ஞாயிறு, 22 மே, 2011

எலிகள் போல் மீடியாவை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கனிமொழியைச் சுழற்றி அடித்து திகாரில் தள்ளியிருக்கிறது.  நேற்று தொடங்கி இன்றுவரை ட்விட்டரில் கனியும் திகாரும் டாப் ட்ரெண்டிங். (தமிழகத்தில் கிடைக்காவிட்டால் என்ன, திகாரில் நாங்கள்தான் மெஜாரிட்டி). ஃபேஸ்புக்கிலும் கனிமொழியே நிறைந்திருந்தார். (முதலில், ஆ. ராசா. இப்போது, கனிமொழி. ஏக் 2ஜி கேலியே!) பர்கா தத் தொடங்கி இணையத்தில் நேற்று அக்கவுண்ட் ஆரம்பித்தவர்கள் வரை அனைவரும் கனிமொழியின் கைதை ஒருவித பரவசத்துடன் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
அன்னா ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏற்றியவர்கள் கனிமொழியின் கைதை ஊழலுக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றி என்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. எத்தனை பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் நீண்ட கரம் அவர்களை விட்டு வைக்காது. இது ஜனநாயகத்தின் வெற்றி. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. மீடியாவின் வெற்றி.  ஸோ அண்ட் ஸோ.
ஒன்று மட்டும்தான் உண்மை. இது மீடியாவின் வெற்றி. இந்தக் கொண்டாட்டத்துக்காக நம்மை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தயார் படுத்திக்கொண்டிருக்கிறது மீடியா. இன்று, நாளை, அடுத்த வாரம், தேர்தல் முடிந்த பிறகு என்று கனிமொழி கைதாகப்போவதை ஒரு த்ரில்லர் கதையாக மாற்றி ஒவ்வொரு நாளும் நம்மை இருக்கை நுனிக்கு தள்ளிக்கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, அதிமுக வெற்றி பெற்றதும் நேற்று க்ளைமேக்ஸ் அரங்கேறிவிட்டது. திரை.
இன்னும் கொஞ்ச காலம் மீடியா கனிமொழியைச் சுற்றிக்கொண்டிருக்கும். கருணாநிதி தயாளுவுடன் வந்து தன் மகளைப் பார்ப்பாரா, அப்படியே வந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்திப்பாரா, அப்படியே சந்தித்தாலும் பேசுவாரா, அப்படியே பேசினாலும் ஏதாவது உபயோகம் இருக்குமா? அடுத்து யார்? தயாளுவா? அவருக்குப் பிறகு? வேறு பெரிய தலைகள் சிக்குமா?
குழல்  ஊதிக்கொண்டே செல்லும் பேக்பைப்பரைப் பின்தொடர்ந்து ஓடும் எலிகள் போல்  மீடியாவை நாம் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். மீடியா எது பற்றியெல்லாம் கவலைப்படுகிறதோ அது பற்றியெல்லாம் நாமும் கவலைப்படுகிறோம். மீடியாவின் சந்தேகங்களும் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் நம் சந்தேகங்களாக, கவலைகளாக, எதிர்பார்ப்புகளாக மாறிவிட்டன.
இதோ உன் டார்கெட் என்று மீடியா நேற்று கனிமொழியை வட்டமிட்டு காட்டியது. உடனே ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நாம் கத்தி எறிய ஆரம்பித்துவிட்டோம். ஈழத்தமிழர்களுக்காக அன்று நீ அழுதிருந்தால் இன்று நான் உனக்காக அழுதிருப்பேன். இது பழிக்குப் பழி வாங்கும் கத்தி. நேற்று வரை ஏஸியில் இருந்தவர், இனி எப்படிக் கஷ்டப்படப் போகிறாரோ? இது ஐயோ பாவம் கத்தி. ஜெயலலிதா விடமாட்டார், கருணாநிதியின் குடும்பம் முழுவதையும் திகாருக்கு அனுப்பிவிட்டுதான் ஓய்வார். இது கட்சி அனுதாபக் கத்தி.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் ஆ. ராசாவும் கருணாநிதியும் தயாளுவும் கனிமொழியும் கலைஞர் டிவியும் இன்று பிரபலமான பெயர்கள். உலகம் தழுவிய டாப் ஊழல்வாதிகள் பட்டியலில் நிக்ஸனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஆ. ராசாவுக்கு வழங்கியிருக்கிறது டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவின் ஆகப் பெரும் ஊழல் என்பதாக 2ஜி உலக மீடியாவில் அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 ஆ. ராசாவும் கனிமொழியும் மட்டுமல்ல இந்த ஊழலோடு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. ஆனால், மீடியாவின் நோக்கம் இதுதானா? யோசித்துப் பாருங்கள். மீடியா பிரச்னையின் அசலான மையப்புள்ளியை என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறதா? காஷ்மிரில் கல் வீச்சு நடந்தால் அது பரபரப்பு செய்தி. காஷ்மிர் பிரச்னையின் மையம் என்ன? பாகிஸ்தான் தீவிரவாதம் பரபரப்பு செய்தி. அதன் தோற்றுவாய் என்ன? ஒசாமா பின்லேடன் கொலை சென்சேஷன். ஒசாமாவை உருவாக்கியவர்களின் கதை? அவர்கள் நோக்கம்? இராக் யுத்தமும் ஆப்கனிஸ்தான் யுத்தமும் பல்லாயிரம் முறை செய்திகளாக வலம் வந்தன. ஆனால், எத்தனை முறை போர்க்காரணம் உண்மையாக அலசப்பட்டிருக்கிறது?
னிமொழியும் அவ்வாறே.  கருணாநிதியின் மகள். அரசியல்வாதி. திமுகவின் முக்கியப் புள்ளி. மக்களுக்குப் பரிச்சயமான முகம். அவர் ஒரு வழக்கில் மாட்டும்போது, முக்கியத்துவம் பலமடங்கு அதிகரிக்கிறது. பல கதைகளையும் யூகங்களையும் அவரை வைத்து பின்னமுடிகிறது. பத்திரிகைகளுக்குப் பல பக்கங்கள். தொலைக்காட்சிகளுக்குப் பல மணி நேர ஒளிபரப்பு. பரபரப்பு. பைசா.
கனிமொழியை அம்பலப்படுத்துவதிலும் ஆ. ராசாவை அம்பலப்படுத்துவதிலும் அடுத்து தயாளுவை கட்டம் கட்டுவதிலும் முனைப்புடன் இருக்கும் 24து7 மீடியா என்றாவது, 2ஜி பிரச்னையின் மையப்புள்ளியான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியிருக்கிறதா? நீரா ராடியா டேப் வெளிவந்த பிறகும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ரகசிய உறவு போதுமான அளவு அம்பலப்படுத்தப்படவில்லை.
ஜெயலலிதாவின் வெற்றியையும் ஆட்சி மாற்றத்தையும் மட்டுமே மீடியா ஆரவாரமாக வெளிச்சம் போட்டு காட்டும். ஆனால், ஆட்சி மாற்றம் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதையும், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான தனியார்மயமும் தாராளமயமும் எந்த நிலையிலும் மாறப்போவதில்லை என்பதையும் மீடியா என்றும் அம்பலப்படுத்தப்போவதில்லை.
காரணம் அவர்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை. தேவை கவர்ச்சிகரமான, பரபரப்பான கதைகள் மட்டுமே. எனவேதான் ஆ. ராசாவும் கனிமொழியும் திகாரும் நமக்கு பிளேட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன.  மீடியா விரிக்கும் வலையில் நாம் அனைவரும் வலியச் சென்று சிக்கிக்கொள்கிறோம். கனிமொழி மீது கத்தி வீசி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீருவான் என்று தேற்றிக்கொள்கிறோம். கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கத்தை நான் ஆணையிட்டால் பாணியில் சவுக்கைச் சுழற்றி ஜெயலலிதா முறியடிப்பார் என்று உள்ளுக்குள் மகிழ்ந்துபோகிறோம்.
சரி அடுத்து என்ன? பேக்பைப்பரின் குழலுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை: