புதன், 26 மார்ச், 2014

குக்கூ - அசரவைக்கும் ஒரு படம் ! அழகான மனிதர்களின் Feel good movie

தமிழ்சினிமாவிற்கு சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும்போதெல்லாம், அதற்கு சுவாசமூட்டுகிற வகையில் ஒரு படைப்பு வரும். தமிழ்சினிமாவின் ரசிகர்கள் சோர்ந்துபோய் தலைகுனிந்து இருக்கும் போது, அசரவைக்கும் ஒரு படம் வெளியாகி அவர்களை தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். அப்படி நமக்கு மரியாதையும் காதலும் ஏற்படுத்துகிற ஒரு சினிமா தான் ‘குக்கூ’. இருட்டை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் அந்த அழகான மனிதர்களின் வாழ்வியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது ‘குக்கூ’.



ரயில்களில் பொம்மை விற்பவர். அதையும் தாண்டி இவரிடம் ஒரு அபாரத் திறமை உள்ளது. இளையராஜாவின் குரலை கடன் வாங்கி வைத்துள்ளவர்! கச்சேரிகளிலும் மேடை நாடகங்களிலும் இளையராஜாவின் குரலில் பாடி அசத்துபவர். இளையராஜாவின் பாடல்கள், அறையில் தங்கியிருக்கும் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி என அழகான நாட்களை ரசித்துவருகிறார் ‘தமிழ்’.

ஆசிரியர் பணிக்காக படித்துக்கொண்டிருப்பவர். தினமும் ரயிலில் பயணம் செய்துதான் கல்லூரிக்குப் போக வேண்டும். பெற்றோரை சிறு வயதிலேயே இழந்தவர். தன்னைப்பற்றி அக்கரையில்லாத அண்ணன் மேல் உள்ள வெறுப்பால் விடுதியில் தங்கி படிப்பவர். அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. அவசியமில்லாமல் யாருடனும் பழகுவதில்லை என்ற கொள்கையோடும் கனவுகளோடும் இருப்பவர் ‘சுதந்திரக்கொடி’. இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை - இருவருக்கும் பார்வை இல்லை! 

உலகின் எல்லா காதலும் தொடக்கத்தில் மோதலை சந்திப்பதுபோல, இவர்களும் சண்டையில் தான் சந்திக்கிறார்கள். நாயகனை கைத்தடியால் ஓங்கி மண்டையில் அடிக்கும் நாயகி, அடுத்த நாள் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் நாயகனை அழைத்துச் சென்று காயத்தின் மேல் சிலுவை வரைந்து, கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறார். அந்த தொடுதல் தான் காதலின் தொடக்கமாக அமைகிறது.


நாயகி புத்தகம் வாங்க தேவைப்படும் பணத்தை அவர் அண்ணன் கொடுக்காமல் போக, நாயகன் அந்த நேரத்தில் உதவிக் கரம் நீட்டுகிறார். இதுபோன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்வதின் மூலம் காதல் வானில் இறக்கைக்  கட்டிப் பறக்கிறார் நாயகன் தமிழ். ஆனால் நாயகி சுதந்திரக்கொடி, பார்வை உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர் என்பதை பின்னர் தெரிந்துகொள்கிறார் தமிழ்.

தனக்கு கல்லூரி பாடம் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளர் தன்மீது அதிக பாசம் வைத்திருப்பதாக உணரும் சுதந்திரக்கொடி, அவரை நம்பி ஏமாந்து போகிறார். இந்த விஷயம் தமிழுக்கும் தெரியவருகிறது. கலைந்த காதல் மீண்டும் துளிர்விட்டு எழுகிறது. இன்னொருபுறம், பார்வையில்லாத தன் தங்கைக்கு அரசாங்க ஆசிரியர் பணியை பெற்றுவிட பல முயற்சிகளை செய்கிறார் கொடியின் அண்ணன். அதற்காக தரகரிடம் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க உதவியாக இருப்பது அவர் அண்ணனின் நண்பன்.

காசு கொடுத்து உதவிய நண்பனுக்கு பரிசாக தன் தங்கையை கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் கொடியின் அண்ணன். இந்த நிலையில் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிய வருகிறது. கொடிக்கு அவசர அவசரமாய் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அவர்களுக்கு தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு தன் காதலியை மீட்க முன்வருகிறார் நாயகன் தமிழ்.


சதிகள் பின்னப்படுகிறது. கொடி மறைத்துவைக்கப்படுகிறார். தமிழ் பல கஷ்டங்களைத் தாண்டி கொடியை பார்க்க பணத்தோடு செல்கையில், விபத்தில் அடிபடுகிறார். அந்த வாழியாக வரும் ஒரு கருணை மனம் படைத்தவர், அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அதே வாகனத்தில் கொடியும் இருக்கிறார்... என பதட்டத்தை உண்டாக்கும் காட்சிகள் இதயத்தைக் கலங்க வைக்கிறது.

பார்வை இல்லாத காரணத்தால் அருகில் இருந்தும் பார்க்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பார்க்கும் போது மனசு துடிக்கிறது. இருவரும் சந்தித்தார்களா? கொடியைத் தேடித் தேடி பைத்தியக்காரனாய் திரியும் தமிழ், இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் இருக்கும் அவரைக் எப்படி கண்டுபிடித்தார் என்பதை காட்டும் உணர்பூர்வமான, நெகிழ்ச்சியான காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

பார்வை இல்லாதவர்களின் சூழல் மிகவும் அழகானது. கலகலப்பான அவர்களின் பேச்சு, சப்தத்தை வைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை விசேஷ திறமையுடன் கண்டறிவது என அவர்களின் வாழ்வியல் நமக்கு பல ஆச்சரியங்களை கொடுக்கும். அந்த உணர்வை அப்படியே அதே எதார்த்தத் தன்மையோடு திரையில் பதிவு செய்கிறார் இயக்குனர் ராஜுமுருகன். ஒரு புது முயற்சியாக இயக்குனராகவே தன் அனுபவத்தை பகிர்வது போல, திரைக்கதை அமைத்திருப்பது அவரின் புத்திசாலித்தனம்.


அட்டகத்தி தினேஷ் இனி, குக்கூ தினேஷ் என அழைக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. மாறுகண் வைத்து பார்வை இல்லாதவர்களின் வெகுளித்தனத்தை தன் முகத்தில் பிரதிபலிப்பது மட்டுமல்ல, படத்தின் கடைசி கட்டக் காட்சிகளில் பரட்டைத் தலையோடுயும் அடர்ந்த தாடியோடும் ஐந்தாவது பிளாட்பாரத்தின் ஐந்தாவது படியில் ‘படார்... படார்...’ என்று தன் கைத்தடியால் அடிக்கிறாரே... நடிப்பில் அசர வைக்கிறார் மனிதன்!

நாயகி மாளவிகா கொள்ளை அழகு, கோபப்படும் போதும்! தன் பயிர்ச்சியாளரின் காதலி, ஒரு பை நிறைய பழைய துணிகளைக் கொடுக்கும் நேரத்தில், அதை வாங்க மறுத்து தன் கைக்குட்டையையும் அந்த பையில் சேர்த்து வைத்து, அந்த பையை அங்கேயே விட்டுவிட்டு, ஏமாற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு எழுந்துபோகும் காட்சியில் அசத்தலான நடிப்பு.

இவர்களைவிடவும் நயகனின் நண்பனாக வரும் இளங்கோ, நாயகியின் தோழியாக வரும் சங்கீதா, ரயில் நிலையத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களைத் தாண்டி ரசிக்கவைக்கிறது. நாடக கம்பேனி வைத்திருக்கும் சந்திரபாபு, இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு அவதிப்படுவதும், அங்கே எம்.ஜி.ஆர், விஜய், அஜித், ஸ்ரீதேவி என பலரும் இருக்க, கலகலப்பாக நகர்கிறது அந்தக் காட்சிகள். வொண்டர்... வொண்டர்... என காட்சிக்குக் காட்சி பாராட்டைப் பெறுகிறார் இயக்குனர் ராஜுமுருகன்.


படத்தில் எந்தவொரு கதாபாத்திரமும் அவசியமில்லாமல் வந்துபோவதில்லை. ‘சொல்லுங்கோ அத்திம்பேர்...’ என போன் பேசும் மனிதரில் தொடங்கி,  ‘மார்க்கு போடுவதில் கலா மாஸ்டருக்கு பிறகு நான் தான்...’ என காமெடி பண்ணும் வயதானவர் வரை அத்தனைபேரும் மனதில் நிற்கிறார்கள். ‘குக்கூ’ என அடிக்கடி ஒலிக்கும் கடிகாரம் உட்பட!

ஆம்பளைங்க எல்லோரும் வெளியே புரட்சித் தலைவர், ஆனா வீட்டில் நடிகர் திலகம் தான்! என்று பல வசனங்கள் பளிச்சென மனதில் பதிகிறது. புயலாய் எழுந்து மழையின் சாரலாய் இதயத்தில் குடைவிரிக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘ஒத்தநொடியில...’ ‘மனசுல சூரக்காத்து...’ ‘ஆகாசத்த...’ ‘கோடையில...’ என யுகபாரதி வரிக்கு வரி ரசிக்கவைக்கிறார். ‘கல்யாணமாம் கல்யாணம்...’ பாடல் தேவையில்லாத இரைச்சல்! 


‘தமிழ் - கொடி’ காதலைவிட இயக்குனர் இளையராஜாவின் மீது வைத்துள்ள காதல் அவர் பயன்படுத்திய பாடல்களில் வெளிப்படுகிறது. இப்போது மட்டுமல்ல இனி எந்த காலத்துக்கும் இளமையோடு இருப்பவை இளையராஜாவின் பாடல்கள் என நிரூபித்திருக்கிறது ‘குக்கூ’. கண்களில் வண்ணமயமான காட்சிகளை கொண்டுவருகிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா.

பார்வை இல்லாத அந்த வெள்ளந்தியான கதாபாத்திரங்களை நம் கண்கள் திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் ஒரு நேர்மையான படைப்பு, சமீபகால சில படங்களால் சலிப்பை மட்டுமே உணர்ந்த ரசிகர்களுக்கு ஒரு திரைப்படத்தை கொண்டாவும், அதிசயித்து வியக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது ‘குக்கூ’. அந்த வகையில் வீசப்பட்ட எத்தனையோ கூழாங்கற்களுக்கு மத்தியில் கிடைத்த வைரக்கல்லாக மின்னி ஜொலிக்கிறது ‘குக்கூ’. 
cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை: