LR Jagadheesan லால் சலாம் திரைப்படத்தில் 1990களுக்கு முன்பு நடப்பதாக வரும் காட்சியில் முஸ்லிம் உரிமையாளர் வீட்டில் குடியிருக்கும் அவரது நெருங்கிய இந்து நண்பர் இறந்துவிடுகிறார்.
அவரது இறுதிக்கிரியைகள், சடங்கு சம்பிரதாயங்களை அவர்களின் இந்துமத/ஜாதிய முறைப்படி நடத்த அந்த இந்து குடும்பமும் உறவினர்களும் ஏற்பாடுசெய்கிறார்கள்.
அதை அந்த ஊரில் இருக்கும் முஸ்லிம்கள் தடுக்கிறார்கள். முஸ்லிமுக்கு சொந்தமான வீட்டில் இந்துமத சடங்குகள் நடத்தக்கூடாது என்கிறார்கள்.
இப்படி சொல்பவர்கள் தமிழ்முஸ்லிம்களாக படத்தில் காண்பிக்கப்படுகிறது.
இப்படியான ஒரு சூழல் கற்பனையாகக்கூட தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் அந்தகாலகட்டத்தில் இருந்ததாக பார்க்கவும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.
நானறிந்தவரை தமிழ்நாட்டில் உருவான இஸ்லாமிய கடும்போக்குவாதம்/தீவிரவாதம் என்பது பாபர் மசூதி இடிப்புக்குப்பின்னர் முஸ்லீம்கள் மத்தியில் உருவான பதிலடி/எதிர்வினை நடவடிக்கையே தவிர.
தமிழ் முஸ்லிம்கள் இறந்த சடலத்தை முஸ்லிம் வீட்டில் இருந்து அகற்றும் அளவுக்கு கடும்போக்குவாதிகளாக இருந்த வரலாறு என்னளவில் கேள்வியே படாத ஒன்று.
இந்த படத்தில் இந்த காட்சி எதன் அடிப்படையில் வைக்கப்பட்டது என்பதை இந்த திரைப்படத்தின் கதாசிரியர்/இயக்குநர் கண்டிப்பாக விளக்கவேண்டும். ஏனெனில் இது மிக மிகத்தவறான சித்தரிப்பு. வரலாற்றுத்திரிபு என்றே கருதுகிறேன்.
பாபர் மசூதி இடிப்புக்குப்பின் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் படிப்படியாக வேர்பிடித்த மத கடும்போக்குவாதம் பின்னாட்களில் தீவிரவாதமாக வளர்ந்த விபரீதமும் அது கோவையில் ஏற்படுத்திய விபரீதங்களும் வேறு.
அவையெல்லாமே பாபர் மசூதி இடிப்புக்குப்பின்னர் உருவான பதில்/எதிர்வினை நடவடிக்கை என்கிற பெயரில் தங்கள் தலையில் தாமே தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மண்ணள்ளிப்போட்டுக்கொண்ட செயல்கள். அதன் பாதிப்புகள் இன்றுவரை தமிழ்நாட்டு முஸ்லிம்களை விடாமல் துரத்துகின்றன.
அவர்களும் மிகப்பெரிய விலைகளை கொடுத்தார்கள். இன்றும் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் லால்சலாம் படத்தில் காட்டப்படும் காட்சி பாபர் மசூதி இடிப்புக்கு முந்தைய காலகட்டம்.
1980களிலேயே பழனிபாபா போன்ற rabble-rousers தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே பிரபலமாகி வந்தாலும் அவர்கூட ஆர் எஸ் எஸ்/இந்துமுன்னணி எதிர்ப்பையே முதன்மையாக முன்னெடுத்தாரே தவிர.
இந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என எல்லா மதங்களையும் உள்ளடக்கிய பொதுவான மதம் கடந்த தமிழ் அடையாளத்தையே முதன்மைப்படுத்தினாரே தவிர சராசரி இந்துக்களை தனிமைப்படுத்தி/விலக்கிவைக்கும் பிரச்சாரத்தை செய்யவில்லை.
எனவே பாபர் மசூதி இடிப்புக்கு முன்பே சக தமிழர்களை இந்துக்களாக பார்த்து ஒதுக்கி வைக்கும் அளவுக்கு தமிழ்முஸ்லிம்கள் மத்தியில் மதக்கடும்போக்குவாதம் இருந்ததாக காட்டுவதன் பின்னணி என்ன?
இதற்கான ஆதாரம் எது? கதாசிரியரோ இயக்குநரோ விளக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக