கர்நாடக மாநிலத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஆறு விவசாயிகள் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 11) தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 42 நாட்களில் மட்டும் கர்நாடகாவில் 43 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
>மாண்டியா மாவட்டத்தில் நான்கு விவசாயிகளும், சாமராஜ்நகர் மற்றும் பீடார் மாவட்டங்களில் தலா ஒரு விவசாயி என ஒரே நாளில் ஆறு பேர் மீண்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.மாண்டியா மாவட்டம் அர்ப்பன ஹள்ளியைச்சேர்ந்த 35 வயதான ராமகிருஷ்ணா தனது நிலத்தில் இரண்டுஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வங்கியில் ரூபாய் 2.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வராமல் போகவே ,வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவண்ணா, ராமகிருஷ்ணாவின் வயதை ஒத்தவர். விவசாயத்துக்காக 3 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்டமுடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார்.
சாமராஜ்நகரைச் சேர்ந்த சிவருத்ரே கவுடா (32), கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தியும், மாண்டியா மாவட்டம் தால்வாட் கிராமத்தைச் சேர்ந்த சென்னய்ய வீரய்யா மத்பதி (55) மரத்தில் தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் சென்னய்ய வீரய்யா சொந்தமாக 5 ஏக்கர் நிலமுள்ளவர். வங்கியிலும், கந்துவட்டிக்காரர்களிடமும் சென்ற பயிர் பருவத்தில் ரூபாய் 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவரது மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும் பிரகாஷ் (30) தூக்கிட்டும், தொடப்பய்யா (40), சின்னஸ்வாமி(40) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தும் மாண்டு போயுள்ளனர். இவர்களெல்லாம் குடும்பச் சண்டையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பது இருக்கட்டும். மத்திய, மாநில அரசுகள் தற்கொலையின் உண்மைக் காரணத்தைக் கூட பதிவு செய்தில்லை. தற்கொலைகளை ‘மனைவியுடன் சண்டை எனவே தற்கொலை செய்து கொண்டார்’ என்று காவல் துறையைக்கொண்டு முதல் தகவல் அறிக்கையில் காரணத்தை மாற்றி கதை விடுகின்றன.
இத்தனைக்கும் ராஜேந்த்ரா (60) எனும் கரும்பு விவசாயி கர்நாடக அரசுக்கும், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்துக்கும் இந்தெந்த காரணங்களால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரும்பு சாகுபடி பகுதிகளான மாண்டியா, மைசூருவில் ஆரம்பித்த தற்கொலைகள் இப்போது மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கின்றன. “18 மாதங்களுக்குப் பிறகும் கரும்புக்கான பணம் கொடுக்கப்படுவதில் தாமதம் காரணமாக விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்குகின்றனர். தனியார் கந்து வட்டி வாங்கி, கடன் சுமை காரணமாக நெருக்கடியை எதிர் கொள்கின்றனர்” என்கிறார், கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குருபுர் சாந்தகுமார்.
சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை 2014-15 பருவத்துக்கு ரூ 3,000 கோடியை தாண்டுகிறது. இது தொடர்பாக கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்கம் போல விவசாயிகள் தற்கொலை பற்றிய எந்த விவரமும் கர்நாடக மாநில விவசாயத்துறையிடம் இல்லை. சொல்லப் போனால் அந்த விவரங்கள் வெளியே வருவதையும் அவர்கள் விரும்பவில்லை. கர்நாடகா என்றில்லை இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பதிவு செய்யாமல் விடுவது அல்லது பதிவு செய்தவற்றை அழிப்பது என்ற வகையில் விவசாயிகளின் தற்கொலையை `குறைக்க` விரும்புகின்றன.
கர்நாடக மாநில வேளாண் இயக்குனர் பி.கே. தர்மராஜன், “மாநில அரசால் அமைக்கப்பட்டுள காவல் துறை உதவி ஆணையர் தலைமையிலான சிறப்புக் குழு இறந்துபோன விவசாயி உண்மையிலேயே விவசாயப் பிரச்சனையால் தான் இறந்து போனாரா என அறிக்கை அளிக்காத வரை எங்களுக்கு எதுவும் தெரியாது” எனவும் விவசாயத்துறை அமைச்சரான கிருஷ்ண பைரே கவுடா ஒரு படி மேலே போய் “விவசாயத்தில் எழும் பிரச்சனைக்காக தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனவர்களை துல்லியமாக் கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுளது. எல்லா விவசாயிகளும் விவசாயப் பிரச்சனைகளுக்காக ஒன்றும் தற்கொலை செய்து கொள்வதில்லை” என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கின்றார்.
விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்துகொண்டிருக்கும் போது அதன் சமூகப் பொருளாதாரக் காரணத்தை ஆராயாமல் அவர்கள் உண்மையிலேயே விவசாயப் பிரச்சனையால் தான் தற்கொலை செய்துகொண்டார்களா என ஆராய ஒரு குழுவை அமைக்கும் வெட்கங் கெட்ட வேலையைச் செய்ய இந்த அரசால் மட்டுமே முடியும்.
மேலும் யாரையெல்லாம் விவசாயி என வரையறுப்பதில் ஏமாற்று வேலை, பெண் விவசாயியை விவசாயியின் மனைவி என கணக்கில் எடுத்துக் கொள்வது (அதாவது அவர் விவசாயி இல்லையாம்), தற்கொலைக்கான காரணத்தை மாற்றி எழுதுவது என விவசாயிகளின் துயரத்தை குறைத்துக் காட்ட முயல்கிறது அரசு.
அரசின் தேசிய குற்றப்பதிவு அறிக்கையின் படியே, 1995-ம் ஆண்டு முதல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 2,70,940 பேர் அதாவது சராசரியாக ஆண்டுக்கு 14,462 பேர்.
2001-ல் இருந்து 2011 வரை பதினோரு வருட இடைவெளியில் சராசரியாக ஆண்டுக்கு 16,743 விவசாயிகள் தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டு சாகடிக்கபட்டிருக்கிறார்கள். அதாவது 2001-ம் ஆண்டிலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 48 பேர், அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்திய விவசாயி ஒருவர் பூச்சிக்கொல்லி சீசாவின் மூடியைத் திறந்துகொண்டோ அல்லது தனது தூக்குக்கயிற்றின் முடிச்சை போட்டுக் கொண்டோதான் இருப்பார்.
என்ன தீர்வு?
புள்ளிவிவரங்களில் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டத்தின் பக்கங்களில் மாற்றிப் பதிவு செய்வோம்! vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக