யும், 'ரிட்' மனுவை ஏற்க கூடாது. தனி நபர்களுக்கு மட்டுமே, 'ரிட்' மனு தாக்கல் செய்யும் அதிகாரம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, மனு தாக்கல் செய்வதற்கு, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், மேலும் மாற்றம் செய்ய மாநில அரசு விரும்புகிறது. சி.பி.ஐ., தான், இந்த வழக்கை விசாரித்தது. எனவே, மத்திய அரசு மூலமாக, சி.பி.ஐ., இந்த மனுவை தாக்கல் செய்ய கூடாதா? யாரோ சிலர், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மாற்ற விரும்பும்போது, இந்த விஷயத்தில், சி.பி.ஐ., கோர்ட்டில், தன் கருத்தை தெரிவிக்கக் கூடாதா? குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு, யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து, நாங்கள் ஆய்வு செய்வோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


திட்டமிட்டு...:


இதையடுத்து, மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவும், மேலும், 17 பேரும் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இது. முன்கூட்டியே திட்டமிட்டு, சதித் திட்டம் தீட்டி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உள்நோக்கம் தெரிந்து தான், குற்றவாளிகள் குற்றத்தை செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரம், மத்திய அரசின் வரம்பிற்குள் உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாவலராக செயல்பட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, ராஜிவ் கொலையாளிகள் தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான கருணையும் காட்ட வேண்டாம். ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பது தான் ஆயுள் தண்டனை; இடையிலேயே விடுதலை செய்யும்படி கூற முடியாது. ஜனாதிபதி, கவர்னர் போன்றோர், கருணை மனுக்களை நிராகரித்தபின், கொலையாளிகள் விஷயத்தில் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது. வழக்கின் விசாரணை, இன்றும் தொடருகிறது.

*முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாருக்கு லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது, விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
* இந்த தாக்குதலில், போலீசார், பொதுமக்கள் உட்பட, மேலும், 17 பேர் உயிரிழந்தனர்; 48 பேர் காயம் அடைந்தனர்.
* இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட, 26 பேருக்கு, தடா கோர்ட், துாக்கு தண்டனை விதித்தது.
* இவர்களில், 19 பேரை விடுவித்த சுப்ரீம் கோர்ட், மூன்று பேரின் துாக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைத்தது.
* முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு துாக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
* காங்., தலைவர் சோனியாவின் கோரிக்கையை ஏற்று, நளினியின் துாக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
*முருகன் உள்ளிட்ட, மூன்று பேரும், 2000ல், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்கள், 11 ஆண்டுகள் கழித்து, நிராகரிக்கப்பட்டன.
* இந்த காரணத்தை அடிப்படையாக வைத்து, மூன்று பேரின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக கடந்தாண்டு சுப்ரீம் கோர்ட் குறைத்தது. dinamalar.com

கருத்துகள் இல்லை: