செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 14 முதல் தற்போது வரை சிறைவாசம் தொடர்வதால் செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் வரை செந்தில் பாலாஜி தரப்பு சென்ற நிலையில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், 240 நாட்களை கடந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இலாகா இல்லா அமைச்சராக இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 14 முதல் சிறைவாசம் தொடர்வதால் தற்போது செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஜாமின் மனு மீதான் விசாரணை சென்னை நீதிமன்றத்தில் வரும் 14ஆம் தேதிக்கு வர உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். முன்னதாக செந்தில் பாலாஜி அமைச்சராகவும், செல்வாக்கு மிக்கரவாகவும் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அவர் எளிதில் கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேபோல் கடந்த 31 ஆம் தேதி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்.

ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தது என சுட்டிக்காட்டினார். இதேபோல், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை: