வியாழன், 16 அக்டோபர், 2014

Brittany Maynard தவிர்க்கவே முடியாத மரணத்தை மகிழ்வோடு வரவேற்க தயாராகும் அமெரிக்க இளம் பெண் !

வாஷிங்டன்: கணவனும், தாயும் அருகருகே படுத்திருக்க, பின்னணியில் இசை ஒலிக்க ஆனந்தமாக உயிரைவிட முடிவு செய்துள்ளார் 29வயது இளம் அமெரிக்க பெண். மூளையில் உருவாகிய கொலைகார கட்டி, கொஞ்சம், கொஞ்சமாக வலியோடு உயிரையும் எடுப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் நோயை கொல்ல தனது உயிரை தியாகம் செய்யப்போகிறார் இந்த பெண். அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த 29 வயது பிரிட்னி மேனார்ட், கடந்த ஆண்டு டேனை திருமணம் செய்தபோது, எல்லா பெண்களையும்போல, தானும் பல ஆண்டுகள் கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து, பல குழந்தைகளை பெறுவோம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் கடந்த ஜனவரியில், தலைவலிக்காக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையில் கட்டி வளர்ந்திருப்பதாக டாக்டர் சொன்னபோது அவரது கனவுகள் ஒரே நிமிடத்தில் பொசுங்கி போகின.

வயது இளம் பெண்ணிடம் டாக்டர்கள் கூறும்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏதோ மனதை தேற்றிக்கொண்டு, இந்த காலகட்டத்திற்குள் வாழ்க்கையை எப்படியாவது பயனுள்ளதாக வாழ்ந்துவிட வேண்டும் என்று நினைத்த பிரிட்னிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
தாங்க முடியாத தலைவலியால் மீண்டும் மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது, டாக்டர்களே எதிர்பார்க்காத வகையில் கட்டி உயிர்கொல்லி கேன்சராக மாறி பிரிட்னியின் உயிரை விழுங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. 10 ஆண்டுகளாவது வாழ்வோம் என்ற அற்ப சந்தோஷத்திலும் மண்ணைப்போட்ட நோய், பிரிட்னி இன்றும் 14 மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று டாக்டர்களை சொல்லச் சொல்லியது.
இந்த வார்த்தைகளை கேட்டதும் பிரிட்னியைவிட அவரது தாய், கணவன்தான் பெரும் அதிர்ச்சியடைந்தனர். குடும்பமே உருக்குலைந்தது. ஒருபக்கம் தாங்க முடியாத தலைவலி பிரிட்னியை அணு அணுவாக சித்திரவதை செய்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கம், "இன்னும் 14 மாதங்கள்தான்.." என்ற டாக்டர்களின் வார்த்தை செவிப்பறையில் எதிரொலித்துக் கொண்டு உயிர் செல்களை ஊடுருவிக்கொண்டிருந்தது.
போதும்... இந்த சித்திரவதை என முடிவெடுத்துள்ளார் பிரிட்னி. நோய் என்னை கொல்லும் முன்பு, நான் நோயை கொல்லப்போகிறேன் என்று விம்மலுடன் கூறும் பிரிட்னி, வரும் நவம்பர் 1ம்தேதி கருணைகொலை செய்து கொண்டு, நோயை வெல்லப்போவதாக பிரகடனப்படுத்திவிட்டார். முன்னதாக 'தி பிரிட்னி மேனார்ட் பண்ட்' என்ற பெயரில் ஒரு நிதியத்தையும் ஏற்படுத்தி இவரைப்போன்ற வேதனையாளர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
பிரிட்னி தனது முடிவு குறித்து கூறுகையில், "நான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது உடலில் எந்த ஒரு செல்லிலும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இல்லை. எனது நோய்க்கு மருந்து இருக்கும், நான் பிழைத்திருப்பேன் என்று நம்பினேன். ஆனால் மருந்து இல்லையே..." என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார்.
நோய் என்னை சித்திரவதை செய்கிறது. ஆனால் நான் சித்திரவதைகளுக்கு நடுவே சாக விரும்பவில்லை. அக்டோபர் 30ம்தேதி எனது கணவருக்கு பிறந்தநாள். அன்று வேண்டியவர்கள் அனைவரும் பார்ட்டிக்கு வருவார்கள். சொந்தங்கள் சூழ நான் மகிழ்ச்சியாக இருப்பேன். நவம்பர் 1ம்தேதி, எனது படுக்கையறையில், ஒருபக்கம் தாயும், மற்றொரு பக்கம் கணவனும் படுத்திருக்க, பின்னணியில் இன்னிசை ஒலித்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நான் நிரந்தர அமைதியிடம் தஞ்சமடைவேன்" என்று பிரிட்னி கூறும் வீடியோ பதிவை பார்ப்பவர்கள் கண்களில் ஒரு துளி நீராவது வடியும்.
ஒரேகான் மாகாண 'மரியாதையுடன் கூடிய சாவு' சட்டத்தின்கீழ், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தற்கொலை அல்லது கருணைகொலை செய்ய குடிமக்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டு முதல், 750பேர் தூக்க மாத்திரை மூலமாக மரணத்தை தழுவியுள்ளனர். இப்போது பிரிட்னிக்கும் நோயில் இருந்து விடுதலையை தரப்போவது தூக்க மருந்துகள்தான். மரண தேதியை அறிந்து வைத்திருப்பது மரணத்தைவிட கொடியது. ஆனால் அதையும் ஒரு யோகிக்குறிய பக்குவத்துடன் அணுகியுள்ள பிரிட்னிக்கு நவம்பர் 1ம் தேதிக்குள் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நோய் குணமாக, அனைவரும் கடவுளை வேண்டிக்கொள்வோம்.
பிரிட்னி மற்றும் அவரது கணவர், தாய் பேசிய வீடியோ பதிவை பார்த்தால், எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று ஒவ்வொருவரின் வாயும் முணுமுணுப்பது நிச்சயம்.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: