செவ்வாய், 10 மே, 2011

கனிமொழி மீது அசாத்திய கெடுபிடி காட்டும் அமலாக்கப்பிரிவு

கோர்ட்டிற்கு தினந்தோறும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு செல்வதற்கு முன், தங்களது ஆடிட்டர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை' என, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கவலை தெரிவித்தனர்.

சி.பி.ஐ., கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஆவணங்களை படித்து பார்க்கும் பணியில் நீதிபதி சைனி ஈடுபட்டதால், நேற்று முழுவதும் வழக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனாலும் மாலை வரை கோர்ட் அறைக்குள் உட்கார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் காரணமாக, வழக்கு தொடர்பாக ஆஜராகியிருப்பவர்கள் அனைவரும் வெறுமனே உட்கார்ந்திருந்தனர்.

அந்த இடைவெளியில், கனிமொழியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் விசாரணை குறித்து பேசியபோது, "சி.பி.ஐ., கோர்ட் தினந்தோறும் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளோ, 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களது சம்மனை ஏற்று ஆஜராக வேண்டுமெனில், எனது ஆடிட்டர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அதுதான் என்ன செய்வது என்று புரியவில்லை.விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பதா, வேண்டாமா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் தான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.

இதேபோல சரத்குமார் ரெட்டி கூறும்போது, "எனது ஆவணங்கள் அனைத்துமே சென்னையில் உள்ளன. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் அவற்றை சரிபார்க்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ .,கோர்ட்டும் தினந்தோறும் ஆஜராக சொல்லியிருக்கிறது. எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

கருத்துகள் இல்லை: