சனி, 18 ஜூலை, 2015

வேல்முருகன் : கேரளா நிறுவனங்களை இழுத்துமூடுவோம்! தமிழக காய்கறிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு........

காய்கறிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் கோரும் கேரளாவின் அடாவடிக்கு மத்திய அரசை தடை விதிக்கக்கோரியும்,நிபந்தனையை விலக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா நிறுவனங்களை இழுத்துமூடுவோம் எனதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.<இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,<>காய்கறிகளை வெளிமாநிலங்களில் இருந்து ஏற்றிவரும் வாகனங்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.வெளிமாநில காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக புகார் கூறி கேரளா இத்தகைய அடாவடியை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
கேரளாவின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகளே மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கேரளாவுக்கான பெரும்பகுதி காய்கறிகள் தமிழகத்தில் இருந்தே அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்தனை ஆண்டுகாலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காய்கறிகளே தற்போதும் அனுப்பி வைக்கப்படுகிறது. அத்துடன் கேரளாவுக்கு என்று தனியே எந்த காய்கறியும் விளைவிக்கப்படுவதில்லை. அந்த காய்கறிகளைத்தான் தமிழக மக்களும் உண்கிறார்கள்..இங்கிருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு காய்கறிகளுக்கும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமே அற்றது. அண்மையில் கேரளா இத்தகைய புகாரை கூறிய போது கோவை வேளாண் பல்கலைக் கழகம் காய்கறிகளை ஆய்வு செய்து நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்று அறிவித்தது. இதன் பின்னரும் கூட கேரளா அரசு இப்படி அடாவடித்தனமாக செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.<>தமிழக காய்கறிகளைப் பயன்படுத்துகிற பிற மாநிலங்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்காத நிலையில் கேரளாவின் இந்த போக்கு, தமிழகத்தின் விவசாய தொழிலையே பாழ்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது. தமிழக விவசாயிகளின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு, பாம்பாறு, சிறுவாணி என அனைத்திலும் முட்டுக்கட்டைப் போட்டுப் பார்த்து எதுவும் முடியாத நிலையில் இப்போது காய்கறிக்கு சான்றிதழ் காட்டினால்தான் அனுமதி என சவடால் பேசுகிறது கேரளா.

தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் போது தமிழகத்தின் உற்பத்திப் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதற்கு உரிமை உண்டு. இதைத் தடுக்க எந்த மாநில அரசாலும் முடியாது. மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு கேரளாவின் அடாவடித்தனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள், விவசாயிகள் பிரச்சனைகளில் தொடர்ந்து இடையூறு விளைவித்து இரு மாநில மக்களிடையே மோதலை உருவாக்க வேண்டாம்; கேரளா அரசு இந்த நிபந்தனையை உடனே நீக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.nakkheeran.in ;

கருத்துகள் இல்லை: