செவ்வாய், 25 மார்ச், 2014

தூக்கு! உறுதி செய்தது ஐகோர்ட்! கோவை பள்ளி சிறுமியையும் சகோதரனையும் கொன்றவர்களுக்கு ..

சென்னை:கோவையில், பள்ளி சிறுமியை பாலியல் வன்முறை செய்து, அந்த சிறுமியையும், அவளது சகோதரனையும், கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
கோவையைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின்; தொழில் அதிபர். இவருக்கு, 10 வயதில், பெண் குழந்தையும், ஏழு வயதில், ஆண் குழந்தையும் இருந்தனர். இவர்கள், தனியார் பள்ளியில் படித்து வந்தனர். காரில் கடத்தல்:
பள்ளிக்கு செல்வதற்காக, காத்திருந்த, இரண்டு குழந்தைகளையும், மோகனகிருஷ்ணன் என்பவர், காரில் கடத்தினார்.பின், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த, தன் நண்பர் மனோகரனையும், சேர்த்துக் கொண்டார். சிறுமியை, இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர்.சிறுமிக்கும், சிறுவனுக்கும், சாணி பவுடரை கலந்து கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, உடுமலை அருகே, தீபாலபட்டியில், ஒரு வாய்க்காலில் தள்ளி விட்டனர். இரு குழந்தைகளும், தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.இந்த சம்பவம், 2010, அக்டோபரில் நடந்தது. இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அழைத்து சென்ற போது, மோகனகிருஷ்ணன், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். 2010, நவம்பர், 9ம் தேதி, இச்சம்பவம் நடந்தது.
தூக்கு தண்டனை: இதனால், மனோகரன் மீது, கோவை மகளிர் கோர்ட்டில், விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சுப்ரமணியம், குற்றம் சாட்டப்பட்ட மனோகரனுக்கு, தூக்கு தண்டனை விதித்தார். 2012, நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை எதிர்த்து, மனோகரன், உயர் நீதிமன்றத்தில், அப்பீல் மனுத் தாக்கல் செய்தார். தண்டனையை உறுதி செய்ய, கோவை போலீஸ் தரப்பில், உயர் நீதிமன்றத்துக்கு, வழக்கு அனுப்பப்பட்டது.இவ்வழக்கை, நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர், வி.எம்.ஆர்.ராஜேந்திரன், கோவை சிறப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன், மனோகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ரகுநாதன், வழக்கறிஞர் வைரம் ஆஜராகினர்.


பாலியல் வன்முறை:



வழக்கை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
இரண்டு குழந்தைகளையும், மோகனகிருஷ்ணன், கடத்தியுள்ளார். மோகனகிருஷ்ணன் உடன், மனோகரன் சேர்ந்துள்ளார். சிறுமியை, மனோகரன், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி உள்ளான்.சிறுமியை கொலை செய்வதில், மோகனகிருஷ்ணன் உடன், மனோகரனுக்கும் நோக்கம் இருந்துள்ளது. சிறுவனை, கால்வாயில் தள்ளி, மனோகரன் கொலை செய்துள்ளான். கடத்தல், பாலியல் வன்முறை குற்றங்களை மறைப்பதற்காக, இந்த கொலை சம்பவங்களை நடத்தியுள்ளனர்.குழந்தைகளை கடத்துவதற்கு, மோகனகிருஷ்ணன் உடன் சேர்ந்து, மனோகரன் சதி செய்தார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை. பணத்துக்காக, இரண்டு குழந்தைகளையும், மனோகரன் கடத்தினார் என்பதற்கு, ஆதாரம் இல்லை.குழந்தைகளை கடத்தியது, மோகனகிருஷ்ணன். இருவரும், பணம் எதையும் கேட்கவில்லை. எனவே, அதற்கான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படுகிறது. மனோகரன் மீதான, பாலியல் வன்முறை குற்றச்சாட்டை, நாங்கள் உறுதி செய்கிறோம்.சிறுமி, சிறுவனை கொலை செய்தது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கடத்தல், பாலியல் வன்முறை குற்றங்களை மறைப்பதற்காக, குழந்தைகளை கொலை செய்துள்ளனர். எனவே, மகளிர் கோர்ட் விதித்த தண்டனை, உறுதி செய்யப்படுகிறது.


எதற்காக மரண தண்டனை?



ஒரு வழக்கில், மரண தண்டனை தேவையா என்பதற்கான சூழ்நிலையை, இந்த வழக்கைப் பொறுத்தவரை, கீழ்கண்டவாறு பார்க்கலாம்.
*சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது; இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது.
*சிறுமியின் கையை பின்னால் கட்டிபோட்டு, ஒருவர் மாறி ஒருவர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது
*பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய பின், சாணி பவுடரை, பாலில் கலந்து கொடுத்தது.
*சாணி பவுடர் கலந்த பாலை, குழந்தைகள் துப்பிய பின், அவர்கள் சாக மாட்டார்கள் என நினைத்து, கோவைக்கு வெளியில் கொண்டு சென்று, கால்வாயில் தள்ளி விட்டது.
*இரண்டு நாட்கள் கழித்து, உடல்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு குழந்தைகளும், உதவி கிடைக்காமல், தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில், அப்பாவிகளாக இருந்தது.
'சம்பவத்துக்கு, மோகனகிருஷ்ணன் தான் பொறுப்பு; தனக்கு இதில் சம்பந்தமில்லை' என, செஷன்ஸ் நீதிபதிக்கு, மனோகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.போலீஸ் உடன் சேர்ந்து கொண்டு, வீடியோவை பார்த்து, ஒப்புதல் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ததாகவும், குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மனோகரன், தன் குற்ற செயலுக்கு வருந்தியதாக தெரியவில்லை.மனோகரனுக்கு, வயது 23. பத்து வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்து, ஏழு வயது சிறுவனை, கால்வாயில் தள்ளி விட்டு கொலை செய்ததன் மூலம், இந்த சமூகத்துக்கு, மனோகரன், அச்சுறுத்தலாக இருப்பார். எனவே, அரிதான வழக்காக, இதை கருத முடியும்.நாங்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள். சுப்ரீம் கோர்ட் வகுத்த பாதையில் தான், நாங்கள் செல்ல முடியும். பணத்துக்காக, சிறுவனை கடத்தி, கொலை செய்த வழக்கில், சுப்ரீம் கோர்ட், மரண தண்டனை விதித்தது.இந்த வழக்கைப் பொறுத்தவரை, இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, நாங்கள் பின்பற்றுகிறோம்.எனவே, மனோகரனுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை, நாங்கள் உறுதி செய்கிறோம். மனோகரன் தாக்கல் செய்த, அப்பீல் வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.


வழக்கறிஞர்களுக்கு பாராட்டு:



இவ்வழக்கில், கோர்ட் கேட்டுக் கொண்டதன்படி, மனோகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ரகுநாதன் ஆஜரானார். அவருக்கு வயது, 77. மூத்த வழக்கறிஞர் ரகுநாதன், அவருக்கு உதவிய, வழக்கறிஞர் வைரம் ஆகியோரை, நீதிபதிகள் பாராட்டினர். அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், அவரது குழுவினருக்கும், நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.<.dinamalar.com

கருத்துகள் இல்லை: