ஞாயிறு, 2 ஜூன், 2013

EVKS Ilangovan:திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது விலகியதாகவே இருக்கட்டும்

மதுரை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது விலகியதாகவே இருக்கட்டும். மீண்டும் வரக் கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரை மேலமாசி வீதி-தெற்கு மாசி வீதி சந்திப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது, காங்கிரஸ் தமிழகத்தில் பெகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுகிறது என்கிறார்கள். 1938ம் ஆண்டில் இருந்து 1967ம் ஆண்டு வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான். 1967ம் ஆண்டில் திமுக எப்படி ஆட்சியை பிடித்தது தெரியுமா. காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி தோற்கடித்தது. இன்றும் கூட அதிமுக மற்றும் திமுகவால் தனித்து போட்டியிட்டு ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என்றனர். என் கருத்தும் அதுவே தான். தமிழகத்தில் அதிமுக, திமுக தயவின்றி காங்கிரஸ் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும். 8 1/2 ஆண்டுகளாக மத்தியில் பதவி சுகம் அனுபவித்த ஒரு கட்சி தற்போது விலகியுள்ளதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. விலகியது விலகியதாகவே இருக்கட்டும். காங்கிரஸ் கூட்டணிக்கு இனி திமுக வரக் கூடாது. மத்தியில் காங்கிரஸ் தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையை பெற்று இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அதற்கு தமிழகம் உதவிகரமாக இருக்கும். தமிழ் ஈழம் என்று தமிழகத்தில் உள்ள சிலர் பேசுகிறார்களே அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ரூ.48,000 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள வைகோ, சீமான் போன்றோர் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு கூட எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஆனால் இங்கிருந்து கொண்டு பேசி, பேசி இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப்படுத்தி வருகின்றனர். இலங்கை தமிழர் பிரச்சனைகளை அதிமுகவும், திமுகவும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: