சனி, 18 அக்டோபர், 2014

தலித் வாழ்வை சொல்கிறதா மெட்ராஸ்? அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது ?


தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகள் மீதான அணுகுமுறை, தலித் மக்களின் வாழ்வியல் பதிவு உள்ளிட்ட விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது, 'மெட்ராஸ்'. இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித்திடம் விரிவாகப் பேசியதில் இருந்து...
தமிழ் சினிமா வரலாற்றில் திரை விமர்சகர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கவனிக்கப்பட்ட வேண்டிய திரைப்படமாக 'மெட்ராஸ்' வேறொரு தளத்துக்கு கொண்டுசெல்லப்படிருக்கிறதே... இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
'மெட்ராஸ்' தலித்துகளைப் பற்றிய, அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றிய திரைப்படம். தலித்துகளின் கலாச்சாரம், வாழ்க்கையைப் பற்றி தமிழ் சினிமாவில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. வட சென்னை மக்கள் உயர்ந்த சிந்தனைகள் இல்லாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள இளைஞர்களுக்கு ஹிப் ஹாப் இசை பிடிக்கும், மைக்கல் ஜாக்சன், கால்பந்து, பாப் மார்லி எல்லாமே தெரியும்.
அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது.
பெரும்பான்மையான இளைஞர்கள் நன்றாகப் படித்து, கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் நல்ல உயரங்களை தொடுகிறார்கள். வட சென்னையின் பரபரப்பான, துடிப்பான வாழ்க்கையை கொண்டாடுவதால்தான் ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கறேன்.
வட சென்னை மக்களைப் பற்றிய பதிவு, தமிழ் சினிமாவில் எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டபோது, 'மெட்ராஸ் படத்தில் பேசப்பட்ட தமிழ், வட சென்னை தமிழ் இல்லை' என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்துது. வேற என்ன மாதிரியான தமிழை வடசென்னையில் பேசுவதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள்? சென்னைத் தமிழ் என்று பலர் கருதிக்கொண்டு இருப்பது காலப் போக்கில் எல்லா அம்சங்கள் மாதிரியே மாறியிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவை பார்க்கிறவர்களுக்கு இருக்கிற புரிதல் வேறு.
வட சென்னை மக்களின் மொழி, அவர்களின் கல்வி அறிவு, விளையாட்டுத் துறையில் அவர்களிடம் உள்ள ஆர்வம்... இப்படி பல வருடங்களாக பொதுவில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றங்கள் எதையுமே தமிழ்ப் படங்கள் பிரதிபலிக்கவில்லை. தமிழ் சினிமாவில் பிரபலமான கானா பாடல்கள்கூட குத்தாட்டப் பாடல்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் எல்லா விதமான சூழலுக்கும் கானா பாடுவார்கள். அதனால்தான் என் படங்களில் கானாவை காதல் பாடலாகப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.
இந்தப் படம் பற்றி தெரியாதவர்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?
என் பார்வையில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட இரண்டு பேரை பற்றிய படம்தான் 'மெட்ராஸ்'. அன்பு என்ற கதாபாத்திரம் அரசியல் அதிகாரத்தால் சமுதாய அமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்யலாம் என நினைக்கிறான். ஆனால், காளி என்ற கதாபாத்திரம் அரசியலை ஒதுக்கி, கல்விதான் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கறான். பிரச்சினைகளின் வேருக்கு போகணும் என்று நம்புகிறான். காளி பகுத்தறிவான, முற்போக்கான ஆள். அதனால், அன்பு சொல்கிற அரசியலுக்குப் பின்னால் அவனால் போக முடியவில்லை. பெரியார் - அம்பேத்கர் சித்தாந்தங்களைச் சார்ந்தது இது.
முக்கியமான பத்திரிகையாளர்கள் 'மெட்ராஸ்' படத்தின் அரசியல் குறியீடுகளை ஏன் தவறவிட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அதுபற்றி தெரியவில்லை. இந்தப் படம் மிகவும் வெளிப்படையாகவே தலித் அரசியலைப் பேசுகிறது. உதராணத்துக்கு பார்த்தீர்கள் என்றால், காளி 'தீண்டாத வசந்தம்' நூலை படிக்கறான். அது தலித் இலக்கியத்தில் முக்கியமான படைப்பு. டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்களை நாயகனின் வீட்டிலும், மற்ற கதாபாத்திரங்களின் வீடுகளிலும் பார்க்கலாம். நாயகியின் தந்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தலித் அரசியலுடன் தொடர்புப்படுத்தக்கூடிய நீல நிறம், படம் முழுக்க நிறைந்திருக்கிறது.
எப்படி ஒரு விமர்சகர், 'எனக்கு தலித் அரசியல் தெரியாது என்றும், வட சென்னை மக்களின் வாழ்க்கை தெரியாது என்றும் சொல்லலாம் என எனக்குப் புரியவில்லை. மறைமுகமாக எதுவுமே படத்தில் இல்லை. எல்லாரும் பார்த்து புரிந்துகொள்கிற மாதிரிதான் இருக்கின்றன.
இது ஒரு சாதாரண பழிவாங்கல் கதை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி?
பிரச்சினைகளின் ஓர் அடையாளம்தான் அந்தச் சுவர். அந்தச் சுவரைச் சுற்றி நடக்கும் அதிகார மோதல் முடிவுக்கு வந்தால் மட்டுமே சமுதாயப் பிரச்சினைகள் முடிந்ததாகச் சொல்லவில்லை. அடக்குமுறை எப்போதும் காணப்படுகிறது. அதை காளி மாதிரியான ஆட்கள் சரியாகப் பகுத்தறிந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் இந்தப் படம் கொண்டாடுகிறது எனச் சொல்லப்படும் விமர்சனங்கள் பற்றி?
இது அப்படிப்பட்ட படம் இல்லை. குறிப்பிட்ட சாதிகளை மட்டுமே உயர்த்திக் காட்டுகின்ற படங்கள் அனைத்துமே என் பார்வைக்குத் தவறானவைதான். சாதிகளும் பாகுபாடுகளும் ஒழிய வேண்டும் என்றுதான் இந்தப் படம் சொல்கிறது.
சாதி ரீதியான பிரச்சினைகளைப் படத்திக் காட்டும்போது, ஓர் இயக்குநரின் கடமை என்ன?
சாதி என்பது இந்திய சமுதாயத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தமான விஷயம். என்னைப் பொருத்தவரை, சாதிகளைப் பேசும் படங்கள், அந்தஸ்து, பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வை திரும்பவும் திணிக்க முற்படும் சாதிய அமைப்புகளைப் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த விஷயத்தில் இரானிய இயக்குநர்களை நான் ரசிக்கறேன். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பழமைவாத சித்தாந்தங்களை, அங்கு இருக்கும் கடுமையான சென்சார் விதிகளையும் மீறி விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட சென்சார் இல்லை. இங்கு இருக்கும் இயக்குநர்கள் அந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்றி, அதேசமயத்தில் பொறுப்பான படங்களையும் எடுக்க வேண்டும். தமிழில் 'வழக்கு எண்' படம் யதார்த்தத்தை வலிமையாகச் சொன்ன படமாக எனக்குத் தெரிகிறது. அமைப்பில் இருக்கற பிரச்சினைகளை மக்கள் முன்பு சொல்லும்போது, அதை எப்படி தீர்க்கலாம் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
சாதிய வேறுபாடுகளைப் பற்றி பேசுகின்ற படங்கள் ஏன் தமிழ் சினிமாவில் அரிதாகவே இருக்கின்றன?
ஒரு குறிப்பிட்ட சாதியை, சமூகத்தைச் சேர்ந்த மக்களை தூக்கிப் பிடிக்கற படங்களுக்கு இங்கே தனி வியாபாரம் இருக்கிறது. ஆனால், தலித்துகளின் வாழ்க்கை, கலாச்சாரத்தை சொல்லும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால், அதற்குச் சந்தை இல்லை, வியாபாரம் இல்லை. அப்படிப்பட்ட தனி வியாபரம் இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை என்ற காரணத்தினாலயே, அந்த சமூகத்தில் இருந்து வந்து, வெற்றி அடைந்த நடிகர்களும் இயக்குநர்களும் இருந்தும்கூட, தலித் கதாபாத்திரங்களும், கலாச்சாரமும் உள்ளடக்கியப் படங்கள் எடுக்கப்படுவதில்லை.
நாமதான் அந்தச் சந்தையை உருவாக்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 'மெட்ராஸ்' சரியா ஓடாது என்று பலர் கணித்தார்கள். ஆனால், அவர்களின் கணிப்பு இப்போது பொய்யாகிவிட்டது.
© 'தி இந்து' ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா tamil.hindu.com 

கருத்துகள் இல்லை: