சனி, 28 மே, 2011

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செருப்பு வாங்கினார்!

முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்று கூறிக் கொண்டு, ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் வந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இனிமேல் செருப்பு அணியாமல் வரக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார்.

ஆனால், முதல்வர் மீதுள்ள அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு உதயகுமார் வந்து சென்றார்.

இது பற்றி அவர் கூறுகையில், கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்கிறோம். முதல்வர் 'அம்மா' இருக்குமிடம் தான் எனக்குக் கோவில். இதனால் அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன் என்றார்.

அமைச்சராக பதவியேற்றபோதும், சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றபோதும், தலைமைச் செயலக வளாகத்திலும் சட்டசபையிலும் செருப்பு அணியாமல் நடமாடி வந்தார் உதயகுமார்.

இந் நிலையில் நேற்று கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை உதயகுமார் ஓடிச் சென்று வணங்கினார். அவரை அழைத்த ஜெயலலிதா, "இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது'' என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை உடனடியாக பின்பற்றுவதாகக் கூறிய அமைச்சர் இப்போது செருப்பு அணியத் துவங்கியுள்ளார்.

அதே போல கடந்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்றபோது யாரும் தனது காலில் விழக் கூடாது என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா-ஸ்டாலின் நேருக்கு நேர்:

இந் நிலையில் நேற்று சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் பொறுப்பேற்றபோது ஜெயலலிதா சட்டசபைக்குள் வந்தார். அவர் வரும்போது திமுக எம்எல்ஏ மு.க.ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

அதேபோல சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வெளியில் வந்த சபாநாயகர் ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் உள்பட முன்னாள் திமுக அமைச்சர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
English summary
TN IT minister Udaya kumar who was avoiding wearing chappal before CM Jayalalithaa as he was calling her as god and place she dwell is temple is changed man now. He is wearing slipper after CM's advice to do so

கருத்துகள் இல்லை: