சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனத்திலிருந்து கட்டுக்கட்டாக பணம், மூன்று பெட்டி தங்க நகைகளை அள்ளிச் சென்ற அதிகாரிகள்!

 மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா.
மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்பின. இந்த ஆதீனத்துக்கு எதிராக, தமிழகத்தில் மிச்சமிருக்கும் 17 ஆதீனங்களும் கிளம்பின. நித்யானந்தாவை நீக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்கின்றன.
ஆதீனத்தை அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. புகார்கள் வந்தால் அவ்வாறே செய்யப்படும் என அரசு வழக்கறிஞரும் மதுரை நீதிமன்றத்தில் கூறினார்.
இந்தப் பின்னணியில், இன்று காலை 8 மணி முதல் மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு மதுரை ஆதீனம் அருணகிரி முழு ஒத்துழைப்பு அளித்தார்.
மடத்தின் பல அறைகளிலும் சோதனை நடத்தியதில் ஏராளமான தங்க வைர நகைகள், கிரீடங்கள், செங்கோல்களை எடுத்தனர் அதிகாரிகள்.
இவை மட்டும் மொத்தம் மூன்று பெட்டிகள் கொள்ளும் அளவுக்கு இருந்தன. இவற்றுக்கான ரசீதுகள், இவற்றை கொடுத்தவர்கள் விவரங்களை மதுரை ஆதீனம் சரிவர கூறவில்லை என்று தெரிகிறது.
அதேபோல மடத்திலிருந்து எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் ரொக்கத்துக்கும் கணக்கு காட்டவில்லை என்கிறார்கள். 6 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு இந்தப் பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்

கருத்துகள் இல்லை: