வியாழன், 10 ஏப்ரல், 2014

DMK ராஜாவின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவின் நீலகிரி தொகுதி ஏற்கனவே அகில இந்திய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் பாஜக தனது வேட்பாளரை அதிமுகவுக்காக விட்டு கொடுத்து ஒரு சின்னவீடு டைப் அரசியல் செய்வதால் அவர்களின் கள்ள கூட்டணி உறவு அம்பலமானதும் இதே நீலகிரியில்தான் எனவே இந்த தொகுதி நிலவரம் பலரின் ஆவலுக்கு ஆளானது, அங்கு நாம் கேட்ட சுவாரசியமான குரல்கள்:

தொழிற்புரட்சி செய்த ராஜா ஜெயிப்பார். தலித் என்பதாலும் தமிழர் என்பதாலும், வட இந்தியர்கள் ராஜாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டனர். அவரின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன். இப்படி இருக்கையில் அவர் ரெண்டு லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று பிஜேபி கட்சியினர் கொளுத்தி போட்டுவிட்டனர். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பழிவாங்கப்பட்ட அப்பாவி ராஜாவை ஜெயிக்க வைப்பதில் திமுகவிற்கு பெருமை அடங்கி உள்ளது. ராஜாவின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழியை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். குப்பனுக்கும் சுப்பனுக்கும் செல்போனை எட்ட செய்த ராஜாவிற்கு ஓராண்டு தண்டனைதான் கிடைத்தது. இன்று உலகிலேயே செல் பிளான் கம்மியாக உள்ள ஒரே நாடு இந்தியா தான். இது எதனால் என்று இந்தியர்களுக்கு புரியாது. அது ராஜா என்ற ஒரு தமிழனால் சாதிக்கப்பட்டது என்றும் புரியாது. அதை வடநாட்டவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஊட்டி வாழ் மக்களுக்கு, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது.  சீசன் நேரங்களில், தாங்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், தங்களுக்கு கிடைப்பதில்லை என்று, குமுறுகின்றனர். ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையை, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து பொருமுகின்றனர். 'மலர் பாதை போல அமைந்திருக்கும், அச்சாலை வழியாகத்தான் ஜெயலலிதா, கோடநாடு செல்கிறார். ஓட்டு வாங்கியவருக்கு வசதி. ஓட்டு போட்டவர்களுக்கு சிரமம் என்பது சரியா?' என, நியாயம் கேட்கின்றனர், இப்பகுதி மக்கள். இது தவிர, ஊட்டியில் இருக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹெச்.பி.எப்., மேம்பாட்டுக்காக, மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை என்ற ஆதங்கமும், நகர மக்களிடம் இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் தரவேண்டிய அ.தி.மு.க., '2ஜி' வழக்கில் ராஜா மீண்டும் கைதாகி விட்டால், தொகுதி அனாதையாகிவிடும். எனவே, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்' என, படு மொக்கையாக பிரசாரம் செய்து வருகிறது.



மாதம் ஒருமுறை மக்களை சந்தித்து, அவர்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டு தந்து, பிரச்னையை தீர்த்து வைத்திருப்பதால், மேட்டுப்பாளையத்தில் ராஜாவுக்கு மவுசு இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருமுறை என, இருந்த, மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான ரயில் சேவையை அதிகப்படுத்தியதன் மூலம், பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார் ராஜா. அதோடு, பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., பேச்சாளர்கள், தி.மு.க.,வினரை ஒருமையில் சாடுவது, இப்பகுதி மக்களிடம் வெறுப்பை விதைத்திருக்கிறது. கையிலிருக்கும் பீடி அணையும் வரை, அ.தி.மு.க., பிரசாரத்தை காது கொடுத்து கேட்பவர்கள், இறுதியாக, காலில் போட்டு நசுக்கி செல்கின்றனர், பீடியையும், பிரசார வார்த்தைகளையும்! மேட்டுப்பாளையம் நகராட்சி, பா.ஜ., வசம் உள்ள நிலையில், கணிசமான ஓட்டுகளை அள்ளுவதற்கு,  பா.ஜ.,வுக்கு இத்தொகுதியில் வாய்ப்பிருந்தது. ஆனால், தற்போது நேரடியாக போட்டியிட முடியாத நிலையில், ஏதாவது ஒரு சுயேச்சைக்கு ஆதரவு தந்து, வெற்றி பெறும் முயற்சியில் பா.ஜ., இறங்கிஉள்ளது. சுயேச்சை சிக்கினாலும், ''மக்களே... மக்களே...'' எனும், கேப்டனின் அன்பு பிரசாரம், வெற்றிக் கனவை கலைத்துவிடும் போலவே தெரிகிறது. 'ஈவினிங் டைம் பாஸ்' என, கேப்டனின் பிரசாரத்தை விமர்சிக்கின்றனர் மேட்டுப்பாளையம் இளசுகள்.

கருத்துகள் இல்லை: