ஞாயிறு, 23 மார்ச், 2014

நீலகிரி ஆ.ராசா நிச்சயம் வெற்றி பெறுவார் ! தொகுதி கண்ணோட்டம்



நீலகிரி(தனி) பாராளுமன்ற தொகுதியில் கூடலூர்
, ஊட்டி, குன்னூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக பவானிசாகர் (தனி) தொகுதி சேர்க்கப்பட்டது. மேலும், குன்னூர் தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டு கூடலூர் (தனி) தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து நீலகிரி பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதியில், ஊட்டி, கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), பவானிசாகர் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. நீலகிரி பாராளுமன்ற தொகுதி தற்போது தி.மு.க. வசம் உள்ளது. எம்.பி.யாக ஆ.ராசா உள்ளார்.
கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா 3 லட்சத்து 16 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணனுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 781 வாக்குகள் கிடைத்தன. ஆ.ராசா 86 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ.க்கள்
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் தற்போது எந்தெந்த கட்சிகள் வசம் உள்ளன? அவற்றின் எம்.எல்.ஏ.க்கள் யார் என்ற விவரம் வருமாறு:–
ஊட்டி– புத்திசந்திரன் (அ.தி.மு.க.)
கூடலூர் (தனி) – திராவிடமணி (தி.மு.க.)
குன்னூர்– கா.ராமச்சந்திரன் (தி.மு.க.)
மேட்டுப்பாளையம்–ஓ.கே.சின்னராஜ்(அ.தி.மு.க.)
அவினாசி(தனி)–ஏ.ஏ.கருப்பசாமி (அ.தி.மு.க.)
பவானிசாகர்(தனி)–பி.ஜி.நாராயணன்(அ.தி.மு.க.)
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆதிவாசிகளான தோடர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் மற்றும் படுகர் இன மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு தேயிலை, மலை பகுதி காய்கறிகளான பீன்ஸ், உருளைக் கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விளைகிறது. மேலும், சுற்றுலா மாவட்டமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 12 லட்சத்து 41 ஆயிரத்து 671. இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து 16 ஆயிரத்து 70 பேர். பெண்கள் 6 லட்சத்து 25 ஆயிரத்து 539 பேர். இதர வாக்காளர்கள் 62.
தேர்தல் முடிவுகள்
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 1957–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை நடந்து உள்ள பாராளுமன்ற தேர்தல்களின் முடிவுகள் வருமாறு:–
1957– (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள் –3,02,143
நஞ்சப்பன் (காங்.) –1,22,388
பி.எஸ்.பாரதி (சுயே) –56,754
1962– (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள் –4,50,481
அங்கம்மா தேவி (காங்.) –1,63,420
மதனன் (கம்யூ.) –75,299
1967– (சுதந்திரா வெற்றி)
மொத்த ஓட்டுகள் –5,02,089
நஞ்சா கவுண்டர் (சுதந்திரா) –1,67,712
அங்கம்மா தேவி (காங்.) –1,48,010
1971– (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் –5,53,870
மாதா கவுடர் (தி.மு.க.) –2,15,654
அங்கம்மாதேவி(ப.காங்.) –1,54,560
1977– (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் –6,95,566
ராமலிங்கம் (அ.தி.மு.க.) –2,41,777
நஞ்சா கவுடர் (ஜனதா) –1,82,431
1980– (இ.காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள் –7,34,760
ஆர்.பிரபு (இ.காங்.) –2,73,614
திப்பையா (ஜனதா) –1,87,871
1984– (இ.காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள் –8,27,733
பிரபு (இ.காங்.) –3,41,824
சி.டி.தண்டபானி(தி.மு.க.) –2,09,885
1989– (இ.காங். வெற்றி)
மொத்த ஒட்டுகள் –11,04,499
ஆர்.பிரபு (இ.காங்.) –4,55,411
மகாலிங்கம் (தி.மு.க.) –2,81,640
1991– (இ.காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்– 11,03,713
ஆர்.பிரபு (இ.காங்.)–3,87,707
துரைசாமி (தி.மு.க.)–2,06,905
1996– (த.மா.கா. வெற்றி)
மொத்த ஓட்டுகள் –11,99,250
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
(த.மா.க.)–4,75,515
ஆர்.பிரபு (இ.காங்.)–1,94,139
1998– (பா.ஜனதா வெற்றி)
மொத்த ஓட்டுகள்– 12,94,110
மாஸ்டர்மாதன்(பா.ஜனதா)– 3,22,818
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (த.மா.க.)– 2,62,433
1999– (பா.ஜனதா வெற்றி)
மொத்த ஓட்டுகள் –13,48,417
மாஸ்டர் மாதன் (பா.ஜனதா) –3,69,828
ஆர்.பிரபு (இ.காங்.) –3,45,869
2004– (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்– 13,17,502
ஆர்.பிரபு (காங்.) –4,94,121
மாஸ்டர் மாதன் (பா.ஜனதா) –2,57,619
2009– (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்–10,01,247
ஆ.ராசா (தி.மு.க.) 3,16,802
கிருஷ்ணன் (ம.தி.மு.க.) 2,30,781
இதுவரை நடைபெற்று உள்ள தேர்தல்களில் 7 முறை காங்கிரசும், 2 முறை பா.ஜ.க.வும், 2 முறை தி.மு.க.வும், அ.தி.மு.க., சுதந்திரா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.
தேர்தல் வாக்குறுதிகள்
நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியானார். இதனால் அந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அவர் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.
ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை புனரமைக்கப்படும். ஊட்டியில் மருத்துவ கல்லூரியும், கோத்தகிரியில் அரசு பொறியியல் கல்லூரியும் கொண்டு வரப்படும். கூடலூரில் நிலவும் செக்ஷன்–17 பிரச்சினைகள் தீர்க்கப்படும், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். அவினாசி– அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவோம். கூடலூர், மசினகுடி பகுதியில் யானை வழித்தட பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும். நிலம்பூர்– கூடலூர்–நஞ்சன்கூடு ரெயில்வே திட்டம் கொண்டு வரப்படும். ஊட்டியில் மென்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கோவை– ஊட்டிக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து வசதி என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.
இதில் கூடலூர் பாரதியார் கல்லூரியை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். அவினாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். மேலும் நீலகிரியில் 3ஜி செல்போன் சேவை, விரைவான இன்டர்நெட் சேவை போன்றவற்றை கொண்டு வந்தார். இருந்தாலும் மக்கள் எதிர்பார்த்த பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் அவர் 2ஜி ஊழல் புகார் தொடர்பாக கைதாகி மந்திரி பதவியை இழந்தார்.
முக்கிய பிரச்சினைகள்
பொதுவாக நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக பச்சை தேயிலைக்கான விலை நிர்ணயம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதவிர கூடலூர், பந்தலூர் பகுதியில் செக்ஷன்–17 நிலப்பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளது. மேலும் சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படுவது இல்லை. மாவட்டத்தின் பிரதான சாலையான பர்லியார்– கக்க நல்லா சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
இதே போன்று தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் காரணமாக தங்களது நிலங்களில் வீடுகள் கட்ட முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.  dailythanthi.com/

கருத்துகள் இல்லை: