சனி, 28 மே, 2011

வழக்கம் போல் மாணவியரே அதிக அளவில் சாதனை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம்

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வழக்கம் போல, மாணவி யரே அதிகளவில் சாதனை படைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில், மாநில அளவில், ஐந்து மாணவியர் முதலிடத்தைப் பிடித் துள்ளனர். அவர்கள் எடுத்த மதிப்பெண், 496. மார்ச், ஏப்ரல் மாதங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து 38 ஆயிரத்து 165 மாணவர்களும், மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 960 மாணவர்களும் எழுதினர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,865 மாணவர்களும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,392 மாணவர்களும் எழுதினர். இவர்களுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வு மாணவர்களும் தேர்வெழுதினர்.

புதிய சாதனை: தேர்வு முடிவுகள், நேற்று காலை 10 மணிக்கு, தேர்வுத் துறை இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளைப் பார்த்து, தேர்வுத் துறை அதிகாரிகளே ஆச்சரியப்பட்டனர். அந்தளவிற்கு தேர்ச்சி சதவீதம், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, "ஜெட்' வேகத்தில் உயர்வு, மாநில அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு என, பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் புதிய சாதனை படைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாநில அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வழக்கமாக 10க்குள் தான் இருக்கும். ஆனால், முதல் முறையாக, இந்த ஆண்டு 40 மாணவர்கள் இடம் பெற்று, கல்வித் துறையை மலைக்க வைத்துள்ளனர். 500க்கு 496 மதிப்பெண்களுடன் ஐந்து மாணவியர் முதலிடத்தையும், 495 மதிப்பெண்கள் பெற்று 11 மாணவர்கள் இரண்டாமிடத்தையும், 494 மதிப்பெண்களுடன் 24 மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

முத்திரை பதித்த மாணவர்கள்: முதல் மூன்று இடங்களைப் பிடித்த 40 பேரில், 27 பேர், மாணவியர் என்பது, மற்றொரு சாதனை. பிளஸ் 2 தேர்வில், மாநில அளவிலான இடங்களைப் பிடிக்காமல், கோட்டைவிட்ட வட மாவட்டங்கள், பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்துள்ளன.

பின்தங்கிய மாவட்டங்கள் அபாரம்: கல்வியில் மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மின்னலாதேவி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருவள்ளூர், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்டங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன் ஆகிய தேர்வுகளிலும், தலைநகர் சென்னை உட்பட, பல வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், முன்னணி இடங்களைப் பிடித்தனர். ஆங்கிலோ இந்தியன் தவிர, இதர மூன்று போர்டு தேர்வுகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதமும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

தேர்ச்சி சதவீதம் உயர்வு: எஸ்.எஸ்.எல்.சி.,யில், 85.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட (82.50%), 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓ.எஸ்.எல்.சி., தேர்வில், 94.40 சதவீதம் பேரும், மெட்ரிகுலேஷன் தேர்வில், 95.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில், 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஓ.எஸ்.எல்.சி., 6.2 சதவீதமும், மெட்ரிக் 1.2 சதவீதமும் தேர்ச்சி அதிகரித்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் தேர்ச்சி மட்டும் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

"சென்டம்' உயர்வு: பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும், இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., கணிதத் தேர்வில், 12 ஆயிரத்து 532 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட, ஐந்து மடங்கு (2,399) உயர்ந்துள்ளது. இதேபோல், அறிவியலில் 3,677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மெட்ரிக் தேர்விலும், 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கருத்து .அவதார் சென்னை : 
மாணவர்களுக்கு வேறு பல முக்கிய சோலிகள் உள்ளது தெரியாமல் பிதற்றாதீர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்கு பால் அபிஷேகம் செய்யவேண்டும்  அரசியல்வாதிகளுக்கு ஆலவட்டம் பிடிக்க வேண்டும் தங்களை ஒரு சினிமா ஹிரோ வாக கனவு கண்டு கொண்டு சதா செல்போனும் கையுமாக அலையவேண்டும் இதெல்லாம் எவ்வளவு முக்கியம் ? இதை விட்டு விட்டு எதோ படிப்பு பருப்பு என்று .....

கருத்துகள் இல்லை: