சனி, 28 மே, 2011

எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை: ஜனாதிபதி


mahinda-1804தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை. இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராக இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

சர்வதேசத்தைப் பயன்படுத்தி இந்த பிரிவினைவாதக் குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாகப் போவதில்லை. உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

காலிமுகத்திடலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற யுத்த வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அரசாங்கத்துடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் இந்த கட்சிகள் ஈடுபட வேண்டுமே தவிர, அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஐக்கியப்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிசமைத்த வெற்றியாகவே இந்த யுத்த வெற்றி விழா கருதப்படுகிறது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாகவும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தும் வாழக்கூடியதொரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

எமது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் நாம் எப்போதும் ஈடுபட்டு வருகின்றோம். யுத்தத்தால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் வெறுமனே மீள்குடியேற்றத்திற்கு உட்படுத்தவில்லை.தலையணை, படுக்கை, நுளம்புத்திரி உள்ளிட்ட சகலவற்றையும் வழங்கியே அவர்களை மீள்குடியேற்றினோம்.

அபிவிருத்தியின் சூரிய உதயம் வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் எமது மக்களின் சொத்துக்களையே அழித்தனர். அவற்றை நாம் மீளப் பெற்றுக்கொடுத்து வருகிறோம்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

இதேவேளை, உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஜாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து அவரது பெற்றோரை எமது படையினரே கவனித்து வந்தனர். அவ்வியக்கத்தைச் சேர்ந்த மேலும் பல முக்கியஸ்தர்களின் குடும்பங்களை நாம் இன்றும் எமது பாதுகாப்பில் வைத்து கவனித்து வருகின்றோம்.

அத்துடன், பயங்கரவாதிகளுக்கான உணவு, மருந்து மற்றும் அனைத்துத் தேவைகளையும் வழங்கிக்கொண்டு அவர்களால் தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொண்டு யுத்தம் செய்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு மாத்திரமே உண்டு.

இவ்வாறானதொரு நிலையில், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது மிகவும் பாரதூரமானதாகும்.

படையினரே!, யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில் உங்களை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. உங்களது ஒழுக்கம், கௌரவம் மற்றும் தனித்துவத்தை நாம் எப்போதும் பாதுகாப்போம்.

எமது நாட்டை அழிப்பதற்காக நாம் எமது படையினரைப் பயன்படுத்தவில்லை. நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டு, நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே அவர்களைப் பயன்படுத்தி கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.

அத்துடன் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினர் தங்களது அயராத ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாம் தகர்ப்போம். எமது மக்கள் அவற்றைத் தகர்ப்பார்கள்.
நாட்டு மக்களின் அனுமதியின்றி இங்கு எதுவும் நடக்காது. எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்தமின்றிய நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் சந்தோஷமே எமக்கு முக்கியம்' என்றார்.

கருத்துகள் இல்லை: