சனி, 14 மே, 2011

கை கொடுத்த கன்யாகுமரி

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குக் கன்யாகுமரி மாவட்டம், அவர்களே எதிர்பாராத வகையில் பெரிய ஆதரவு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் நான்கு இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடே திமுக அரசின்மீதும் அதன் செயல்பாடுகளின்மீதும் அதிருப்தி வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் கன்யாகுமரி மாவட்டத்துக்கு மட்டும் ஏன் அப்படியொரு திமுக பாசம்?
இலங்கைப் பிரச்னை இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; முந்தைய தேர்தல்களிலும் ஒரு பெரிய விஷயமாகத் தமிழகத்தில் இருக்கவில்லை. கன்யாகுமரியும் இதற்கு விலக்கல்ல. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ய விடாமல் தேர்தல் கமிஷன் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுத்த பின்பும் குமரியில் நான்கு இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது!
தொகுதிவாரியாக வாக்கு விவரம்:

1. கன்னியாகுமரி தொகுதி

அதிமுக : 86,903
திமுக : 69,099
பாஜக : 20,094

2. விளவங்கோடு தொகுதி

காங் : 62,898
மார்க்.கம்யூ : 39,109
பாஜக : 37,763

3. கிள்ளியூர் தொகுதி

காங் : 56,932
பாஜக : 32,446
அதிமுக : 29,920

4. குளச்சல் தொகுதி

காங் : 58,428
அதிமுக : 46,607
பாஜக : 35,778

5. நாகர்கோவில் தொகுதி

அதிமுக : 58,819
திமுக : 52,092
பாஜக : 33,623

6. பத்மனாபபுரம்

திமுக : 59,882
அதிமுக : 40,561
பாஜக : 34,491
குமரி கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம். இங்கே ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவிற்கு வந்த போதே அச்சமூகத்தினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. ஏனெனில் ஜெயலலிதாதான் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தவர். அப்போதே கிறிஸ்தவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார். பின்பு அதை விலக்கிக்கொண்டாலும், அவர்களது விழாவில் கலந்து கொண்டாலும் இன்னும் வெறுப்பு இருக்கிறது. ஜெயலலிதா இங்கே வந்தபோது அவருக்கு எதிராக வெளிப்படையாக போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
என்னதான் கம்யூனிஸ்ட்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும் பெரும்பான்மையான ஓட்டுகள் அதிமுகவிற்கு விழவில்லை; பாஜகவிற்கு கிறிஸ்தவர்கள் ஓட்டு விழ சுத்தமாக வாய்ப்பே இல்லை; ஆகவே இயல்பாக திமுக கூட்டணிக்கு விழுந்திருக்கிறது. இதை கிறிஸ்தவர்களே ஒப்புக்கொள்வார்கள்.
சரி அப்படியே நான்கு தொகுதிகள் போயின என்றாலும், ஆறில் இரண்டு [நாகர்கோவில், குமரி] தொகுதிகள் இந்துகள் அதிகம் உள்ள தொகுதிகள். இந்த இரண்டிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பத்மனாபபுரம் தொகுதியில்கூட முன்பு இந்துக்கள் அதிகம் இருந்தார்கள். ஆனால் இத்தடவை தொகுதி சீர்சிருத்தம் செய்யப்பட்டபோது இந்துக்கள் வசிக்கும் பகுதிகள் பிரிக்கப்பட்டு சமச்சீர் செய்யப்பட்டது. இதிலிருந்து ஓட்டுகள் எந்த வகையில் விழுந்திருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. அது போனதுகூட சரி; நாகர்கோயிலும் கன்யாகுமரியும் எப்படி பாஜகவைக் காலைவாரின?
காரணம் பாஜகவேதான்!
எப்படி என்றால் பாஜக ஓட்டு கேட்கும்போதே சிறந்த எதிர்க்கட்சியாக இருப்போம் என வெளிப்படையாகக் கூறியே இங்கு ஓட்டு கேட்டது. நிச்சயமாக ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொல்லியே ஓட்டுக் கேட்ட ஒரு கட்சிக்கு யார் வாக்களிப்பார்கள்? இதனாலேயே, பாஜகவுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்திருந்த திமுக எதிர்ப்பாளர்களான இந்து வாக்காளர்கள்கூட அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டார்கள். பாஜக மட்டுமல்ல; அதிமுகவும் வேண்டாம் என்று நினைத்தவர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களித்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழகத்தில், குமரியில் மட்டுமாவது சற்றே செல்வாக்கு உள்ள கட்சி என்று சொல்லிக்கொள்ள இருந்த வாய்ப்பை பாஜக இதனாலேயே தவறவிட்டது.
அதெல்லாம்கூட சரி; மீனவர்கள் அதிகமுள்ள குமரியில், அவர்கள் ஓட்டு எப்படி திமுக கூட்டணிக்கு விழுந்தது என்பதுதான் மிச்சமுள்ள ஒரே சந்தேகம். தமிழக மீனவர்களை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாக்கக் கடிதம் எழுதுவதைத் தவிர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசிற்குக் குமரி மாவட்டத்து மீனவர்கள் மட்டும் எப்படி வாக்களித்தார்கள்?
இங்குள்ள மக்கள் யாருக்குமே புரியாத விஷயம் இதுதான். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய எப்படியும் திமுக நடவடிக்கை எடுக்கும். அதனோடு, குமரியில் மட்டும் மீனவர் ஓட்டு எப்படித் தனக்கும் காங்கிரசுக்கும் சாதகமாக விழுந்தது என்றும் சேர்த்து ஆராய்ந்து சொன்னால் நல்லது.

கருத்துகள் இல்லை: