புதன், 15 அக்டோபர், 2014

டில்லியில் வழக்கறிஞர் தேர்வில் அதிமுகவினர் மீண்டும் சொதப்பல் ? அறிவாளிகளை பிடிக்காதே ?

வழக்கறிஞரை தேர்வு செய்வது முதல், தலைமை நீதிபதியை அணுகி அவரிடம் கோரிக்கை வைப்பது உட்பட, அனைத்து விவகாரங்களிலும், போதிய திட்டமிடல் இல்லாமல், அ.தி.மு.க.,வினர் செயல்பட்டுள்ளதால், ஜெயலலிதாவை ஜாமினில் கொண்டு வருவதில், பெரும் இழுபறி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, கடந்த, 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, வழக்கறிஞர் யார் என்பதை முடிவு செய்வதில், பெரும் குழப்பம் நீடித்தது.;
அதனால், அன்றைய தினம் வீணானது. அத்துடன், கர்நாடகா ஐகோர்ட்டில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தவிர்க்கப்பட உள்ளார் என்றதும், குழப்பம் மேலும் அதிகமானது.பின், இதே சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சார்பில் முன்னர் ஆஜரான, ஹரீஷ் சால்வேயே ஆஜராகப் போகிறார் என, செய்தி வெளியானது. அதற்காக, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி காத்திருந்தனர். ஆனாலும், அவர் தன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து, 21ம் தேதி தான் வர முடியும் என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதனால், வேறு யாரை நியமிக்கலாம் என்ற குழப்பம் அதிகரித்தது. வழக்கறிஞர் யார் என்பது முடிவாகாமல் இருந்ததால் தான், கவ்ரவ் அகர்வால் என்ற, ஜூனியர் வழக்கறிஞர் மூலம், ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை தாக்கல் செய்ய நேர்ந்தது. ஜெயலலிதாவின் மனுவுக்கு இவர் தான் சட்டப்பூர்வமான வழக்கறிஞர்.  அறிவாளிகளை தன்னுடன் வைத்து கொள்ளத்தான் இந்த அம்மா விரும்பவது இல்லையே ... காலில் விழும் அடிமைகளும் , மங்குனி பாண்டி அமைச்சர்களும் , நவநீதன் போன்ற ஒரு கேஸ் லும் வெல்லாத வக்கீலும் தானே இந்த அம்மாவுக்கு ஒத்துவரும் ?


ஜூனியர்:


ஒன்றரை கோடி தொண்டர்களை உடைய, அ.தி.மு.க., என்ற பெரிய அரசியல் கட்சியின் தலைவர், மூன்று முறை முதல்வராக இருந்தவருக்கு, தமிழகத்தைச் சேர்ந்த எவரும் வழக்கறிஞராகக் கிடைக்கவில்லை. கடைசியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, அந்த ஜூனியர் வழக்கறிஞர் தான், மனு தாக்கல் செய்தார்.
மறுநாளான, 10ம் தேதி முழுவதும், அவசர மனுவாகக் கருதி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளச் செய்யும் நடவடிக்கைகள், எதுவும் செய்யப்படவில்லை. தலைமை நீதிபதி, நீதிமன்ற அறைக்கு, வெறுமனே வந்து விட்டு திரும்பியதால், அன்றைய முழு அலுவல் நாளும், வீணாகியது. ஜெயலலிதா சார்பில் ஆஜராகப் போகும் வழக்கறிஞர் யார் என்பதை தீர்மானிக்காததே இதற்கு காரணம்.இதன் பின், ஜெயலலிதா சார்பில் ஆஜராக, வழக்கறிஞர் பாலி நாரிமன் தேர்வு செய்யப்பட்டு, நேற்று முன்தினம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை இந்த வாரத்திலேயே விசாரிக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வரும், 17ம் தேதி விசாரிக்கப்படும் என, தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளார்.

காவிரி பிரச்னை:



ஜெயலலிதாவின் வழக்கறிஞராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பாலி நாரிமன், தமிழகம், கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பிரச்னை வழக்கில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரானவர். அந்த வழக்கில், இப்போதும் கர்நாடக அரசுக்காக வாதாடி வருபவர்.காவிரி நதி நீர் பிரச்னையில், தமிழகத்துக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக, உச்ச நீதிமன்றத்தில், இவர் விளாசித் தள்ளிய விமர்சனங்களை கேட்டால், மயக்கமே வந்துவிடும். அப்படிப்பட்டவரை, ஜெயலலிதாவுக்கு, ஜாமின் கேட்பதற்காக, எந்த வகையில் நியமனம் செய்துள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது.இதற்கிடையில், ஜாமின் மனு விசாரணைக்கு வரும், வெள்ளிக்கிழமை அன்று, ஜெயலலிதா சார்பில், இன்னொரு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமும், ஆஜராகலாம் என, கூறப்படுகிறது. பொதுவாக, வெள்ளிக்கிழமை அன்று, உச்ச நீதிமன்றத்தில், ஏராளமான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். அதனால், ஒவ்வொரு மனுவுக்கும், மிகக் குறைந்த நிமிடங்களே ஒதுக்கப்படும். அதில் தான், ஜெயலலிதாவின் ஜாமின் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது. அத்துடன், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியின் மனுக்களும் விசாரிக்கப்பட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்கப்படும்.நீதிபதியின் உத்தரவு, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும், இது போன்ற சூழ்நிலைகளில், பெரும்பாலும் எதிர்தரப்புக்கு, அதாவது, அரசு தரப்பான தமிழக ஊழல் கண்காணிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம். தவிர, வழக்கை தொடுத்த சுப்பிரமணியன் சாமி வந்து நின்றால், மேலும் சில வாரங்கள் கூட கால அவகாசமாக கேட்கப்படலாம்.

- நமது டில்லி நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: