செவ்வாய், 19 ஜூலை, 2011

அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி

ண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.
இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம்.  இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.
சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.
சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..
தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.
கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.
ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

கருத்துகள் இல்லை: