புதன், 8 டிசம்பர், 2010

Big Flop மக்களை ஓட வைத்த ரத்த சரித்திரம்!வரைமுறையற்ற வன்முறை...

Suryaபொதுவாக மக்கள் படங்களை ஓட வைப்பார்கள். ஆனால் இப்போது ஓரு படம் மக்களை ஓட வைத்திருக்கிறது அரங்குகளை விட்டு. அது ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம்!

வரைமுறையற்ற வன்முறை, கோரமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள், தமிழகத்துக்கு அந்நியமான கதைக்களம் போன்றவற்றால், சமீபத்தில் வெளியான வேறு எந்தப் படமும் காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது ரத்த சரித்திரம்.

ஆந்திர அரசியல் தாதாக்களின் நிஜக் கதையை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கி, தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிட்ட படம் ரத்த சரித்திரம். இதில் விவேக் ஓபராய், சூர்யா மற்றும் ப்ரியாமணி நடித்திருந்தனர்.

ஹிந்தி, தெலுங்கில் இரு பகுதிகளாக தயாரான இந்தப் படம், தமிழில் ஒரே பாகமாக வெளியானது.

கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்ப நாளிலிருந்தே சுத்தமாகக் கூட்டமில்லை. 30 சதவீத டிக்கெட்டுகள் கூட சில திரையரங்குகளில் விற்பனையாகவில்லை. சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள காசி திரையரங்கில் வெகு சிலர் மட்டுமே படம் பார்க்க வந்திருந்தனர் நேற்று.

இதற்கு கடும் மழைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதே மழை நாளில், மைனா படத்துக்கு ஓரளவு கூட்டம் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"மிக மோசமான காட்சிகள், அளவுக்கதிகமான வன்முறை, கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் தெறிக்கும் ரத்தம், தரமற்ற ஒளிப்பதிவு, காதைப் பிளக்கும் இரைச்சல்... இவை இந்தப் படத்தின் மீதே வெறுப்பைக் கிளப்பிவிட்டன. இதைவிட முக்கியம், ஆரம்பத்திலிருந்தே இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வில் மக்கள் இருந்துவிட்டதுதான்..." என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர்.

ராம் கோபால் வர்மாவே, தமிழ் ரசிகர்களுக்கு அநேகமாக இந்த டேஸ்ட் பிடிக்காது என நினைக்கிறேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை விநியோகித்த க்ளவுட் நைன் தயாநிதி அழகிரிக்கு மீண்டும் ஒரு படம் நடித்துத் தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. நஷ்டஈடு?!

கருத்துகள் இல்லை: