tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: இமாச்சல் பிரதேசத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜ் கீழ்ப்பாக்கத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. இதையடுத்து அவரை 8 நாட்களாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், போலீஸார், மீட்பு படையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெற்றியின் உடலை ஸ்கூபா டைவ் வீரர்கள் மீட்டனர். இத்தனை நாளாக வெற்றி உயிருடன் வருவார் என காத்திருந்த குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்தது இந்த செய்தி!
இதையடுத்து வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எம்பாமிங் செய்யப்பட்டு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தனது மகனை கண்டுபிடித்து கொடுத்தால் தான் வழங்குவதாக அறிவித்த ரூ 1 கோடி சன்மானத்தை ஸ்கூபா டைவிங் வீரர்களிடம் சைதை துரைசாமி வழங்கினார்.
இந்த நிலையில் வெற்றியின் உடல் இன்று காலை இமாச்சலில் இருந்து நாக்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. இதையடுத்து அங்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெற்றியின் உடல், அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டிற்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பிறகு அங்கிருந்து சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டில் வெற்றியின் உடல் வைக்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சியினர், மனிதநேய அறக்கட்டளை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அங்கு படித்துவிட்டு அதிகாரிகளாக இருப்பவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து அங்கிருந்து மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அஜித்தும் வெற்றியும் நண்பர்கள். அந்த வகையில் அஜித்திற்கு வெற்றியின் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாததாகிவிட்டது. இதையடுத்து அவர் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டிற்கு சென்று அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக