புதன், 26 மார்ச், 2014

Hitesh bhagat .3 ஆயிரம் கோடி சூதாட்ட தலைவன் வயிற்று வலியால் துடிதுடித்து G H சில் மரணம்


கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மும்பை மட்கா சூதாட்ட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூதாட்ட கும்பல் தலைவன் ஹிதேஷ் பகத், வயிற்று வலியால் அவதிப்பட்டு அரசு மருத்துவ மனையில் இறந்தார். ரூ.3 ஆயிரம் கோடி சூதாட்ட பிசினஸை கைப்பற்ற தன் தாயுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி தந்தையை படுகொலை செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்கோபால் வர்மாவின் இந்திப் படம் கணக்காய் விரிகிறது ஹிதேஷ் பகத்தின் மட்கா சூதாட்ட பின்னணி.
3-வது தலைமுறை சூதாட்டம்
ஹிதேஷ் ஏதோ யதேச்சையாக மட்கா சூதாட்ட பிசினஸுக்குள் வந்து
விழவில்லை. தாத்தா, அப்பா என்று மூன்று தலைமுறையாக வழிவழியாக வந்த பிசினஸ். தாத்தா கல்யாண்ஜி பகத், குஜராத்தின் கட்ச் பகுதி ரடாடியா கிராமத்தைச் சேர்ந்தவர்.
பிழைப்பு தேடி 1941-ல் மும்பை வந்தவர். ஆரம்பத்தில் ரோட்டோரத்தில் மசாலா சாமான் கடை வைத்தார். நாளாவட்டத்தில் ஒர்லி பகுதியில் மளிகைக் கடை போட்டவர், கூடவே ‘மட்கா சூதாட்ட’ பிசினஸை யும் ஆரம்பித்தார். ஆண்டுகள் ஆகஆக மட்கா சூதாட்டம் களைகட்டியது.
பல ஆயிரங்கள் புரண்டுகொண்டிருந்த பிசினஸை கல்யாண்ஜி பகத்தின் மகன் சுரேஷ் பகத் கையில் எடுத்தார். லட்சங்கள் புரளத் தொடங்கின. 1979-ல் ஜெயா செட்டாவை கல்யாணம் செய்தார்.
அந்த வீட்டுக்கு ‘ஜெயலட்சுமி’ வந்த அதிர்ஷ்டம்.. மட்கா வசூல் லட்சங்களில் இருந்து கோடிக ளாக மாறின. லைஃப் பார்ட்னர் ஜெயா, பிசினஸ் பார்ட்னராகவும் மாறிப்போனார். அதற்கிடையில், சூதாட்டத்தில் திளைத்த அந்த குடும்பத்தில் அவர்களது வாரிசாகப் பிறந்தார் முதல் பாராவில் பார்த்த ஹிதேஷ் பகத்.
அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்பதால் அவரும் மட்கா சூதாட்டத்தில் கலக்க ஆரம்பித்தார். கூடவே போதைக் கடத்தல் உள்ளிட்ட வையும் சேர்ந்து கொண்டது. பல வழக்குகளில் அப்பா, மகன் இரண்டு பேருமே இருப்பார்கள்.
அப்பா மகன் மோதல்
இதற்கிடையில், சுஹாஸ் ரோக் என்பவனுடன் ஜெயா செட்டாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சுரேஷ் பகத்துக்கு சந்தேகம் வந்தது. அவளை டைவர்ஸ் செய்தார். பல ஆயிரம் கோடிகள் புழங்கும் பிசினஸில் அப்பா - மகன் இடையே சிற்சில மோதல்களும் ஆரம்பித்தன. 2008-ம் ஆண்டு. தொழில் தகராறு வலுத்த காலகட்டம்.
போதைப் பொருள் தொடர்பான வழக்கில் அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு தன் கூட்டாளிகளுடன் ஸ்கார்பியோ வில் மும்பை திரும்பிக்கொண் டிருந்தார் சுரேஷ் பகத். வழியில் பயங்கர வேகத்தில் வந்த லாரி மோதியதில் கார் அப்பளமாக நசுங்க.. காரில் இருந்த சுரேஷ் பகத், அவரது உதவியாளர், வக்கீல் உள்பட அனைவரும் பலியாயினர். ‘‘அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியதில்..’’ என்று வழக்கம்போல வழக்கு போட்டனர் போலீஸார்.
எந்த வழக்கில் ஆஜராகிவிட்டு வரும்போது சுரேஷ் பகத் இறந் தாரோ, அதே வழக்கில் மகன் ஹிதேஷும் ஆஜராகியிருக்க வேண்டும்.
ஆனால், உடம்பு சரி யில்லை என்று காரணம் கூறி ஆஜராவதில் இருந்து 2 நாள் முன்பு விலக்கு கேட்டிருந்த ஹிதேஷ், ஹாங்காங் கிளம்பிப் போய்விட்டார். இதுவும் வேறு சில சம்பவங்களும் லாரி மோதிய விபத்தில் சந்தேகங்களைக் கிளப்ப.. அது திட்டமிட்ட கொலை என்பது ஊர்ஜிதமானது.
அவரது ரூ.3 ஆயிரம் கோடி மட்கா சூதாட்ட பிசினஸை கைப்பற்றுவதற்காக ஹிதேஷும் தாய் ஜெயா செட்டாவும் சேர்ந்து கூலிப்படை வைத்து லாரி ஏற்றிக் கொன்றிருக்கின்றனர் என்று ஊர்ஜிதமானது. அவர்கள் உள்பட சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் குற்ற வாளிகள் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி அறி வித்தது.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆபரேஷனால் வந்த வினை
ஹிதேஷுக்கு அவ்வப்போது வயிற்று வலி வரும். இதற்கு முக்கியக் காரணம் 2008-ல் அவர் செய்துகொண்ட லிப்போ சக் ஷன் ஆபரேஷன் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு 110 கிலோ எடை இருந்த அவர் பின்னர் எடை குறைந்து, தற்போது 65 கிலோ தான் இருந்தார் என கூறப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி அவருக்கு வயிற்று வலி கடுமையானது. கோலாப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தார்.
‘‘லிப்போ சக் ஷன் செய்து கொண்ட நேரத்தில் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார். தந்தை சுரேஷ் கொலை செய்யப்பட்ட சமயத்தில் சுமார் ஒரு மாதம் வரை ஹிதேஷ் தலைமறைவாக இருந்தார். அப்போது சரியாக சாப்பிடவில்லை. அப்போதிருந்தே வயிற்று வலி ஆரம்பித்துவிட்டது. 2010-ல் அவருக்கு காசநோயும் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதம் முன்பு வயிற்று வலியால் அதிகம் துடித்தார்.
சரியாக சாப்பிடக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அது மரணம் வரை கொண்டுபோய்விட்டுள்ளது’’ என்கிறது சிறை மற்றும் மருத்துவ வட்டாரங்கள். ரூ.3 ஆயிரம் கோடி சூதாட்ட பிசினஸை கைப்பற்றும் வெறித்தனமான ஆசையால் அப்பாவையே கொலை செய்த கும்பல் தலைவன், சோறுகூட சாப்பிட முடியாமல் அரசு மருத்துவமனையில் இறந்தது மும்பை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
1980, 90-களில் அமர்க்களமாக நடந்தது இந்த சூதாட்டம். தினமும் ரூ.15 கோடி வரை புழங்கும். பின்னர் போலீஸ் நடவடிக்கை காரணமாக ‘மட்கா ராஜாக்கள்’ குஜராத், ராஜஸ்தான் என்று போய்விட்டனர். பங்குச் சந்தை, கிரிக்கெட் என சூதாட்டத்துக்கான களம் விரிந்தாலும் காட்டனை வைத்து நடத்தப்பட்ட ‘மட்கா’ சூதாட்டமும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துவந்தது.
அதென்ன மட்கா சூதாட்டம்: நியூயார்க் மொத்தவிலைச் சந்தையில் காட்டன் பேல் என்ன விலை போகிறது என்பதற்கு பெட் வைத்து நடத்தப்படும் சூதாட்டம்தான் ‘மட்கா’. மும்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் காட்டன் மில்கள் அதிகம் என்பதால், அங்கு வேலை செய்யும் கடைமட்டத் தொழிலாளர்கள் முதல் டாப் ஆபீசர்கள் வரை பல தரப்பினரும் பெட் கட்டக் குவிவார்கள்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: