இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக
வேண்டும். அதற்கு முன்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் கர்நாடகா, குஜராத்,
இமாச்சலப் பிரதேச சட்டமன்றங்களின் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச சட்டமன்றங்களின் தேர்தலை எதிர்நோக்க வேண்டும். இந்த மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு ஓரளவு கட்சி அமைப்புகள் உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு அடை யாளங்கள் உண்டு. அண்மையில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி ஓர் உண்மையை உணர்ந்தது. என்னதான் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தாலும், பேரணிகளைக் கண்டாலும் கட்சிக்கு அமைப்புகள் இல்லையென்றால் வெற்றி பெற முடியாது என்பதனை ராகுல்காந்தியே தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கட்சிக்கு அமைப்புகள் இல்லையா? இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் படையே இல்லாது காங்கிரஸ் பயணித்துக்கொண்டிருக்கிறது.
1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் லகானை சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர். ராஜீவ்காந்திக்குப் பின்னர் தொடர்ந்து தள்ளாடிக் கொண்டிருந்த கட்சியைக் காப்பாற்ற சோனியா முன்வந்தார்.
அதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி பற்றி கவலைப்பட்டார். அவர் ஒரு சரியான முடிவு எடுத் தார். எந்தெந்த மாநிலங்களில் கூட்டணிக்கு வாய்ப் பிருக்கிறதோ அந்த மாநிலங்களில் மதச்சார்பற்ற கட்சி களுடன் கூட்டணி கொள்வது என்று முடிவு செய்தார்.
இந்த முடிவு நல்ல பலனைத் தந்தது. நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் பெருகியது. தமிழகத்தில் தி.மு.கழகத்துடன் உடன்பாடு கொண்ட அதே சமயத்தில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் இடதுசாரிக் கட்சிகளுடனும் உடன்பாடு கண்டது. மதவாத சக்திகள் சிம்மாசனத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இனிதே பயணத்தைத் தொடங்கியது. அதற்கு ஆலோசனை சொல்ல சோனியா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஆட்சியில் பங்கு பெறாத இடதுசாரிக் கட்சிகளும் இடம் பெற்றன. ஆனால் அந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்குத் தெரியாமலே பிரதமர் மன்மோகன்சிங் செயல்படத் தொடங்கினார். அமெரிக்காவும் உலக வங்கியும் திணிக்கச் சொல்லும் திட்டங்களை கொல்லைப்புறமாகக் கொண்டு வருவதிலேயே குறியாக இருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் நெய்வேலி போன்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார். மக்கள் முகம் சுளித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் அமெரிக்கா அணு உலைகளை வாங்குவதில் மன்மோகன்சிங் முனைப்பாக இருந்தார். அந்த அணு உலைகளின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடிகளாகும். இவை வெளிச்சத்திற்கு வந்தபோது மன்மோகன்சிங்கிற்கு அளித்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டன.
அதன்பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மன்மோகன்சிங் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. அந்த அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை -அதாவது அமெரிக்க முதலீடுகளை அனுமதிப்பது -எல்லாத் துறைகளிலும் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது -தாராளமயம் என்ற பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பது, அதன்மூலம் புதிய புதிய முதலாளிகளை உருவாக்குவது என்று மன்மோகன்சிங் அரசு செயல்பட்டது.
மன்மோகன்சிங்கின் இந்தச் செயல்பாட்டால் எல்லாத்துறைகளிலும் ஊழல்கள் மலிந்தன. கார்ப்பரேட் முதலாளிகளும், அதிகாரிகளும் இணைந்து கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக உச்சநீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் மத்திய அரசு நின்றுகொண்டிருக்கிறது.
இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அதற்குக் கட்சி அமைப்புகள் இல்லை என்பதனை இப்போதுதான் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச தோல்விக்கு சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யாததும் ஒரு காரணம் என்று சோனியா சொன்னார்.
எனவே காங்கிரஸ் கட்சி தன்னை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சோனியாமீது இன்னும் மக்களுக்கு அதிருப்தி வரவில்லை. நாட்டின் நலனை முன்னிறுத்திப் பார்ப்பவர்கள் அவர்தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இருக்க முடியும் என்று கருதுகிறார்கள்.
இன்றைக்குக் காடா விளக்கு வெளிச்சத்தில் புயலில் சிக்கிய கோலத்தோடு நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்தியா... பாகிஸ்தான் அல்ல. எனவே ராணுவ ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. ஜனநாயகம் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஆனாலும் இனி தேசத்தை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி விசுவரூபம் எடுத்து நிற்கிறது. நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி.யும்தான் காட்சி தருகின்றன. இவைகளுக்கு அப்பால் மாநில கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது.
எனவே இந்தச் சூழலில் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் சார்புகளுக்கு அப்பால் "தேசத்தை வழி நடத்தக்கூடியது காங்கிரஸ் கட்சியா, பி.ஜே.பி.யா?' என்று அலசி ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
ஊழல் என்றால் இரு கட்சிகளும் சம பங்காளிகளாக இருக்கின்றன. இந்தியாவின் விளக்கை அணைக்கும் தாராளமய, தனியார்மய கொள்கைகளில் இரு கட்சிகளும் தோளோடு தோள் சேர்ந்துதான் நிற்கின்றன. ஆனால் மதவாத சக்திகள் அரியணை ஏறினால் என்ன நடைபெறும் என்பதனை எண்ணிப் பார்த்தாலே அச்சம் பிறக்கிறது. குஜராத்தில் எப்படி சிறுபான்மை இன மக்களை நரபலி கொண்டனர் என்பதனைப் பார்த்துவிட்டோம். அந்த மனிதக்கறி பிரியர்களே மையத்தில் அமர்ந்துவிட்டால் குஜராத் கொடூரங்கள் நாடெங்கும் அரங்கேறும்.
அந்த அபாயத்தை நாடு உணர்ந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறதா? உணர்ந்தால் அந்தக் கட்சி இப்போதே தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.
மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி -மதவாத சக்திகள் அல்லாத கூட்டணி என்ற கோட்பாட்டை சோனியா வகுத்தார். எனவே காணாமல் போன கட்சி என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் மையத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்தது.
அதன்பின்னர் ராகுல்காந்தி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். தனித்துப் போட்டி என்ற பள்ளத்தாக்கை நோக்கி கட்சியை இழுத்துச் சென்றார். அதன் பலனை உத்தரப்பிரதேசம் வரை அந்தக் கட்சி அனுபவித்துவிட்டது.
எனவே மாநில அளவில் இணைந்து பயணிக்க விரும்பும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு என்பதுதான் சரியாக இருக்க முடியும். அந்தப் பாதை சோனியா ஏற்கனவே காட்டிய பாதைதான். ஆகவே எந்தெந்தக் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வாய்ப்பிருக்கிறது என்பதனை இப்போதே ஆராய வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம். ஆனால் கேரளம், தமிழகம், ஆந்திராவில் தனித்துப் போட்டியிடுவதற்கான வலிமை இல்லை. இந்த மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிகள் நேச சக்திகளாக இருக்க முடியும் என்பதனை முன்னதாகவே முடிவு செய்ய வேண்டும். தேர்தல் நெருக்கத்தில் சவாரி குதிரையைத் தீர்மானிக்கலாம் என்று கருதினால் எல்லா குதிரைகளும் ஓடிவிடும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஞானதேசிகனைத் தலைவராக தலைமை நியமித்திருக்கிறது. அவர் எந்த விமர்சனங்களுக்கும் ஆட்படாதவர். ஆனால் தனிமரம் தோப்பு ஆகுமா? தங்கபாலு தலைவராக இருந்த காலத்தில் கூட செயலாளர்கள் நியமிக்கப் படவில்லை. மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்புகளே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே யாருடன் கூட்டணி என்பதனை காலத்தோடு தீர்மானிக்க வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஒரு காட்சியைப் பார்த்தோம். தி.மு.க. உறவு கூடாது என்று ஒருசாரார் பேட்டிகள் அளித்தனர். அவர்களும் மாநிலக் கட்சித் தலைமையை அலங் கரித்தவர்கள்தான். இளைஞர் காங்கிரஸ் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தது. ஏன்? ப.சிதம்பரம், வாசன், இளங்கோவன் போன்ற வர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி காண வேண்டும் என்ற கருத்தில் தான் செயல்பட்டனர். இதில் இளங்கோ பட்டாசுகளை வெடித்தார். மற்றவர்கள் நனைந்துபோன சங்கு சக்கரம் மாதிரி அடக்கி வாசித்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி என்று தலைமை முடிவெடுத்தது. அன்றைய அரசியல் தட்ப வெப்ப நிலையைப் பயன்படுத்த அதிக ஆசைப்பட்டது. இளை ஞர் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு கோட்டா. ராகுல் காந்தியின் ஆசிர்வாதம் பெற்றவர்கள் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் கோடீசுவரர் வீட்டுப் பிள்ளைகள்தான். ஆனால் சம்பந்தமே இல்லாத தொகுதிகளில் நிறுத்தப்பட்ட னர். இவ்வளவு பெரிய குழப்பத்தால் கூட்டணிக் கப்பலே கவிழ்ந்துவிட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடியாது. கூட்டணி காண வேண் டும். அப்படியானால் எந்தக் கட்சியுடன் கூட் டணி என்பதனை முடிவு செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றால் மீண்டும் கப்பல் கவிழ்ந்துவிடும்.
எந்தத் திசையில் பயணிப்பது என்று தெரியாமல் எவ்வளவு நேரம்தான் முச்சந்தியில் நின்றுகொண்டிருக்க முடியும்.
இந்தச் சூழ்நிலையில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவு நீடிக்கும் என்று ஞான தேசிகன் தெரிவித்திருக்கிறார். இதனை குடியரசுத் தேர்தலுக்காக சொன்னார்களா? அல்லது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து சொன்னார்களா? என்பது போகப்போக தெரிந்துவிடும்.
இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி, அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்று நாம் பரிந்துரைக்கவில்லை. அந்த உரிமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. காலத்தோடு தங்கள் கருத்தை தலைமைக்குத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். இப்போதே செயல்பட வேண்டும்.
thanks nakkeeran + solai achchi karaikudi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக