சனி, 12 ஏப்ரல், 2014

ஜெயலலிதா: தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை ??? யாரோ சதி பண்றாங்க ? இதுதாண்டா ஜெயலலிதா


தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப் பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
திருநெல்வேலி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருநெல்வேலி பாராளு மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விளக்கம்
இன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது. திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர். இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
இதற்கு முன்பு 2 முறை நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.

நிலைமை தலைகீழாக மாறியது
எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக, எனது முந்தைய ஆட்சி காலங்களில் தமிழகத்தின் தேவை போக, உபரியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் பிற மாநிலங்களுக்கு அதனை விற்று வருவாயும் ஈட்டினோம். ஆனால், 2006-க்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இதனை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் தேர்தல் நடைபெறும் வரை, ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, நான் ஆட்சியை விட்டுப் போகும் போது, தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் உபரி மாநிலமாகத்தான் இருந்தது. அதன் பின்னர், தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி நடத்திய காலத்தில் தான், 2006 முதல் 2011 வரையில் உள்ள மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மின் நிலைமை மிகவும் மோசமடைந்தது.
புதிய மின்உற்பத்தி திட்டங்கள்
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எனது ஆட்சி காலத்தில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட புதிய மின் திட்டங்களை எல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, இவைகள் எல்லாம் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் என்பதற்காக கிடப்பில் போட்டுவிட்டார். அந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. அதனால், 2007 வரை நிலைமை சரியாக இருந்தது. 2008-க்கு பிறகு மின்பற்றாக்குறை ஏற்பட்டது. மின் உற்பத்தி குறைந்தது. அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகமே இருளில் மூழ்கியது.
இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தின் அளவு 8 ஆயிரம் மெகாவாட். தற்போது, எனது ஆட்சி காலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் மொத்த அளவு 12 ஆயிரம் மெகாவாட். ஆக, மின்சார பற்றாக்குறை என்ற நிலைமை இல்லை. தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு ஏன் இந்த நிலைமை? அதற்கு மீண்டும் வருகிறேன்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் எதிர்கால மின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்களின் தேவைகளைப் பற்றி கவலைப்படாமல், புதிய திட்டங்கள், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்காமல் விட்டுவிட்டதால், படிப்படியாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
பற்றாக்குறைக்கு காரணம் என்ன?
2008 முதல் 2011 வரை ஒவ்வொரு ஆண்டும் மின் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வந்தது. தமிழகம் இருளில் தள்ளப்பட்டது. உங்கள் எல்லோருக்கும் நன்றாக நினைவிருக்கும். நீங்களெல்லாம் அதனை அனுபவித்திருக்கிறீர்கள். அந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள். 2011-ல் மீண்டும் நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆகவே, எப்படியாவது இந்த நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி காலத்தில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில், சீராக நடைபெற்றுக்கொண்டிருந்த, செயல்பட்டுக்கொண்டிருந்த மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் வேண்டுமென்றே பராமரிப்பின்றி விட்டு, பழுதடையச் செய்து அதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, கமிஷன் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே திட்டமிட்டே இந்த மின் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. அதனால், மின்சார வாரியத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது.
நான் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் உத்தரவிட்டது. தமிழக மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாதென்று. அப்படிப்பட்ட மோசமான நிலைமையில் நான் ஆட்சி பொறுப்பை ஏற்றேன். அப்போது நான் ஒரு சபதம் செய்தேன். வெளிப்படையாகவும் சொன்னேன். இந்த மோசமான மின்பற்றாக்குறை நிலைமையை நான் சரிசெய்தே தீருவேன் என்று உறுதி அளித்தேன். அதன்படி பகீரத முயற்சிகளை மேற்கொண்டேன். படிப்படியாக தமிழக அரசே பொறுப்பேற்று அந்த கடன்களையெல்லாம் அடைத்துக்கொண்டு வந்தோம். புதிய மின் திட்டங்களைத் தொடங்கினோம். வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வரவழைத்தோம்.
12 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி
நான் ஏற்கனவே சொன்னது போல, தி.மு.க. ஆட்சி காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 8 ஆயிரம் மெகாவாட் தான். ஆனால், இப்போது எனது ஆட்சி காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மேல் மக்கள் தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது.
சதித்திட்டம்
ஆகவே, கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதம் வேளையில் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டது. அப்போது மின் வெட்டே இருக்கவில்லை. இதனை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நான் பெருமிதத்துடன் தெரிவித்தேன். சட்டமன்றத்தில் கூறினேன். இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு, பகீரத முயற்சி எடுத்து எனது ஆட்சி, எனது அரசு வெற்றிகரமாக நிலைமையை சமாளித்துவிட்டது. மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் உள்ள அந்த இடைவெளியை நாங்கள் கடந்துவிட்டோம்; சரிசெய்துவிட்டோம்; இனிமேல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது. இந்த சாதனையை நாங்கள் புரிந்திருக்கிறோம் என்று அறிவித்தேன்.
நான் சொன்னது தான் தாமதம். அதன் பிறகு சில நாட்களுக்குள் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. அந்த நேரத்தில், சொல்லிவைத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிற மின் நிலையங்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. சொல்லிவைத்தாற்போல அத்தனை மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் பழுதடைந்துவிட்டன. அதனால் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போதே, ஏற்காடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்ட போது நான் வெளிப்படையாக சொன்னேன். சதித்திட்டம் நடக்கிறது. வேண்டுமென்றே மின்உற்பத்தி நிலையங்களை பழுதடையச் செய்திருக்கிறார்கள். ஆகவே, நிலைமையை சரிசெய்வோம் என்று சொன்னேன். அதன் பிறகு ஓரளவுக்கு நிலைமை சரிசெய்யப்பட்டது. ஆனால், அதற்குள் பாராளுமன்ற மக்களவை தேர்தல் வந்துவிட்டது.
மின்பற்றாக்குறை இல்லை
ஆகவே, நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இன்று மின் பற்றாக்குறை என்ற நிலைமை தமிழ்நாட்டில் இல்லை. மக்கள் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே, மின் பற்றாக்குறை இல்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அப்படியானால், அடிக்கடி மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது? திடீரென்று 2 மின் நிலையங்கள் ஒரு நாளில் பழுதடைந்துவிடுகிறது. இதனால் கிட்டத்தட்ட 1,000 மெகாவாட், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி குறைகிறது. அந்த நேரத்தில் தமிழகமெங்கும் மின் வெட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த நிலையங்களை சரிசெய்கிறோம்.
திட்டமிட்ட சதி
அதன் பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் 3 மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றன. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். டிரிப் ஆகிவிட்டது; கன்வேயர் பெல்ட் அறுந்துவிட்டது; திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொல்லுகிறார்கள். மீண்டும் அதை சரி செய்கிறோம். அதை சரி செய்த உடனேயே மறுபடியும் வேறு ஏதாவது ஒரு மின் நிலையத்தில் இப்படி பழுது ஏற்படுகிறது.
நானும் யோசித்துப் பார்த்தேன். நான் ஏற்கனவே 2 முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் இப்படி தினசரி பழுதடையவில்லை. மின் உற்பத்தி நிலையங்களில் தினசரி இப்படி பழுதுகள் ஏற்படாது; தவறுகள் ஏற்படாது.
ஆகவே, திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செயற்கையான ஒரு மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களில் இத்தகைய பழுதுகளை ஏற்பட செய்து, அதன் காரணமாக செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி மின்வெட்டு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, இதன் மூலம் மக்களுக்கு அ.தி.மு.க. அரசு மீது அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறார்களோ என்று அனைவரும் இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.
கடும் நடவடிக்கை
ஆகவே, ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தினசரி இப்படி மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன என்றால் இது திட்டமிட்ட சதிதானோ என்று தோன்றுகிறது. ஆகவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக கண்டுபிடித்தே தீருவோம். மக்களின் துன்பத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் மின்வெட்டு என்ற துன்பத்தை சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல் வேண்டுமென்றே இப்படி நாச வேலையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மின் நிலைமை சீர் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
2888 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
பொதுக்கூட்ட மேடையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழு 20-வது வார்டு உறுப்பினர் ச.பரமசிவ ஐயப்பன், பாளையங்கோட்டை ஒன்றியம், தருவை ஊராட்சி மன்ற தலைவர் எம்.வேல்சாமி, ராதாபுரம் ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஜித்தின் மற்றும் கு.சண்முகசுந்தரம் ஆகியோரும்;
தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் களான த.தாமஸ் அமிர்தராஜ், ஆர்.செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பி.கோதை நாச்சியார்; பா.ம.க.வை சேர்ந்த மாநில முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆ.மோகன்ராஜ், திருநெல்வேலி மாநகர் மாவட்ட பொருளாளர் பாப்பா ரத்தினம்; திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக முன்னாள் தலைவர் து.பாலையா தவசிக்கனி; உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வரும் திருக்குறங்குடி பேரூராட்சி மன்ற தலைவர் எம்.திருமலைநம்பி மற்றும் நாங்குநேரி எஸ்.ராஜகோபால் உள்ளிட்ட 2,888 பேர் தங்களை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: