ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வகுப்பாசிரியர் வராவிட்டால் யாராவது ஒரு பெற்றார் அங்கிருந்தால் அவர் பாடம் எடுப்பார்

St. John’s College Jaffna
என் மகன் இங்கிலீஷில் படிக்கிறான்; என் பிள்ளை இன்ரநஷனலில் கற்கிறான்’ என்று பெருமைபட்டுக் கொள்ளும் பெற்றோர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். இதில் கிராமங்களில் வாழ்பவர்கள், பிள்ளை நகரத்துப் பாடசாலையில் படிக்கிறது என்றாலே பூரித்துப் பேசுவார்கள்.
என்னதான் தொழில் புரிந்து கோடீஸ்வரராக இருந்தாலும் பிள்ளைகளை எங்ஙனமாவது படித்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் பலர் குறியாக இருப்பார்கள். பணம் இருக்கிறதுதானே என்றாலும் தம்மிடமுள்ள பணத்தைவிட கல்வி மீது அவர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.’ என்கிறார் கவிஞர்.

இப்படி படிக்காத பல மேதைகள் பணக்காரர்கள் ஆனாலும் அந்தப் பணத்தை வைத்து நிர்வகிப்பதற்குத் தம்பிள்ளை படித்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்குப் பிள்ளை தாம் இருக்கும் இடத்தில் அல்லாமல் பிரசித்தி பெற்ற ஒரு பாடசாலையில் வேறோர் ஊரில் படிக்கிறான் என்பதில் பெருமைகொள்வார்கள்.
மகன் கண்டியில் படிக்கிறான், கொழும்பில் படிக்கிறான், யாழ்ப்பாணத்தில் படிக்கிறான் என்று கூறுவதிலும் பெருமைதான் வெளி மாவட்ட பெற்றோருக்கு. அதேநேரம் அந்த ஊர்களில் உள்ளவர்களோ அங்குள்ள உயர் பாடசாலையில் படிக்கிறான் என்று சொல்வதில் அந்தஸ்தை உணர்கிறார்கள். மகன் படிக்கிறானோ இல்லையோ….. அந்தப் பாடசாலையில் போட்டிருக்கிறேன்… இவ்வளவு நன்கொடை கொடுத்தேன் என்பதில் சிலர் சுகமடைகிறார்கள்.
இவற்றையும் சிந்தித்தவர்களாய் இந்த பிரசித்தி பெற்ற பாடசாலை சர்வதேச பாடசாலை என்ற மேம்பட்ட போக்கிற்கும் அப்பால் வெளிவராமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பல விடயங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாடசாலைகள் ஊருக்கு ஊர் பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்ட வடிவத்தில் இயங்குவது நமக்குத் தெரியும். ஆற அமர சிந்தித்தால் கல்விச் சீரழிவும், ஒழுக்கக் கேடும், வியாபார போக்கும் மலையகப் பகுதிகளிலேயே கூடுதலாகக் காணப்படுவதை உணர முடியும்.
நேற்றுமுன்தினம் கூட ஹற்றன் பகுதியில் ஓர் ஆசிரியருக்கு எதிராகப் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். உள்ளே இருப்பவனை வெளியில்விடு! என்று தான் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஓர் ஆசிரியனை உள்ளேயே போடுங்கள்! வெளியேவிட்டு விடாதீர்கள்! என்று பெற்றோர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். கல்வித்துறைக்குப் பொறுப்பான அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் பெற்றோர் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.
இதேநிலை இன்னொரு தனியார் பாடசாலைக்கும் வரப்போகிறது! தனியார் வங்கியொன்றின் பெயரைக் கொண்டு மலையகத்துக்குச் செழிப்பைத் தந்துகொண்டிருக்கும் நகரத்தில் இருக்கிறது இந்த “உயர்மட்டப் பாடசாலை. தரம் ஒன்று முதல் 3 வரை கற்பிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் கிடையாது. பசை உள்ளவர்களின் பிள்ளை என்றால் கூடுதல் சலுகை. படம் எடுத்தாலும் பணக்காரப் பிள்ளைக்குத்தான் முதல் வரிசை.
உருவத்தில் சிறியவர் என்பதற்காக அந்தப் பிள்ளையின் பெற்றார் பொருளாதாரத்தில் சிறியோரென்றால் பின் வரிசையில் தான் பிள்ளை நிற்க வேண்டும். வகுப்பாசிரியர் வராவிட்டால் யாராவது ஒரு பெற்றார் அங்கிருந்தால் அவர் பாடம் எடுப்பார். அதனால் பிள்ளைகளுக்குப் பாதிப்பில்லாமல் கல்வி! அந்தளவுக்குப் பணம் பெரும்பாடு படுத்துகிறது என்கிறார்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பியிருக்கும் நடுத்தர பெற்றோர். ‘கல்கண்டு’ என்கிறார்கள். அப்படித் தேடிக் கண்டு பிடித்த இந்த ‘உயர்மட்ட’ பாடசாலையின் நிலை கண்டு எந்தக் கல்லில் மோதிக் கொள்வது என்று இப்போது சிந்திக்கிறார்கள் பெற்றோர்கள்.
தனியார் பாடசாலைகள் பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்டவை என்பதை இந்த ‘உயர்மட்ட’ப் பாடசாலை பறைசாற்றுகிறதோ! பரவாயில்லை இங்கு உயர்மட்டத்தினரின் பிள்ளைகள் மட்டுமே வந்து ‘உட்கார்ந்திருந்திருக்கலாம்’ என்பதையாவது அறிவித்தால் நாம் எமது வழியைப் பார்க்கலாம் என்கிறார்கள் குணக்கார பெற்றோர்கள். பணமா, குணமா? என்பதை இந்தப் பாடசாலைதான் தெளிவுபடுத்த வேண்டும். கல்விக்காகவும், நியாயத்திற்காகவும் பெற்றோருடன் ‘ஆற அமர’ நாமும் காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை: