புதன், 25 மே, 2011

Kalaignar: அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்

சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுகநிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
  

English summary
Talking to newspersons, DMK president Karunanidhi said he would be sworn in as Member of the Assembly at a date fixed by the Speaker of the Assembly. He could not be sworn in as member on May 23, when pro tem Speaker C K Tamizharasan administered the oath of office to the new members as he was away in Delhi to meet his daughter K Kanimozhi, arrested in connection with 2G spectrum allocation case.

கருத்துகள் இல்லை: