செவ்வாய், 7 டிசம்பர், 2010

Rajini:கலைஞர் சொன்னா ஓடோடி வருவேன் - ரஜினி



                    லைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார். இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்... இந்த விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்த விதம் என்னை மிகவும் பிரமிக்கவைத்தது. முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை... அன்று என்னுடைய திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படமான இளைஞன் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார். 

அவர் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன அய்யா... நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர், என் சம்பந்தமான ஒரு விழா இருக்கு வந்துட்டு போய்யா என்று சொன்னால் போதும்... நான் ஓடோடி வருவேன்... எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னிடம் உங்களுக்காக நேரம் ஒதுக்க அனுமதி கேட்கிறீர்களே, நிச்சயம் நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.

பாருங்க கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனசு. இப்படி ஒரு மனசு இருப்பதினால் தான் நீங்கள் இன்னும் இளைஞனாக இருக்கிறீர்கள் என்று கலைஞரைப் பாராட்டி பேசினார் ரஜினி. மேலும் அவர் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை, நான் நடிகன் என்பதால் என் உடம்புக்கு வயதாகிவிடும். ஆனால் அவரின் மூளைக்கு வயதாகாது. அவர் என்றும் இளமையோடு இருப்பார். அரசியல் விஷயங்கள் பல இருந்தாலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பது கலைத்துறை தான். இன்னும் நிறைய பேசி அவரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் ரஜினி. 

அதனைத் தொடர்ந்து கலைஞர் பேசும் போது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சொன்னார்கள்.  

அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று, அது மாத்திரம் காரணமல்ல.  என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.  நாம் அவரை அழைத்திருப்பது போலவே,  இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன்.  ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் -  கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.  

அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: