செவ்வாய், 4 ஜூன், 2013

Herbalife நிறுவனர் மார்க் ஹியூக்ஸ் ! மோசடி தொழில், மர்ம மரணம் !

04-herbalife-5எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
"ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !"
 சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.
  • “சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.
எனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.
04-herbalife-1என்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.
“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.
“ஐயையோ என்னாங்க எதுனா கேன்சாரா…?” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.
“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”
அணுகுண்டுகளாக வீசிக் கொண்டிருந்த வரை அவசரமாக இடைமறித்தேன்.
“இல்லங்க, இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். நீங்க என்னென்னவோ சொல்றீங்களே?”
“சார் உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்? அதனாலே தான் சொல்றேன் ஒரு இலவச பரிசோதனை செய்துக்கங்க. நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு சாப்பிடாம வெறும் வயிறோட இந்த முகவரிக்கு வாங்க. ஆரோக்கியமா வாழ்றது எப்படின்னு இலவச ஆலோசனைகள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு தானே சார் குறைவற்ற செல்வம்?”
மார்க் ஹியூக்ஸ்
ஹெர்பாலைஃப் நிறுவனர் மார்க் ஹியூக்ஸ் ! மோசடி தொழில், மர்ம மரணம் !
பேசிக் கொண்டே கையில் முகவரி அட்டையைத் திணித்தார். அதில் “Turning Point” என்கிற பெயரும் தொடர்பு எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. நாள் முழுவதும் குழப்பம். இணையத்தில் டர்னிங் பாயின்ட் என்று தேடியதில் உருப்படியான தகவல்கள் ஏதும் தேறவில்லை. மற்ற எல்லாவற்றையும் விட “ஹார்ட் அட்டாக்’ என்பது மட்டும் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்ததால், “சரி, போய் என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே” என்கிற முடிவுக்கு வந்தேன்.
மறுநாள் காலை. திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போல் தேடியலைந்து அந்த முகவரியைக் கண்டு பிடித்தேன். அந்த சந்து முக்கில் இருந்ததே மொத்தம் பத்து கட்டிடங்கள் தான். எனினும், யாருக்குமே “டர்னிங் பாயின்ட்’ என்கிற பெயரே தெரியவில்லை. இவர்களும் பெயர்ப் பலகை ஏதும் வைத்திருக்கவில்லை. கடைசியில் பார்த்தால், அவர்களது அலுவலக வாசலிலேயே பதினைந்து நிமிடங்களாய் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் விசாரித்திருக்கிறேன்.
உள்ளே அந்தப் பெண் இருந்தார். தனது பெயரை மாலா என்று அறிமுகம் செய்து கொண்டார்.
அது இரட்டைப் படுக்கையறை வசதி கொண்ட வீடு. வரவேற்பறையில் வண்ண வண்ணப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மனித உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் பாகங்களை விளக்கும் பெரிய போஸ்டர் மற்றும் இயற்கை உணவின் நன்மைகளை விவரிக்கும் போஸ்டர்களோடு சாய்னா நெஹ்வால், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்வின் திருப்புமுனையே “டர்னிங் பாயின்ட்’ தான் என்று சொல்லிச் சிரிக்கும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
வரவேற்பறையில் என்னோடு சேர்த்து மொத்தம் எட்டு பேர் இருந்தனர். என்னைத் தவிர மற்றவர்கள் நடுத்தர வயதினர். அவர்கள் முகங்களில் மரண பீதி. அதில் வயதானவராகத் தெரிந்தவரிடம் இளைஞர் ஒருவர் தீவிரமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தார்,
“சார் இந்தப் பொடியை சரியா மூன்று ஸ்பூன் எடுத்து இந்த டப்பாவுல போடுங்க. கொதிச்ச தண்ணீரை சரியா ஆறு நிமிஷம் ஆறவிட்டபின் உள்ளே ஊற்றுங்க. சரியா 100 மில்லி ஊற்றணும். ஊற்றின பின், இதோ இப்படி பிடிச்சிக்கங்க. அப்டியே கரகரகரன்னு குலுக்கணும். சரியா 60 செக்கண்ட் குலுக்கணும். வாட்ச் பார்த்துக்கிட்டே குலுக்குங்க. மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஒரே மூச்சில் குடிக்கணும். குடிச்சதும் அப்டியே ஆடாம அசையாம அஞ்சி நிமிசம் ஒக்காந்துடணும். சரியா பைவ் மினிட்ஸ்.” வேதியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைந்து விட்டதைப் போலிருந்தது.
சிறிது நேரத்தில் மாலா தன்னோடு ஒரு இளைஞரை அழைத்து வந்தார். “சார், இவர் பேர் பிலால். இவரு உங்களுக்கு சொல்லுவார்’ என்றவாறே எதிரே அமர்ந்தனர். அந்த இளைஞர் பேசத் துவங்கினார்.
“சார், இந்த ப்ராடக்ட் பயன்படுத்தும் முன் எனக்கு உடல் பருமன் பிரச்சினை இருந்தது. அது போக, சைனஸ், வீசிங், அல்சர் கூட இருந்தது.. இப்ப ஒரு வருசமாச்சி… எல்லாம் சரி ஆய்டிச்சி” என்று துவங்கியவர், ‘பிராடக்ட்’ என்று அழைக்கப்பட்ட கந்தாயம் பற்றி பலவாறாக சொல்லிக் கொண்டேயிருந்தார். “மேரு மலையை மத்தாக கொண்டு வாசுகியைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த தங்கக்குடமொன்றில் இருந்து எடுத்த பொருள்” என்னும் அளவுக்கு அவரால் விதந்தோதப்பட்ட ‘பிராடக்ட்’ இன்னும் என் கண்களுக்கு தரிசனம் கொடுக்கவில்லை என்பதை மாலாவுக்கு நினைவூட்டினேன்.
04-herbalife-3“அவசரப்படாதீங்க அதை உள்ளே இருக்கிற ஆலோசகர் காட்டுவார்” என்று பூடகமாகவே பதில் சொன்னார்..
“ஆலோசகரா…. அதுக்கு காசு கட்ட வேண்டுமோ” என் கவலை எனக்கு.
“சீச்சீ அதெல்லாம் இலவசம் தான்” – ‘சீய்ய்ய்… அற்பனே’ என்கிற தொனியில் பதில் வந்து விழுந்தது.
தொடர்ந்து அவரே உள்ளறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே ‘கன்சல்டன்ட்’ எனப்பட்டவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கையிலிருந்த கோப்பை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சார், அது உங்க ரிப்போர்ட் தான். இவரு தான் கன்சல்டன்ட் குமார்” காதருகே பிலாலின் குரல் கிசுகிசுத்தது. ‘இங்கே என்னா சத்தம்….’ என்பதைப் போல் குமார் தலையை உயர்த்தி முறைத்தார். “ஹி..ஹி..ஹி.. சாரி சார்” பிலால் பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு அகன்றார்.
குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஆழ்ந்த யோசனையில் குமாரும், ஆழ்ந்த குழப்பத்தில் நானும் மட்டும் இருந்தோம். ஐந்து நிமிடங்கள் பேச்சற்ற மெளனத்தில் கழிந்தது. எனது ‘ரிப்போர்ட்’ என்று சொல்லப்பட்ட கோப்பை அவர் பல கோணங்களில் உற்றுப் பார்த்தார். இடையிடையே தன் முன்னிருந்த மடிக்கணினியில் எதையோ சரிபார்த்துக் கொண்டார். சரியாக முன்னூற்றி இரண்டாவது செகண்டில்,
“கொஞ்சம் சிக்கல் தான்” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் என்னிடம் சொன்னார்.
“என்ன சொல்றீங்க சார்” எனது இதயத் துடிப்பை என்னாலேயே கேட்க முடிந்தது.
04-herbalife-4“உங்க BMI 29. அதாவது இப்ப நீங்க ஓபிஸ். ஒபிஸிட்டின்றது வெறுமனே பருமன் என்று மட்டும் புரிஞ்சிக்கக் கூடாது. இப்பல்லாம் பாருங்க சின்ன வயசுலயே கேன்சர் வருது, ஹார்ட் அட்டாக் வருது, இன்னும் சிலர் பார்த்தீங்கன்னா என்ன காரணம்னு தெரியாமலே கூட செத்துப் போயிடறாங்க. எதனாலேன்னு யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாதுங்க”
“கரெக்ட். யாருக்கும் தெரியாது. ஆனால், எதனாலேன்னு எங்களுக்குத் தெரியும். அதைச் சொல்லித் தரத் தான் உங்கள இங்கே வரவழைச்சிருக்கோம்” அவர் பேசிக் கொண்டிருந்த போது பிலால் கண்ணாடிக் கோப்பையில் ப்ரெளன் நிற திரவம் ஒன்றை எடுத்து வந்தார். “முதல்ல இதைக் குடிங்க”.
எடுத்து வாயில் வைத்தேன். கழு நீரின் சுவையா, கஷாயத்தின் சுவையா என்று பிரித்தறிய முடியாத ஒரு சுவை உச்சி மண்டை வரை ஊடுருவித் தாக்கியது. எனது முகச் சுளிப்பைக் கண்டவர், “ஊட்டச்சத்து பானம் தான், பயப்பட ஒன்னுமில்லை” என்று ஊக்கப்படுத்தினார். மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரே வீச்சில் குடித்தேன்.
“வெரிகுட், இப்ப நீங்க குடிச்சீங்களே இது அமேசான் காடுகள்ல மட்டுமே கிடைக்க கூடிய மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷமான பானம்” என்றவர் தொடர்ந்தார், “இன்றைக்கு நாம் சாப்பிடுவதெல்லாம் சரிவிகிதமான போஷாக்கு உணவு கிடையாது. அதே மாதிரி எதுல பார்த்தாலும் பூச்சிக் கொல்லி மருந்தப் போட்டு தயாரிக்கிறான். உடம்புக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காததோடு பலவகையான நச்சுக்களும் உடம்பில் சேர்ந்து கொண்டே போகிறது. இதனால பலவிதமான நோய்கள் உடம்பில் உருவாவதோடு உடல் எடையும் கண்டபடி அதிகரிச்சிட்டே போகுது. இதுல, எங்களோட திட்டம் என்னான்னா, முதல்ல Cleansing regime (தூய்மைப்படுத்தும் செயல்திட்டம்). முதல் வாரத்துக்கு உங்களோட காலை உணவுக்கு பதிலாக இந்த பானத்தை மட்டும் குடிக்கணும்”
எனக்கு பிலால் கொடுத்த பானத்தைக் குடித்ததில் இருந்தே கொஞ்சம் போதையாகவும் தள்ளாட்டமாகவும் இருந்தது. “சார், முதல்ல உங்க கம்பெனி பேர் என்னாங்க?”
“ஹெர்பாலைஃப் (Herbalife). சரி உங்களுக்கு கார்டு போட்டு விடலாமா? முதல் தவணையா ஐந்தாயிரம் ரூபாய் கட்டி விடுங்க” அட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு எதிர்பார்ப்போடு என்னைப் பார்த்தார். லேசான தள்ளாட்டமும் தடுமாற்றமுமாக இருந்தாலும் உடனடியாக ஓடிப் போய் விடவேண்டும் என்று தோன்றியது.
“கார்டு போட வேண்டாம். நான் வீட்டில் கேட்டு விட்டு வருகிறேன்” என்றேன்.
“ம்ம்ம்.. நீங்க நம்பலைன்னு தெரியுது. எங்களோட ரிசல்ட்ஸ் உத்திரவாதமானது. வேணும்னா ஏற்கனவே இதால பயனடைஞ்சவங்களை கேட்டுப் பாருங்களேன்” என்று என்னிடம் சொன்னவர், “மாலா, பிலால் இங்க வாங்க” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தார். எந்த விளக்கத்துக்கும் அப்போதைக்கு நான் தயாராக இல்லை.
“இல்லைங்க. நான் கொஞ்சம் விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்றவாறே கிளம்பினேன். இதற்குள் மாலாவும், பிலாலும் ஏதோ விளக்குவதற்காக வர, கிட்டத்தட்ட தப்பித்து ஓட வேண்டியதாகி விட்டது.
முன்பு இணையத்தில் ‘Turning Point’ என்று தேடியதில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இப்போது அவர்கள் நிறுவனத்தின் உண்மையான பெயரான Herbalife என்பதை இணையத்தில் தேடியதும் தகவல்களாக வந்து குவியத் துவங்கின. இதோ ஒரு மோசடியின் வரலாறைக் கேளுங்கள்.
ஹெர்பாலைஃப், 1980-ம் வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் துவங்கப்பட்டது. தனது தாய் ஜோன்னா உடற் பருமனால் அவதிக்குள்ளானதை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததாகவும், இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறியில் தான் எடைக் குறைப்புக்கான ஊட்டச்சத்து பானத்தை தாம் கண்டு பிடித்ததாகவும் ஹெர்பாலைஃபின் நிறுவனர் மார்க் ஹூயுக்ஸ் சொல்லிக் கொண்டார். உடல் எடை குறைவு மாத்திரமின்றி, பொதுவான உடல் நலனுக்கும் தனது தயாரிப்புகள் உகந்தவை என்று சந்தைப்படுத்தினார்.
ஒரு பக்கம் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரிடையே பொதுவாக காணப்பட்ட உடற்பருமன் பிரச்சினை மார்க்கின் நிறுவனத்தை வெகு சீக்கிரத்தில் பிரபலப்படுத்தியது. இன்னொரு பக்கம் மார்க் தனது பொருட்களை சந்தைப்படுத்த வழக்கமான வழிமுறைகளைக் கையாளவில்லை. நேரடிச் சந்தைப்படுத்தும் முறை என்று சொல்லப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையைக் கையாள்கிறார். ரஷ்யர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெயராலேயே அழைக்கப்படும் பொன்ஸி திட்டம் அல்லது பிரமிட் மார்க்கெட்டிங் முறை தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறையின் கீழ், ஒரு நிறுவனத்தின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமென்றால் அதில் கட்டணம் கட்டி உறுப்பினராகச் சேர வேண்டும். உறுப்பினராகச் சேர்வோர் தமக்குக் கீழே சிலரைச் சேர்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கீழ் சிலரைச் சேர்க்க வேண்டும். இப்படி இந்த முக்கோண இணைப்பு வளர்ந்து கொண்டே போகும். இந்த முக்கோண அமைப்பில் ஒருவருக்குக் கீழ் நான்கு அல்லது ஐந்து வரிசைகளில் நபர்கள் சேர்ந்த பின், முதலாமவருக்கு கமிஷன் கிடைக்கத் துவங்கும். அதாவது, கீழே சேர்பவர்கள் கட்டும் கட்டணத்திலிருந்து ஒரு பெரும் பகுதி நிறுவனத்திற்கும், ஒரு சிறிய பகுதி வரிசையின் மேலே இருப்பவர்களுக்கும் சேரும்.
எம்.எல்.எம் நிறுவனங்கள் சொல்வது போல் இந்த பிரமிட் வளர்ச்சி தொடர்ந்து சாத்தியப்படாது என்பதே உண்மை. ஏனெனில், ஒருவர் தனக்குக் கீழ் நான்கு பேர்களைச் சேர்க்கிறார் என்றால், பதினேழாவது வரிசை வரும் போது இந்த முக்கோணத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும். இது இன்றைய உலக மக்கள் தொகையை விட அதிகம். எம்.எல்.எம் நிறுவனம் ஒன்றின் கணக்குகளை ஆராய்ந்ததில் அந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களில் 99.7 சதவீதம் பேருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்). இந்நிறுவனத்தின் தயாரிப்பான பார்முலா 1 என்கிற பானம் வருடாந்திரம் சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு விற்பனையாகிறது. நேரடி விற்பனை என்கிற வழிமுறையில் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யாமல் தனிநபர்களிடம் விளம்பரங்கள் செய்ததன் மூலம் மட்டுமே ஹெர்பாலைஃப் நிறுவனம் அமெரிக்காவில் நைக் நிறுவனத்திற்கு இணையாக மக்களிடம் அறிமுகம் பெற்றுள்ளது.
இவ்வாறு விளம்பரங்கள் செய்யப்படும் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் தடைசெய்யப்பட்ட நச்சு மூலப் பொருட்களான கூக்குவா, கோம்ப்ரி மற்றும் காராஸ்கா உள்ளிட்டவை கலந்துள்ளன. தொடர்ச்சியாக இந்த பானங்களை உட்கொள்வோருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பானங்களை உட்கொண்டவர்களுக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
ஹெர்பாலைஃப் நிறுவனம் சந்தைப்படுத்தும் பானங்கள் மற்றும் பிற பொருட்களை உணவுப் பொருட்களாக கணக்குக் காட்டுவதன் மூலம், பல்வேறு நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு வாரியங்களின் பிடியில் இருந்து நழுவிக் கொள்வது, உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இரசாயனப் பொருட்களின் பட்டியலில் இல்லாத வேதிப் பொருட்கள் இருந்தாலும் அவற்றுக்கான சோதனைகளில் இருந்து தப்புவது, இன்னும் சட்ட நடைமுறைகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட முறைகளிலேயே தொடர்ந்து சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.
தற்போது பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது பிராண்டுகளில் ஏதேனும் ஒன்று தடை செய்யப்பட்டால் அதையே வேறு பெயரில் உடனடியாக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் அரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவுகினறது அந்நிறுவனம். இந்தியாவில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே இருக்கும் சட்ட நடைமுறைகள் எண்ணற்ற ஓட்டைகளோடு இருக்கும் நிலையில், மக்கள் இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு இவர்களைச் சந்திக்க நேரும் போது எதிர்த்துப் போராடவும் முன்வர வேண்டும்.
மாறி வரும் வேகமான வாழ்க்கைச் சூழலில் அதிகரித்து வரும் நோய்கள், இந்நோய்கள் குறித்து மக்களின் பயம், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் இருக்கும் ஆர்வம் என்று சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனது லாபவெறிக்கு பயன்படுத்திக் கொண்டே இது போன்ற நிறுவனங்கள் வளர்கின்றன..
உலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது, நடுத்தர வர்க்கத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என்ற பெயரில் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். சில்லறைப் பிரச்சினைகளுக்கும் அஞ்சுகிறார்கள். இந்த இடைவெளிக்குள் மோசடியான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி நுழைகின்றன ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதற்கும் முறையான உடற்பயிற்சியும், ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும், உடல் உழைப்பில் ஈடுபடுவதும், சரிவிகித உணவுத் திட்டங்களைப் பின்பற்றுவதுமே சரியான வழி. இதற்கு வேறு குறுக்குவழிகளைத் தேடினால், ஹெர்பாலைஃப் போன்ற மோசடி கும்பலின் வலையில் தான் விழ வேண்டியிருக்கும்.
- மாடசாமி
பின்குறிப்பு :
ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மோசடியான வணிக நடைமுறை மட்டுமே காரணமல்ல. அதன் நிறுவனரான மார்க்கைச் சுற்றி கவனமாக பின்னப்பட்டிருந்த வழிபாட்டுக்குரிய ஆளுமை (personality cult) குறித்த பிம்பங்களும் இதில் முக்கிய பங்காற்றியது. ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும் இயற்கை உணவுகள் உட்கொள்வது குறித்தும் அவர் நடத்திய கருத்தரங்கங்களும் உரைகளும் பிரபலமானவை. மார்க் தனது 44-வது வயதில் அதீதமாக போதைப் பொருள் உட்கொண்டதாலும் குடிப்பழக்கத்தினாலும் இறந்து போனார்.vinavu.com

கருத்துகள் இல்லை: