சனி, 17 பிப்ரவரி, 2024

துரை வைகோ : நாங்க கேட்ட சீட் இது.. கொடுக்காவிட்டாலும் திமுகவுடன் தான் கூட்டணி!

 tamil.oneindia.com  -Vignesh Selvaraj :  கோவை: லோக்சபா தேர்தலில், கேட்ட சீட்டை கொடுக்காவிட்டாலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கியது திமுக. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது மதிமுக. எனினும், இன்னும் தொகுதி உடன்பாடு இறுதியடைவில்லை.
MDMK alliance will continue with dmk even if we cannot get we demanded seat: says Durai vaiko



பம்பரம் உறுதி: இந்த லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது மதிமுக. இந்த முறை தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தான் கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது. திமுகவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அண்மையில் கூறி இருந்தார்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திலும் மதிமுக கோரிக்கை வைத்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அண்மையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

துரை வைகோ பேட்டி: இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் துரை வைகோ. அப்போது தேர்தல் பத்திரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய துரை வைகோ, "திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கிறோம். 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது, மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதை வரவேற்கின்றோம். ஆனால், நாங்கள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.

கேட்ட சீட் கிடைக்காவிட்டாலும் கூட்டணி தொடரும்: மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக, மதிமுக கூட்டணி உருவானது. தேர்தல் சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது. யாரெல்லாம் பா.ஜ.க-வை எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியில் வர மாட்டோம். கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம்.
MDMK alliance will continue with dmk even if we cannot get we demanded seat: says Durai vaiko

திருச்சியில் துரை வைகோ: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கொடுக்கும் சீட்களின் அடிப்படையில் போட்டியிடுவோம். கண்டிப்பாக எங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். அதுவே கட்சி நிர்வாகிகளின் எண்ணமும். முதலமைச்சரும் இதனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதவாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அது தான் மிக முக்கியம்." எனத் தெரிவித்தார்.

துரை வைகோவுக்காக, திருச்சி தொகுதியை மதிமுக கோரி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருச்சி தொகுதியில் சென்ற முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் திருச்சியில் மீண்டும் திருநாவுக்கரசரே போட்டியிட காய்நகர்த்தி வருகிறார். மறுபுறம், திருச்சியைக் குறிவைத்து துரை வைகோ தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுக தலைமை, என்ன முடிவெடுக்கப்போகிறது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

கருத்துகள் இல்லை: