tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை கவுதமி, இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவுக்கும் கவுதமிக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. கௌதமியின் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் குறித்து முதன் முதலில் சந்தேகம் கிளப்பியவர் கௌதமி.
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை கௌதமி.
1988ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் குருசிஷ்யன் படத்தின் மூலம் கௌதமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார் கௌதமி கவுதமி திருமணத்தில் ஜெயலலிதா: 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. கெளதமியின் திருமணம், ஜெயலலிதா தலைமையில் தான் நடைபெற்றது.
திருமணமான அடுத்த ஆண்டே, அதாவது 1999ஆம் ஆண்டு கௌதமியும், சந்தீப் பாட்டியாவும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். பிறகு மகளுடன் வசித்து வந்தார் கௌதமி. அந்த காலகட்டத்தில் இருந்தே பாஜகவில் செயல்பட்டு வருகிறார் கௌதமி. பாஜகவில் இளைஞரணி தேசிய பொறுப்பையும் வகித்துள்ளார் கௌதமி.
பல ஆண்டு காலமாக பாஜகவில் பணியாற்றி வந்த கௌதமி, பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களைப் பற்றி தான் கலந்து கொள்ளும் மேடைகளில் எல்லாம் பேசி வந்தார். இந்த நிலையில் தான் திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். நில மோசடியில் தனக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டதாக குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகினார் கவுதமி. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கௌதமி.
சந்தேகம் கிளப்பிய கவுதமி: கவுதமி திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைக்கும் அளவுக்கு கவுதமி ஜெயலலிதா மீது அன்பு கொண்டிருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தலைவருமான ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய முதல் ஆள் கௌதமி என்பது குறிப்பிடத்தக்கது. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி காலமானார்.
இதையடுத்து, அப்போது நடிகை கவுதமி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கவுதமி.
அதில், "மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு வணக்கம், ஒரு சாதாரண குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு இல்லத்தரசி மற்றும் தாய். முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெயலலிதாவின் அதிர்ச்சி மரணத்தை நினைத்து கவலைப்படும் கோடானு கோடி நபர்களில் நானும் ஒருத்தி. இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா. பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகத்தில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உறுதி, மனத்திடம் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும்.
தடுத்தது யார்?: ஜெயலலிதாவின் மரணம் சோகமானது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நிலவிய சூழல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை, அவர் தேறி வந்தது, திடீர் என இறந்தது என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அக்கறையுடன் வந்த தலைவர்கள், பிரபலங்கள் அவரை காண அனுமதிக்கப்படவில்லை. அவரை சந்திக்க விடாமல் தடுத்தது யார்?
மக்கள் விரும்பும் தலைவி விஷயத்தில் இந்த ரகசியம் ஏன்? யார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது? ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து யார் முடிவுகள் எடுத்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் மக்களுக்கு யார் பதில் அளிக்கப்போவது? இது போன்று பல கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழுகிறது. அவர்கள் சார்பில் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன்.
பெரிய தலைவிக்கே இந்த கதி: ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் பற்றி அறிந்துகொள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. இது போன்ற சோக நிகழ்வு பதில் கிடைக்காமல் போகக் கூடாது. ஒரு பெரிய தலைவிக்கே இந்த கதி என்றால் தனது உரிமைகளுக்காக போராடும் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும்?
இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் எந்த விஷயம் குறித்தும் அறியும் இந்திய குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கயுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். குடிமக்களின் உரிமைகளை காக்க துணிந்து நிற்கும் தலைவர் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். சக நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்." என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் கௌதமி.
மேலும், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகும்போது வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் ராஜபாளையத்தில் நான் அந்த பகுதி மக்களுக்காக கடுமையாக உழைத்தேன். பாஜகவின் அடிமட்டத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் இந்த வாக்குறுதி கடைசி நேரத்தில் இல்லாமலே போனது." என்றும் தெரிவித்திருந்தார் கௌதமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக