ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஜெயலலிதா ஜாமீன் கோரிக்கையில் மீண்டும் அதே தவறு ? சதி உள்ளேயா வெளியேயா ?

கர்நாடக ஐகோர்ட்டில், ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, எப்படியாவது, ஜெயலலிதா வெளியில் கொண்டு வரப்படமாட்டாரா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, சொத்து குவிப்பு வழக்கை சரிவர கையாளாமல் போனதே, ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் என்ற கருத்தும் உள்ளது.
சட்டரீதியிலான நடவடிக்கைகளை, இனிமேலாவது சரிவர எடுக்க வேண்டும்; குறிப்பாக, ஜாமின் விவகாரத்தில் சறுக்கிவிட கூடாது என்றெல்லாம், அக்கட்சியினர் வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், டில்லியில் அரங்கேறும் நடவடிக்கைகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. ஜாமின் விவகாரம் கையாளப்படும் முறையை கூர்ந்து கவனித்து வரும் சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள், பலத்த சந்தேகத்தை கிளப்புகின்றன. எங்கே ஜெயலலிதா வெளியே வந்து விடுவாரோ ? தங்கள் திடீர் சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று கவலை படுபவர்கள் நிச்சயமாக எதிர்கட்சிகள் சைடில்  இல்லை! இது ஏன் ஒரு உள்குத்தாக இருக்க கூடாது என்று சந்தேக படக்கூடிய காரணங்கள் நிறைய உண்டு .பன்னீரு பாவம் அந்தபக்கமும் நிம்மதி இல்ல இந்த பக்கமும் நிம்மதி இல்லை ?

ஒன்றல்ல... நான்கு தான்!:ஜாமின் மனுவை, முதலில், ஜெயலலிதாவுக்கு மட்டும் தாக்கல் செய்திருக்க வேண்டும். அவரை, முதலில் வெளியில் கொண்டுவந்த பிறகு, மற்ற மூவருக்குமான நடவடிக்கைகளை எடுப்பது தான் புத்திசாலித்தனம். ஜெயலலிதாவின் வி.வி.ஐ.பி., அந்தஸ்து, மற்ற வர்களுக்கு பொருந்தாது. இதை, ஜாமின் விவகாரத்தில் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே நான்கு பேருக்கும் சேர்த்தே ஜாமின் கேட்கப்படுகிறது. முதல்நாள் ஜெயலலிதாவுக்கு மனு தாக்கல் செய்துவிட்டு, மறுநாளே, மூன்று பேருக்கும் மனுக்கள் போடப்பட்டன. இது, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.காரணம், ஜெயலலிதாவின் ஜாமின் மனு, விசாரணைக்கு வரும்போது, மற்ற மூவரது மனுக்களும் சேர்த்தே விசாரிக்கப்படும். ராஜிவ் கொலையில், தண்டனை பெற்ற மூன்று பேர், முறையீடு செய்த போது, நளினியையும், சுப்ரீம் கோர்ட் சேர்த்துக் கொண்டே விசாரிக்க முடிவு செய்தது. எனவே, ஒரே வழக்கில், ஜாமின் கேட்கும் அனைவரையுமே, நீதிபதி கருத்தில் கொள்வார். இது தெரிந்தும் கூட, கர்நாடகா ஐகோர்ட்டில் செய்த அதே தவறு, சுப்ரீம் கோர்ட்டிலும் செய்யப்பட்டுள்ளது.
தவிர, நான்கு பேரது வாதங்களையும் கேட்பதற்கே கூட, பல மணி நேரமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்களோ ஆகலாம். கர்நாடகா ஐகோர்ட்டில், நாள் முழுவதும், நான்கு பேருக்கும் சேர்த்து விவாதம் நடந்து, காலதாமதம் ஏற்பட்டதால் தான், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் தவிக்க நேர்ந்தது.
அணுகவில்லை:நல்ல நாள் இல்லை என்பதற்காக, கடந்த புதன்கிழமை வீணடிக்கப்பட்டு, வியாழக்கிழமை, ஜெயலலிதாவின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதை உடன டியாக வழக்கு பட்டியலுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை. மாலை வரை இழுத்தடித்து, அலுவல் நேரம் முடியும் நேரத்தில், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த நாளாவது, ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, அவசர மனுவாக எடுத்துக் கொள்ளும்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்துவை அணுகி இருக்கலாம்; அதையும் செய்யவில்லை. மாறாக, சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் மனு தாக்கல் செய்து, வழக்கம் போல, ஜாமின் விவகாரத்தை ஒன்றாக்கி விட்டனர். இனி, ஜெயலலிதாவின் மனுவுடனே, மற்ற மூவரது மனுக்களும் செல்லும்.
இத்தனைக்கும், வெள்ளிக்கிழமை மதியம், 2:30 மணி வரை, கோர்ட் ஹாலில், நீதிபதி தத்து இருந்தார். கடைசி நேரமாக பார்த்து, அந்த கோர்ட் பக்கமாக வந்த, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் குழு, ஏதோ வேடிக்கை பார்க்க வந்தது போல வந்துவிட்டு, சில நிமிடங்களில், அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டனர். தலைமை நீதிபதியை அணுகுவதா, வேண்டாமா என்ற குழப்பம், அந்த குழுவுக்கு இருந்திருக்க வேண்டும். போதிய திட்டமிடலோ, வழிகாட்டுதலோ இல்லையா அல்லது வேறு காரணமா என்பதும் தெரியவில்லை.
எப்படியோ, கடந்த வாரம் முழுவதும் வீணடிக்கப்பட்டுள்ள நிலையில், இனி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் தான், வழக்கு நடக்க வாய்ப்புள்ளது. தலைமை நீதிபதியை அணுகாததை அடுத்து, ஜெயலலிதாவின் ஜாமின் மனு, எந்த கோர்ட்டிற்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பட்டியலிடப்படாமலும், எண் வழங்கப்படாமலும், அந்த மனு உள்ளது. இனி, கோர்ட் வழக்கப்படி பதிவாளர் வாயிலாகவே, எந்த நீதிபதியின் கோர்ட் என்பது முடிவாகும்.
கறாரும் கண்டிப்பும்:ஜாமின் விவகாரங்களில், தங்களது மனுவை குறிப்பிட்ட நீதிபதியின் கோர்ட்டுக்கு வரவைக்கும் வகையில், சில நுணுக்கமான வழிகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். சில நீதிபதிகள், கண்டிப்பும் கறாருமாக இருப்பர். சிலர், கருணையுடன் பரிசீலிப்பவர்களாக இருப்பர். இதனால், ஜாமின் கேட்கும் போது தங்களது மனுவை, குறிப்பிட்ட நீதிபதியின் கோர்ட்டிற்கு வர வைத்துவிடும் சாமர்த்தியங்கள் நடைமுறையில் இருப்பது, அனைவரும் அறிந்ததே.இந்த சாமர்த்தியமும், ஜெயலலிதாவின் ஜாமின் விவகாரத்தில் கோட்டை விடப்பட்டுள்ளது.
காரணம், ஜாமின் மனு தாக்கலான நாள், அந்த மனு விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் செவ்வாய்கிழமை, கோர்ட்டில் நடக்கும் வழக்குகள் மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை, யார் முன்னே எந்த வழக்குகள் வரலாம் என கணிக்கப்படும் யூகங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் ஜாமின் மனு, கறாரான, கண்டிப்பான நீதிபதி முன்பாகவே வர வாய்ப்புள்ளதாக, பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
சிறையில் தள்ளப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். தலைகீழாக நின்று வாதாடிப் பார்த்தும் கூட, ஜாமின் கிடைக்கவில்லை. அந்த கறாரான மூன்றெழுத்து நீதிபதி முன்பாக, ஜெயலலிதாவின் ஜாமின் மனு வரும் வகையில் தான், இந்த மனு தாக்கல்நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அலட்சியம்:மேலும், மிகவும் சாதாரண வகையிலேயே, மனு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஜாமின் கோரும் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் பற்றி, நீதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வாசகங்கள் இல்லை. மூத்த வழக்கறிஞர்கள் யாரும் இல்லாமல், ஒரு சாதாரண ஜூனியர் வழக்கறிஞர் தான், ஜெயலலிதா வின் மனுவை தாக்கல் செய்தார்.
கர்நாடகா ஐகோர்ட்டில், ஒரு நபர் நீதிபதி மூலம் தான், ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே, சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்துவிட்டனர். செவ்வாய்கிழமை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமானால், அரசு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும், சிலவாரங்கள் தள்ளி வைக்கவும் கூட வாய்ப்புகளுண்டு. தவிர, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில்உள்ளதால், கர்நாடகா ஐகோர்ட்டின் பெஞ்சிலேயே ஜாமின் கேட்டு முறையிடச் சொல்லிவிட்டால், திரும்பவும் அங்கு போக நேரிடும். இவ்வாறு, நீதித்துறையின் அடுத்தடுத்தபடிநிலைகளும் முறையாக பயன்படுத்தப்பட வில்லை.
எனவே, அடிப்படை விஷயங்களில் கூட, பெரும் அலட்சியத்துடனேயே, ஜெயலலிதாவின் ஜாமின் விவகாரம் கையாளப்படுகிறதோ என்ற சந்தேகம், சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர்களுக்கு எழுந்து உள்ளது.
- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: