புதன், 2 மே, 2012

அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்!

tamilnadu we will sue the aadheenams tamil nadu says nithyanantha
 
மதுரை: தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறியுள்ளார்.
மதுரையில் இன்று நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் சேர்ந்து பேட்டியளித்தனர். நித்தியானந்தாதான் பேசினார். மதுரை ஆதீனம் உடன் அமர்ந்திருந்தார்.
அப்போது நித்தியானந்தா பேசுகையில்,
நாங்கள் இருவருமே (நித்தியானந்தா, மதுரை ஆதினம்) ஆதினகர்த்தர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தோம். அவர்கள் எங்களைச் சந்திக்கவே நேரம் ஒதுக்கவில்லை. எங்களைச் சந்திக்க அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
எங்களிடம் விளக்கம் பெறாமல், தன்னிச்சையாக அவர்கள் கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி இவ்வாறு பேட்டி அளித்திருப்பது வருந்தத்தக்கது. இதனால், பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் எங்களிடம் பேசியிருக்க வேண்டும்.
இன்னும் பத்து நாட்களுக்குள், அவர்கள் எங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் போட்ட தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் பிடுதி பீட பக்தர்கள் மீது அவதூறு பரப்பியதாக, மான நஷ்ட வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறார்கள்.

மேலும், தருமபுரம் ஆதினம் முன்பு அமர்ந்து பிடுதி பீட பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு ஒரு லட்சம் பேர் கையெழுத்து பெற்று மனு கொடுப்போம். மேலும், ஆதினத்துக்கு யார் வருவது என்பது பற்றி சாதி ரீதியாக கருத்து வெளியிட்டு மத துவேஷத்தை வளர்த்திருக்கிறார்கள். இது தவறு. இது தொடர்பாக மத துவேஷத்தை வெளிப்படுத்தும் சட்ட பிரிவின் கீழ் புகார் அளிக்கப்படும் என்றார் நித்தியானந்தா

கருத்துகள் இல்லை: