புதன், 4 டிசம்பர், 2013

விண்வெளி ஆராய்ச்சி: இந்தியாவுடன் இணைய சீனா தயார்


பீஜிங்:விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது.
சந்திரனில் கால்பதித்து ஆய்வு நடத்த சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 நேற்று அதிகாலை 56.4 மீட்டர் உயரமுள்ள லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பூமியிலிருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தைத் துவங்கியதற்கு மறுநாள் சீனாவின் சாங் இ-3 விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து, விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீன விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திர விண்கலத் திட்டத்தின் தலைமைத் துணை கமாண்டர் லீ பென்ஜாங் இது குறித்து கூறுகையில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி போட்டி நோக்கத்தோடு நாங்கள் செயல்படவி்ல்லை. இது தொடர்பாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும். விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்' அதனை மேம்படுத்த வேண்டும் என்றார்.

சாங் இ-3 விண்கலம், பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி உள்ளளே சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்கலம், டிசம்பர் மாத மத்தியில் சந்திரனில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி துறையில் இந்தியாவின் முத்திரை:



இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. கடைசியாக, நவ., 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில், 'மங்கள்யான்' செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்' பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும்.
இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்' செயற்கைக்கோள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் தான் சந்திரனில் தரையிறங்கும் விண்கலத்தை அனுப்பியுள்ளன. தற்போது அதனுடன் சீனாவும் இணைந்துள்ளது.மங்கள்யான் விண்கலம் வெற்றியால் சீனா, இந்தியாவோடு இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.dinamalar.com

கருத்துகள் இல்லை: