வியாழன், 6 ஜூன், 2013

இந்திய கிரிகெட்டு வாரியமே உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பு

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 4  
ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வயது 85. முதல் 60 ஆண்டுகளாக பார்க்காத ஊழல்களும், சூதாட்டங்களும், சதித் திட்டங்களும், மர்மங்களும் கடந்த 25 ஆண்டுகளில் வாரியத்துக்குள் எப்படி புகுந்தன?
கடந்த 30 ஆண்டுகளில் மூன்று பெரும் தலைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஜக்மோகன் டால்மியா அணி, மகாராஷ்டிரா சங்கத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் அணி, இப்போது ஆதிக்கம் செலுத்தும் சென்னை கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய சிமென்ட்ஸ் முதலாளியுமான என் சீனிவாசன் ஆகியோர் அவர்கள்.
இந்திய கிரிக்கெட்டை பணம் கொட்டும் மரமாக மாற்றி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலகத்திலேயே பணக்கார விளையாட்டு அமைப்பாக மாற்றிய பெருமை இந்த முதலாளிகளைச் சேரும் என்று விளையாட்டு மற்றும் வர்த்தக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள்.

உண்மைதான்.
இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ 3,308 கோடி. 2011-12ம் ஆண்டில் ரூ 1,168 கோடி வருமானத்தில் நிகர லாபம் ரூ 385 கோடி. கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்சின் பங்குச் சந்தை மதிப்பு ரூ 2,200 கோடிதான் என்பதையும் இந்தியா சிமென்ட்சின் ஆண்டு லாபம் ரூ 100 கோடி மட்டுமே என்பதையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
ஐபிஎல் வந்ததால்தான் ஊழல் வந்தது, அதற்கு முன்பு ஒரு நாள் ஆட்டம் இருந்த போது சூதாட்டமும், ஏமாற்றலும் இவ்வளவு பெரிதாக இல்லை, டெஸ்ட் போட்டிகளின் காலத்திலோ எல்லாமே வெள்ளையும் சொள்ளையும்தான் என்று மலரும் நினைவுகளில் புலம்பும் அம்பிகளும், முன்னாள் ஆட்டக்காரர்களும் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, ஆனால் அது முழு உண்மை அல்ல.
pepsi-mainஐபிஎல் போட்டிகளுக்கு பெயரிடும் உரிமையை பெப்ஸி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ரூ 395 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. கோக்கோ கோலா நிறுவனத்துடன் அது பகிர்ந்து கொள்ளும் ரூ 6,000 கோடி மதிப்பிலான இந்திய குளிர்பானங்கள் சந்தை அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு டி-20 கிரிக்கெட் உருவாவதற்கு முன்பு இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த இந்திய சந்தை மதிப்பு ரூ 0.
2008 முதல் 2012-வரை ஐபிஎல் போட்டிகளுக்கு பெயர் சூட்டும் உரிமையை ரூ 250 கோடி கட்டி வாங்கியிருந்த டிஎல்எஃப், டில்லியில் மட்டும் செயல்பட்டு வந்து 1990-களுக்குப் பிறகான புதிய இந்தியாவில் வேகமாக வளர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். அதன் சொத்துக்களின் இப்போதைய மொத்த மதிப்பு சுமார் ரூ 30,000 கோடி.
இந்திய கிரிக்கெட் அணியுடன் தன் பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் சஹாரா இந்தியா புதிய தாராளமய கொள்கைகளின் கீழ் நிதி நிறுவனம் நடத்தி மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் நிறுவனம். மக்களிடம் திரட்டிய ரூ 17,700 கோடி பணத்தை திரும்பிக் கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு சஹாராவின் மொத்த வருமானம் ரூ 73,000 கோடியாம்.
விளம்பரதாரர்களில் முக்கியமான ஜூஜூ புகழ் வோடஃபோன் 2007-ம் ஆண்டு சுமார் ரூ 45,000 கோடி விலை கொடுத்து ஹட்சிசன் நிறுவனத்திடமிருந்து 1990-களில் உருவாக்கப்பட்ட செல்போன் சேவை நிறுவனத்தை வாங்கியது. இந்திய சந்தையில் அதன் 14 கோடி வாடிக்கையாளர்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஆண்டு வருமானம் ஈட்டுகிறது.
மற்ற புரவலர்களான யெஸ் பேங்க், ரெயின் டிராப்ஸ் பாஸ்மதி, நோய்டா பன்னாட்டு பல்கலைக் கழகம், அமிட்டி பல்கலைக் கழகம், லிவ்-இன்-ஜீன்ஸ், ஷெல்ட்ராக்ஸ், சன்ஸ்கார் ஸ்கூல், சாம்சங், பானசோனிக், கார்பன் மொபைல்ஸ், டாடா போட்டான், காட்பரீஸ், மெக்டொனால்ட்ஸ், ஸ்டார் இந்தியா, பெர்கர் பெயின்ட்ஸ், ஏர்டெல், ரோஸ் பள்ளத்தாக்கு குழுமம் போன்றவர்களின் சேவைகளும் 1990-களுக்குப் பிறகு இந்தியாவில் உதித்தவைதான்.
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையை இலக்காக செயல்படும் இந்த நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு மேடையாக விளங்கிய ஒரு நாள் கிரிக்கெட் வளர்ந்து, டி-20 கிரிக்கெட்டாக மலர்ந்திருக்கிறது. ஐபிஎல் 2013 போட்டிகளுக்கான ஒளிபரப்பின் போது 10 செகண்டுகளுக்கான விளம்பரக் கட்டணம் ரூ 4 – 4.5 லட்சமாக உயர்ந்திருந்தது. பிக் பாஸ், கோடீஸ்வரன் போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விளம்பர கட்டணம் 10 செகண்டுகளுக்கு ரூ 1-1.25 லட்சம் வரைதான் என்பதிலிருந்து ஐபிஎல் போட்டிகளின் போது விளம்பரப்படுத்துவதன் மதிப்பை புரிந்து கொள்ளலாம்.
India-Cements-Gurunath-Meiyappanஆட்டக்காரர்களின் உடையின் முன் மார்பு, வலது மேல் மார்பு, பயன்படுத்தும் கையின் புஜம், பயன்படுத்தாத கையின் புஜம், சட்டையின் பின்பக்கம், தொப்பியில், தலைகவசத்தின் முன், பின் பக்கம், கால் பகுதிகள் என்று தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து விளம்பரம் செய்ய இடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர் ஐபிஎல் முதலாளிகள். விளையாட்டு வீரர்கள் நடமாடும் விளம்பரத் தட்டிகளாக ஓடி விளையாடுகின்றனர்.
தோனி வாலா சிமென்ட் என்று வட இந்தியாவின் சிறு நகரங்களில் கூட இந்தியா சிமென்ட்ஸ் தனது சந்தையை விரிவுபடுத்த முடிகிறது. இதே போன்று இந்தியாவின் எரிசக்தி துறையில் கொள்ளை அடிக்கும் ரிலையன்ஸ், சாராய வியாபாரி விஜய் மல்லையா போன்றவர்கள் கிரிக்கெட் என்ற புனிதத்துடன் தம்மை இணைத்துக் கொண்டு தமது தொழிலை மக்களிடம் விற்க ஐபிஎல் உதவுகிறது.
இந்த புனித குளியலுக்கும், அதன் மூலம் சந்தை விரிவாக்கங்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் கிரிக்கெட்டுக்கு முதலாளிகள் தாம் சந்தையில் மக்களிடமிருந்து அடிக்கும் லாப வேட்டையில் ஒரு பகுதியை விளம்பர கட்டணங்களாக கிள்ளித் தருகிறார்கள். அதை தொலைக்காட்சி நிறுவனங்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐபிஎல் அணி முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இன்னாள், முன்னாள் வீரர்களுக்கு சில சில்லறை காசுகளை வீசி எறிந்து அவர்களது விசுவாசத்தை உறுதி கொள்கிறார்கள்.
எனவே ஐபிஎல் பண வெள்ளத்தையும் ஊழலையும் உருவாக்கியது என்பதை விட பண வெள்ளமும் ஊழலும் ஐபிஎல்லை உருவாக்கின என்பதே சரி. அதை விட குறைந்த மட்டத்திலான ஊழல் ஒரு நாள் கிரிக்கெட்டையும், வேறு தளத்திலான சுரண்டல் டெஸ்ட் கிரிக்கெட்டையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தன என்பதுதான் வரலாறு.
இப்படி முதலாளிகள் இடையே பெருகி ஓடும் பண வெள்ளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சில துளிகள் மட்டுமே தெறிக்கின்றன. தாமும் சில குவளைகள் மொண்டு குடிப்பதற்கு கிரிக்கெட் வீரர்களுக்கு வழி காட்டுபவர்கள் சூதாட்டத் தரகர்கள். திரைமறைவு உலக வர்த்தகத்தில் புழங்கும் பணப் பரிமாற்றங்களுக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த சூதாட்ட விபரங்கள் அவ்வப்போது கசிந்து ஊழலாக வெளிவருகின்றன. மேலும் ஐபிஎல்லின் சட்டபூர்வ வருமான மதிப்பை விட ஐபிஎல்லின் திரை மறைவு சூதாட்ட வர்த்தகம் விஞ்சிவிடும் என்கிறார்கள். எனவே இந்த வருமானத்தை முதலாளிகள் இழக்க விரும்பமாட்டார்கள். அதற்காக அவர்களுக்குள் நடக்கும் போட்டியே இத்தகைய ஊழல் செய்திகளை கொஞ்சம் வெளியே கொண்டு வருகின்றன.
அத்தகைய ஊழல்கள் கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பை குறைத்து விடாமல் இருக்க சர்வதேச கிரிக்கெட் குழு ஊழல் தடுப்பு குழு, வீரர்களுக்கு எச்சரிக்கை என்று ரசிகர்களின் மற்றும் விளம்பரதார நிறுவனங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.
ஆனால் ஐபிஎல் 2013 தொடர்பான சூதாட்டங்களில் ஈடுபட்ட வீரர்கள், அணிகள் பற்றி விசாரணையின் முடிவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத பல் இல்லாத அமைப்பாகவே இருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அது வழங்கக் கூடிய அதிகபட்ச தண்டனை, வாரியம் நடத்தும் போட்டிகளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதற்கும் ஒதுக்கி வைக்கப்படுதல், வாரியத்தின் பதவிகள் கிடைக்காமல் செய்வது இவ்வளவுதான்.
காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சந்திலா ஆகிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மீதும், சூதாடுதல், ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், குதிரை பந்தயம் முதலான திறமையின் அடிப்படையில் நடக்கும் விளையாட்டுக்களில் பந்தயம் வைப்பது சட்ட பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறதாம். சரியாக விளையாடாமல், நிறைய ரன் கொடுத்து அல்லது சீக்கிரம் அவுட் ஆகி, காசு கொடுத்து விளையாடச் சொன்ன அணி முதலாளியை ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டினால் ஒருவர் வேண்டுமென்றே அவுட் ஆனாரா, அல்லது ஆட்டத்தின் போக்கில் அவுட் ஆனாரா என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது என்ற நிலையில் அதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.
அதனால், இப்போது ஸ்ரீசாந்த் மீது தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மகாராஷ்டிரா நிறுவனமயமாக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் (MCOCA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமே இந்தியாவில் இல்லாத நிலையில், இவ்வளவு நாட்களும் அவரை கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடும் போது இந்த குற்றச்சாட்டையும் நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது நடக்காத ஒன்று.
தற்போதைய சட்டங்கள் சூதாட்டத்தை தடுக்க்காது என்பதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். அந்த சட்டம் வந்த பிறகு அது எப்படி ஊழலை தடுப்பதற்கு பல் இல்லாததாக இருக்கும் என்பது தெரிய வரும்.
Indian-Supreme-Courtஇப்போதைக்கு ஐபிஎல் வீரர்களும் சரி, அவர்கள் மூலம் சூதாடிய சூதாட்டத் தரகர்களும் சரி, அணி முதலாளிகளும் சரி கிரிக்கெட் வாரிய சட்டப்படியோ, இந்திய குற்றவியல் சட்டப்படியோ தண்டிக்கப்பட முடியாது என்பதுதான் உண்மை. ஐபிஎல் பற்றிய பரபரப்பை இன்னும் சில நாட்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதை மட்டுமே இந்த கைது, வழக்கு, ஊடக பரபரப்புகள் சாதிக்கும்.
2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று நூற்றுக்கணக்கான ஊழல்களில் ஊடக வெளிச்சமும், பரபரப்புகளும் என்ன சாதித்தனவோ அதையே கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய பரபரப்புகளும் சாதிக்க முடியும்.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் குறித்த மக்கள் பார்வையினை மறக்கச் செய்வதற்கு இந்த ஐபிஎல் ஊழல் காங்கிரசு அரசுக்கு கிடைத்திருக்கிறது. ஊடகங்களும் கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து கல்லா கட்ட நினைப்பதால் திடுக்கிடும் செய்திகளாக ஊழலை வெளியிடுகின்றன. உண்மையில் இதில் யார் தண்டிக்கப்படுவார் என்று கேட்டால் யாரிடமும் விடையில்லை.
2G வழக்கில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கியது குற்றம் இல்லை, அது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அப்படி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஆ ராசா ஆதாயம் அடைந்தார் என்பதை நிரூபித்தால்தான் குற்றம் நிரூபணமாகும்.
தென்னை மரத்தில் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறியவன் பிடிபட்டவுடன், ‘அதான் தேங்காய் பறிக்காமலேயே இறங்கிட்டேனே’ என்று சொல்வது போல முறைகேடாக நிலக்கரி வயல் ஒதுக்கீடு பெற்ற எந்த நிறுவனமும் நிலக்கரியை தோண்ட ஆரம்பிக்கவில்லை என்பதால் திருட நினைத்தவர்களும், அவர்களுக்கு கதவை திறந்து விட்ட மன்மோகன் சிங்கும் சரி குற்றவாளிகள் இல்லை என்று ப சிதம்பரமே கூறி விட்டார்.
எனவே முதலாளிகளும், அரசியல்வாதிகளும் கூட்டாக சேர்ந்து நடத்தும் இந்த கொள்ளைகளை இன்றைய சட்டங்களோ அரசமைப்போ தண்டித்து விடப் போவதில்லை என்பது நிதர்சனம்.
மங்காத்தா விளையாட்டில், ‘ஏமாற்றுகிறார்கள்’ என்று பார்வையாளர்கள் கூப்பாடு போடுவதை ஆட்டக்காரர்கள் பொருட்படுத்தவா போகிறார்கள்! இல்லை பார்வையாளர்கள்தான் இந்த ஆட்டம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று தெரிந்தாலும் இரசிக்காமல் போய்விடுவார்களா? இதுதான் கிரிக்கெட் விளையாட்டில் கொள்ளையடிக்கும் ஊழல் முதலாளிகளின் பலம்.
ஒட்டு மொத்த அமைப்புமே ஐபிஎல் ஊழலை தோற்றுவிக்கச் செய்யும் சாத்தியங்களை கொண்டிருக்கும்போது அதே அமைப்பில் இருந்து கொண்டு ஊழலை ஒழிக்க முடியாது. கிரிக்கெட்டையும் காப்பாற்ற முடியாது.
- முற்றும்

கருத்துகள் இல்லை: