திங்கள், 9 மே, 2011

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இரு மாணவர் குழுக்கள் முறுகிக்கொண்டன

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நேற்றுக்காலை திடீரென உள்நுளைந்த பொலிஸார் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என்பவற்றை அள்ளிச் சென்றனர். அவற்றை மீளப் பெறச்சென்ற மாணவர்கள் சிலரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் இரவு வணிக முகாமைத்துவ பீட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுக்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மதுபோதை தலைக்கேறியதால், இரு மாணவர் குழுக்கள் முறுகிக்கொண்டன. இந்த முறுகல் அடிதடி வரை சென்றது.பல்கலைக்கழக மாணவர்கள் கம்பிகள், பொல்லுகள் சகிதம் "வெறியோடு" மோதிக்கொண்டனர். இதில் பல்கலைக்கழக ஜன்னல் கண்ணாடிகள், பிளாஸ்ரிக் கதிரைகள், கல்இருக்கைகள் எவற்றையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. மாணவர்களின் அட்டகாசம் உச்சமானதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் பாதுகாப்பு ஊழியர்கள் திண்டாடினர். இந்த நிலையில் பல்கலைக்கழகத் துக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே நேற்றுக் காலை மீண்டும் பல்கலைக் கழகத்துக்குள் வந்த பொலிஸார் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என்பவற்றை அள்ளிச் சென்றனர். அவற்றைப் பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பல்கலை மாணவர்கள் சிலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக மாணவர் தரப்புத்தகவல்கள் தெரிவித்தன.இதேவேளை நேற்று யாழ்.பல்கலைக்கழகம் போரால் சிதைவுண்ட பகுதி போல காட்சியளித்தது. முதல் நாள் மோதலுக்கு அத்திவாரமிட்ட மதுப்போத்தல்களும் ஆங்காங்கே வீசப்பட்டு இருந்தன. நேற்று இரவு வரை பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேற்படி மோதல் சம்பவம் குறித்து யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தொடர்புகொண்ட போதும், அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: