ஞாயிறு, 12 ஜூலை, 2015

பாபநாசம் :பார்ப்பானாகிபோன ஜோர்ஜ் குட்டியின் கதை திருஷ்யம் !

மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனைகள் படைத்து மூன்றாவதாக தமிழில் வெளியாகியிருக்கிறது ஜீது ஜோசப்பின் இந்த கதை. த்ரிஷ்யம் என்ற பெயரில் மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் தன் கதையை படமாக்கியிருக்கிறார். சாதாரண வேலைக்காரனாக இருந்து வாடகை டிவி கேபிள் வழங்கும் நிறுவனத்தை உருவாக்கி சுயம்புவாக வளர்ந்து நிற்கும் சுயம்புலிங்கமாக கமல். சுயம்புலிங்கத்தின் மனைவியாக மீண்டும் திரையுலகில் கால் பதித்திருக்கும் கௌதமி. மிக முக்கியமாக ஐஜி கேரக்டரில் வரும் ஆஷா சரத், சுயம்புலிங்கத்தின் மகள்கள் கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில், கலாபவன்மணி என சில கதாபாத்திரங்களை சுற்றியே வருகிறது
கதை. க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் சொல்லும் கதை தான் படமே. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிவைத்த கூட்டில் தேவையில்லாத ஒருவர் வந்து கூட்டைக் கலைக்க முயற்சி செய்கிறார். ஆண் கூட்டில் இல்லாததால் பெண்கள் இருவரும் சேர்ந்து கூட்டை காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அந்த வேண்டாத நபர் கொல்லப்படுகிறார். பிறகு கூட்டிற்கு வரும் ஆண் அந்த கொலை நடந்ததற்கான தடயங்களை அழித்து, அப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே இல்லாதது போல் சித்தரிக்கிறார். இந்த கொலையால் அந்த கூடு கலைக்கப்பட்டதா? அல்லது காப்பாற்றப்பட்டதா? என்பது விறுவிறுப்பான இரண்டாம் பாதி. கொலையை மறைக்க சுயம்புலிங்கம் உருவாக்கும் சாட்சியங்களும், அதற்காக சுயம்புலிங்கம் திட்டமிடுவதும் என அந்தக் கதாபத்திரத்தின் விஸ்வரூபம் நம்மை வியக்க வைக்கிறது. நம்மையே சிந்திக்கவும் வைக்கிறது. சுயம்புலிங்கம் சாதாரண ஆள் இல்லை என்று ஐஜி கேரக்டரின் மூலம் நம்மை திசை திருப்ப எடுக்கப்பட்ட முயற்சியில் ஜீது ஜோசப் வெற்றிபெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். கலாபவன்மணி தனக்கே ஏற்ற இந்த கதாபாத்திரத்தில் மீண்டும் தன்னை பொலிவு பெறச் செய்திருப்பது சிறப்பு. உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் சார். நிவேதா, எஸ்தர் இருவரின் நடிப்பும் அபாரம். நிவேதா தாமஸ் கொலை செய்ததிலிருந்து ஒவ்வொரு சத்தத்திற்கும் படபடப்புடம் இருப்பதாய் இருக்கட்டும், எஸ்தர் க்ளைமாக்ஸில் கலாபவன்மணியிடம் அடிவாங்கும் காட்சியாக இருக்கட்டும் இருவருக்கும் நல்ல ஸ்கோப் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சாமான்ய வீட்டுத் தலைவியாக கௌதமி நன்றாக நடித்திருக்கிறார். வீட்டிற்குள் அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் கிடைத்த இடங்களிலெல்லாம் கண்ணடித்தல், கட்டியணைத்தல் என கமல்-கௌதமி ரொமான்ஸ் காட்சிகள் குளுமை.

பாபநாசம் படத்தின் கதை ஏற்கனவே படமாக்கப்பட்டதாக இருந்தாலும் கமலின் அசாத்தியமான நடிப்பால் பாபநாசம் கமலின் படமாக மாறியிருக்கிறது. கேபிள் டிவி ஆபீஸில் இரவு 10 மணிக்கு மேல் கில்மா பாடல்களை பார்த்துவிட்டு வந்து கௌதமியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலெல்லாம் கமலின் டிரேட்மார்க். கடவுளைப் பற்றி பேசும்போது ’நீங்கள் என்ன கருப்புச் சட்டைகாரரா?’ என வம்படிப்பதிலிருந்து விஜயானந்த ஸ்வாமிகளைப் பற்றி பேசும்போது கருப்பு சட்டை அணிந்து பேசுவது வரை எல்லாம் கமல் குசும்பு. திருநெல்வேலி பேச்சுவழக்கில் ஜெயமோகன் எழுதியிருக்கும் வசனங்கள் சிறப்பு. பல இடங்களில் கமல் கைதட்டல் வாங்கினாலும், கடைசி காட்சியில் ‘நான் சுயநலக்காரன். எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்” என ஒரு நீண்ட வசனத்தை பேசுகிறாரே.... இத...இத...இதத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே காட்சியில் கணவன் பேசப் பேச அழுதுகொண்டே முகமாறுதல்களில் நடிப்பை கொட்டுகிறாரே ஆஷா சரத்.... கமலுக்கு சிறந்த போட்டி. பாபநாசம் - தேன்கூடு! nakkheeran.in 

கருத்துகள் இல்லை: