To Kill A Mocking Bird அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதிவரை கறுப்பர்களின் Civil Rights போராட்டம் வெடித்து வெற்றிபெறும்வரை இருந்த மோசமான இனவாதச் சூழலின் ஒரு காட்சியாக ஒரு வெள்ளைப் பெண்மணியால் (Harper Lee)ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. ஒரு சிறுமியின் கண் ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கருவையே அருந்ததி ரோய் இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக்கிக் கொண்டார் என்கிற விமர்சனத்துடன் குற்றச்சாட்டு துவங்குகிறது. முன்னதில் இனவாதம் என்பது பின்னதில் ஜாதிக் கொடுமையாகிறது. Harper Lee யின் கறுப்பர் அருந்ததி ரோயின் நாவலில் வேலுத்தா என்ற தலித்தாகிறார். அவரது நாவலும் ரஹேல் என்ற சிறுமியின் பார்வையில் சொல்லப்படுகிறது.‘To Kill A Mocking Bird’டில் ஒரு வெள்ளைப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு. God of Small Things ஸில் உயர்ஜாதிப் பெண்ணை நதி யில் மூழ்கடித்ததாகப் பொய் குற்றச்சாட்டு. அவன் ரஹேலின் அம்மாவின் ஆவேச சம்மதத்துடன் உடலுறவு கொண்டதும் தண்டனைக்குக் காரணம்.
அருந்ததி ரோயே ஒரு முறை தனது நேர் காணல் ஒன்றில் தான் To Kill A Mocking Bird’ டைப் படித்து ரசித்ததாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். “என் எழுத்து கார்ஷியா மார்க்குவிஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபாக்கனர் போன்ற பலரின் எழுத்துக்களுடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நான் ஃபாக்னரைப் படித்ததேயில்லை. ஆனால் தெற்குப் பகுதி அமெரிக்க நாவலான To Kill A Mocking Bird டைப் படித்திருக்கிறேன்” என்றாராம். அதாவது எனக்கு அமெரிக்க எழுத்தாளர்கள் பிடிக்காது. இது இனவாதத்தைப் பற்றின புத்தகம் என்பதால் பிடித்தது (நகலெடுக்கத் தோன்றிற்று) என்று சொல்லாமல் சொல்கிறாராம். அவர் பிறகு வேறு நாவல் எழுதாமல் போனதற்குக் காரணம் அவரது முதல் நாவல் அவரது சுயமான படைப்பு இல்லை என்பதே என்று விமர்சனம் தொடர்கிறது. அதனாலேயே தன்னை ஒரு சமூகப் போராளியாக இனம் காட்டிக்கொண்டு தனது அமெரிக்க துவேஷப் பேச்சுக்களால் கட்டுரைகளால் உலகத்தின் கவனத்தைப் பெறப்பார்க்கிறார். ஏழைகளின் பழங்குடிகளின் பங்காளி என்கிறப் போர்வையில் உலவும் ஜனநாயக விரோதி. பயங்கரவாதி என்று வசைமாரியாக விமர்சனங்கள் தொடர்கின்றன.
அந்தப் புத்தகத்துக்கு புக்கர் விருது கிடைத்ததே ஒரு தவறான மயக்கத்தால் என்று வேறொருவர் சொல்கிறார். அவரது கறுத்த சுருண்ட முடியையும் அகன்ற கபில நிறக் கண்களையும் கபில நிறச் சருமத்தையும் கண்ட மயக்கத்தில் அளிக்கப்பட்ட பரிசு என்று காட்டமாகக் கருணையற்று வெடிக்கிறது இன்னொரு விமர்சனம்.
ENRON அமைப்பு அருந்ததியின் தீவிர அமெரிக்க எதிர்ப்பினால் அவரது முக்கிய எதிரி என்பது வெளிப்படை. ஆனால் அருந்ததியின் சமீபகால பேச்சுக்கள், ஜனநாயக விரோதமான அதிரடி அறிக்கைகள், மாவோயிஸ்டுகளின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு தூபம் போடுவதுபோல வக்காலத்து வாங்குவதுபோலப் பேசும் பேச்சுக்கள் தொலைக்காட்சியில் பலர் பார்க்க சொல்லும் கருத்துக்கள் எல்லாம் அவரது புத்தகத்தை வாசித்து ரசித்தவர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருப்பதில் சந்தேகமில்லை. வலைத் தளத்தில் பலர் அவர் வாயை மூடிக்கொள்ளட்டும். அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கட்டும் என்று குமுறுகிறார்கள். அவரைப் பற்றிய, அவரது கருத்துக்கள் பற்றிய கடுமையான விமர்சனங்கள் அவரது புத்தகத்துக்குக் கிடைத்த புகழை மறைக்கும் அளவுக்குக் கொடுமையானவை.
என்னைப் பொறுத்தவரை எல்லா விமர்சனங்களும் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை. நான் அவரது நாவலை மிகவும் ரசித்துப் படித்தேன். ஹார்ப்பர் லீயின் நாவல் அவருக்கு ஆதர்ஷமாக இருந்திருக்கலாம். ஆனால் God of Small Things அருந்ததி கையாண்ட ஆங்கில மொழிக்கும், மனித நேயப் பார்வைக்கும் நாவலின் கட்டுமானத்துக்கும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர் அடுத்ததாக படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்தாமல் சமூகப் போராளியாக தன்னை இனம் காட்டிக்கொண்டதும் படைப்புத்திறன் விடைபெற்றது. அவரது சமீபகால பேச்சுக்கள் சர்ச்சைக்குரியவை. முரணானவை. படைப்பிலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் அவரிடமிருந்து விலகி வருகிறார்கள். அவர் தனிமையில் தனது வெறித்தனமான கருத்துக்களை மெல்லிய குரலில் கன்னக் குழிவிழும் புன்னகையுடன் சொல்கிறார். புலிவாலைப் பிடித்துக்கொண்டுவிட்ட நிலையில் அவர் இருப்பதாகத் தோன்றுகிறது.ஒரு அருமையான படைப்பாளி மாண்டுவிட்ட சோகம் அது.நன்றி: தினகரன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக