செவ்வாய், 7 டிசம்பர், 2010

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர்

 
Rajaசென்னை: மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்கக் கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்திலேயே தெரிவித்து பரபரப்பை ஏற்படு்த்தினார்.

ஆனால், அந்த அமைச்சர் யார் என்பது குறித்து அப்போது விவரம் தெரிவிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பு படித்து வருபவர் கிருபா ஸ்ரீதர். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

கடந்த இரு வருடங்களாக தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று வந்துள்ளார் ஸ்ரீதர். இந் நிலையில் அவரும் அவரது தந்தையும் சேர்ந்து, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் மார்க் வாங்குவதற்காக விடைத்தாள்களை மாற்றி பெரும் பிராடுத்தனம் செய்துள்ளனர்.

இது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதரும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்னிலையி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கட்சிக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், அரசுத் தரப்பே ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளதாகவும் அவர்களது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ரகுபதி, உங்களது கட்சிக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். தன்னை மத்திய அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய ஒரு வழக்கறிஞர், கிருபா ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். இது முறையற்றது.

அந்த மத்திய அமைச்சர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும் என்றார் நீதிபதி ரகுபதி.

நீதிபதியின் இந்த பகிரங்க புகாரால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிய நீதிபதி ரகுபதி, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் கோரினார்.

ஆனால், நீதிபதியையே மிரட்டிய அந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. யார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

நீதிபதியை மிரட்டியது ராசா தான் என்று அப்போதே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனாலும் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

இந் நிலையில் நீதிபதியை மிரட்டிய அந்த அமைச்சர் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்காக பதவி விலகிய ராசா தான் என்று உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சந்திரமோகனுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பார்கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்து சந்திரமோகனை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

இன்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி கலீபுல்லா கூறுகையில், கடந்த ஆண்டு நீதிபதி ரகுதியை மிரட்டியது சந்திரமோகன் தான் என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அமைச்சராக இருந்த ராசாவின் பெயரைச் சொல்லி நீதிபதியை அவர் மிரட்டினார் என்றார்.

மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பில் இருந்து சந்திரமோகனை இடைநீக்கம் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து இந்திய பார் கவுன்சில் விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும் தனக்கு வந்த மிரட்டல் குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு நீதிபதி ரகுபதி அனுப்பிய கடிதததையும் இன்று நீதிமன்றம் வெளியிட்டது.

அதில் நீதிபதி ரகுபதி கூறியிருப்பதாவது: ''கடந்த 12.06.2009ம் தேதி நான் எனது நீதிமன்ற அறையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அங்கு வந்து தனது மொபைல் போனை என்னிடம் தந்து, மத்திய அமைச்சர் உங்களுடன் பேச விரும்புகிறார் என்றார். ஆனால், நான் அவருடன் பேச மறுத்துவிட்டேன். சட்டப்படி தான் எல்லாம் நடக்கும் என்று கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

கிருபா ஸ்ரீதர், அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்காக அந்த வழக்கில் ஆஜரானதும் சந்திரமோகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா மறுப்பு:

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ராஜா மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் எந்த நீதிபதியையும் மிரட்டவில்லை. என் சார்பில் நீதிபதியிடம் பேச யாருக்கும் நான் அனுமதி தரவில்லை. என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் கவலை தருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து நான் மீண்டு வருவேன் என்றார்.
English summary
Spectrum Raja finds himself in another controversy. In a shocking revelation by Madras High Court’s Justice Khalifullah, that it was the former telecom minister who had approached and threatened Justice Raghupathy in the same court to influence his decision on bail in a MBBS marksheet scam being probed by the CBI. Last year Justice Raghupathy had written to the then Chief Justice of India Balakrishnan, that a Union Minister, through his lawyer, spoke to him on telephone seeking favours in the marksheet scam.

கருத்துகள் இல்லை: