வியாழன், 10 ஏப்ரல், 2014

நீதிமன்றம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தாமதப்படுத்த பல நாடகம் அரங்கேறுகிறது

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மெடோ ஆக்ரோ பாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, அதை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளாக காட்டப்பட்டுள்ளது. ‘இந்த வழக்கில் இருந்து நிறுவனங்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணை நடத்தி முடிவு காணும் வரை, சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கம்பெனிகள் சார்பில் கடந்த மாதம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா, ‘சொத்து குவிப்பு வழக்கில் கம்பெனிகள் இணைக்கப்பட்டுள்ளதை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதிக்கிறேன்.


ஆனால், மூல வழக்கு (சொத்து குவிப்பு வழக்கு) விசாரணை நடத்த தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று தீர்ப்பளித்தார். தனி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மெடோ ஆக்ரோ பாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ் கம்பெனிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு நேற்று நீதிபதி சத்ய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக லஞ்ச-ஒழிப்பு துறை சார்பில் வக்கீல் கிருஷ்ணப்பாவும், மெடோ நிறுவனம் சார்பில் வக்கீல் ஜெயகுமார் பாட்டீலும் ஆஜராகினர். அப்போது கம்பெனிகள் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயகுமார் பாட்டீல், ‘‘இவ்வழக்கு தொடர்பாக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் தாமதமாக கிடைத்துள்ளதால், அதை படித்து உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார். அதை கேட்ட நீதிபதி சத்யநாராயணா, ‘‘சொத்து குவிப்பு வழக்கில் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நாடகங்கள் அரங்கேறி வருகிறது. வழக்கை தாமதம் செய்ய பல வழிகளில் முயற்சி நடக்கிறது’’ என்று அதிருப்தி தெரிவித்து, விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையில், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன்னிலையில் மெடோ ஆக்ரோ பார்ம் நிறுவனம் தாக்கல் செய்துள்ள சாட்சிகள் வாக்குமூலம் பதிவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. மெடோ நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘சாட்சிகளில் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களை வரவழைக்க சில நாட்கள் அவகாசம் தேவை. மேலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனது உடல் நலத்தை காரணம் காட்டி, மூன்று வாரம் விசாரணையில் ஆஜராகாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றுள்ளார். அரசு வக்கீல் இல்லாமல் வாக்குமூலம் பெறுவது சரியல்ல. ஆகவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். ‘‘உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை சரியாக பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: