பாலியல் பலாத்கார வழக்கில், சமரசம் செய்து கொள்ளும்படி வெளியிட்ட உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் வி.மோகன்.
பெற்றோரை இழந்த 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக விருத்தாசலம்
அனைத்து மகளிர் போலீஸாரால் கடந்த 2009-ஆம் ஆண்டு மோகன் கைது
செய்யப்பட்டார். அப்போது, அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு
பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர்
நீதிமன்றம், மோகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும்
விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இளம்
பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்
என்றும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி
பி.தேவதாஸ், இதேபோன்ற இன்னொரு வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த
தீர்ப்பில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வாலிபர் பாதிக்கப்பட்ட பெண்ணை
திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதுபோல் இந்த வழக்கிலும் ஒரு முயற்சி எடுக்கலாம் என்று
முடிவு செய்துள்ளேன். மனுதாரரை சிறைக்கு அனுப்பி எந்தப் பலனும் யாருக்கும்
ஏற்படப் போவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் அனாதையாக உள்ளார். எனவே,
மனுதாரர் பெண்ணை திருமணம் செய்யத் தயாராக உள்ளாரா? என்று சமரசமாக பேசி அதன்
முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மனுதாரருக்கு
இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன் என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி,
பாலியல் பலாத்காரம் தொடர்பான வேறொரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்று உச்ச
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம்
கூடாது, வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பியது சட்ட விரோதம் என்று நீதிபதிகள்
தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை
கட்டுப்படுத்தும் என்பதால் அதை மேற்கோள் காட்டி சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் மோகனின் ஜாமீன் ரத்தாகும் வாய்ப்பு
ஏற்பட்டது.
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்தவருடன் சமரசம்
செய்து கொள்ளும்படி முன்னர் வெளியிட்டிருந்த உத்தரவை சென்னை உயர்
நீதிமன்றம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது. மேலும், குற்றவாளியான
மோகனுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனையும் ரத்து செய்துள்ளது.
இதற்கான உத்தரவை ஏற்கெனவே இந்த வழக்கில் தீர்ப்பு
வழங்கிய நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்தார். அதில், குற்றவாளியான மோகன்,
வரும் 13-ஆம் தேதியன்று கடலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக
வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து
சிறையில் அடைக்க வேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்தத்
தீர்ப்பினை செயல்படுத்துவதை அரசு கூடுதல் வழக்குரைஞர் உறுதிப்படுத்த
வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என
தனது உத்தரவில் நீதிபதி தேவதாஸ் தெரிவித்துள்ளார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக