புதன், 25 மே, 2011

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார்.

ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ,

வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதுவரை நாங்கள் யாரையும் பகைத்து கொண்டதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறேன். ஏனெனில் இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதோடு இயற்கை வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வாதாடும் போது, இந்த போராட்டத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து ஏன் ஆதரவாக போராடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு நான், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக 1000 பேர் தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். உடன் சேர்ந்து போராடவில்லை என்பதற்காக அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்பதாக எடுத்துகொள்ள கூடாது என்றேன். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

ம.தி.மு.க. விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கட்சி என விமர்சனம் உள்ளது. நாங்கள் ஈழ மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். தமிழ்நாட்டில் வன்முறை இருக்ககூடாது என நினைப்பவர்கள் நாங்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் நான் கைது செய்யப்பட்டபோது ம.தி.மு.க. வினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. 

மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர். அதேநேரத்தில் இந்த தேர்தலில் பணம் மூலம் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்னை வருங்கால முதல் அமைச்சர் என சிலர் வரும்போது வாழ்த்தி கோஷம் போட்டனர். இது என் மீது உள்ள அன்பால், பாசத்தால் கூறுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் புகழ் போதை பள்ளத்தில் தள்ளிவிட்டு விடும் என்பதால் அந்த வார்த்தையை நான் கவனத்தில் கொள்வது இல்லை.

ராமன் ராவணன் இடையே நடந்த யுத்தம் 18 மாதம் நடந்தது. குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் ம.தி.மு.க. 18 ம் ஆண்டுவிழா தொடங்க விழாவை கொண்டாடி வருகிறோம். நேர்மையான, ஊழலற்ற, சுயநலமற்ற அரசியல் நடத்தி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு வைகோ பேசினார்
ஒரு அவதானி: அய்யா உங்களின் தேர்தல் புறக்கணிப்பு புல்லரிக்க வைக்கிறது. இதையே ஒரு நிரந்தர கொள்கையாக வைத்துக்கொள்ளலாம். அடிக்கடி தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்படும் தாங்கள் வேறு நல்ல துறைகளை தேர்ந்து எடுத்தால் தமிழ் நாட்டுக்கு மிகவும் நல்லது. உணர்ச்சி வசப்பட்டு உசுப்பு ஏத்தி நட்டாற்றில் விடும் கொள்கையை இனியாவது கைவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: