புதன், 14 பிப்ரவரி, 2024

கஜகஸ்தானில் (முஸ்லிம் நாடு) ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது ஏன்?

BBC News தமிழ் - , ஐசிம்பத் தோகோயேவா : பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். 2016இல் விதிக்கப்பட்ட தடை குறித்து அங்கு இன்னும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சில பெற்றோர்கள் இன்னமும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான அரசமைப்பு உரிமையைப் பாதுகாக்க முயல்கின்றனர்.
இந்த விவாதம் கஜகஸ்தானில் அடையாளத்திற்கான தேடலை பிரதிபலிக்கிறது. அங்த நாட்டின் தலைமை, இஸ்லாத்தின் மீது அர்ப்பணிப்பைக் காட்டும் அதேவேளையில், சோவியத் யூனியனில் இருந்து வந்த மதத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பலவீனப்படுத்த இன்னும் தயாராக இல்லை.  கரகாண்டாவில் வசிக்கும் 13 வயதான அனிலியா, புகழ்பெற்ற நசர்பயேவ் அறிவுசார் பள்ளியில் சேர வேண்டுமெனா தனது கனவை நிறைவேற்றியுள்ளார். அவர் ஏழாம் வகுப்பு படிக்கிறார். அந்தப் பள்ளிக்கு கஜகஸ்தானின் முன்னாள் அதிபர் நர்சுல்தான் நசர்பயேவின் பெயர் சூட்டப்பட்டது. அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றின் நாட்டின் முதல் பெண் அதிபராக வரவேண்டும் என்பதே அனிலியாவின் கனவு.

உயரமான, ஒல்லியான உருவம்கொண்ட அனிலியா, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான கல்விப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டார். 800 பங்கேற்பாளர்களில் அவர் 16வது இடத்தைப் பிடித்தார். அவருக்குப் பிடித்த பாடங்கள் இன்னும் விரிவாக, ஆழமாகக் கற்பிக்கப்படும் என்று நசர்பயேவ் அறிவுசார் பள்ளி உறுதியளித்துள்ளது.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆகஸ்டில், அங்கு செல்லத் தயாரானார். ஆனால், ஒருநாள் அவரது பெற்றோரை அழைத்து அனிலியா இனி அங்கு படிக்க முடியாது என்று நிர்வாகம் கூறியது. அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது, 13 வயதில் அனிலியா அணியத் தொடங்கிய ஹிஜாப். இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, பருவமடைந்தவுடன் பெண்கள் தமது தலையை மறைக்க வேண்டும்.

“நான் ஹிஜாப் அணிந்தபோது, நான் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருப்பதைப் போல் உணரவில்லை. அது ஒரு துண்டு மட்டுமே. அது எனது படிப்பையோ அல்லது மற்ற மாணவர்களுடனான எனது உறவையோ பாதிக்கவில்லை. எனது வகுப்புத் தோழர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை,” என்று அனிலியா கூறுகிறார்.

கஜகஸ்தானின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள்

கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கு வாழும் மக்களில் 69 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இருப்பினும், பல ஆய்வுகளின்படி, கஜகஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மதத்தை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள்.

அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகயெவ் இஸ்லாம் மீதான தனது உறுதிப்பாட்டை வெளிப்படையாகக் காட்டி வருகிறார். அவர் 2022இல் முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவுக்கு சென்றார். மேலும் கடந்த ஆண்டு ரமலான் நாளின்போது தனது வீட்டில் அரசு அதிகாரிகள், பிரபலங்களுக்கு இப்தார் விருந்தளித்தார். இருப்பினும், அரசமைப்பு ரீதியாக கஜகஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடு.

அனிலியாவை போலவே, கரகண்டாவில் வசிக்கும் பல மாணவிகள் இதேபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கஜகஸ்தானில் ரஷ்ய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொழில் நகரம் இது. கடந்த ஆண்டு அக்டோபரில் கஜகஸ்தானில் கல்வி தொடர்பான சட்டங்களின்கீழ் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காக 47 பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சிவில் வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டில், கல்வி அமைச்சகம் ஓர் உத்தரவை வெளியிட்டது.”பள்ளி சீருடையுடன் எந்த வகையான மத அடையாள ஆடைகளையும் அணிய அனுமதிக்கப்படாது,” என்று அந்த உத்தரவு கூறியது.

பல பெற்றோர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் பார்வையில், குடிமக்களுக்கு இலவச கல்விக்கான உரிமையை வழங்கும் கஜகஸ்தானின் அரசமைப்பிற்கு மேல் கல்வி அமைச்சகத்தின் உத்தரவுகளைப் பள்ளிகள் முன்னிலைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனிலியாவின் தந்தை இந்த விஷயத்தில் வழக்கறிஞர் அலுவலகம், கல்வி அமைச்சகத்திடம் விளக்கம் கோரினார். ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பெண்கள் ஹிஜாப் அணிந்தமைக்காக பெற்றோர்கள் தண்டிக்கப்படும் இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் பல முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டில், நாட்டின் அக்டோப் பகுதியில் ஒரு சிறுமியின் பெற்றோருக்கு பள்ளி சீருடை தொடர்பான விதிகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், அக்மோலா பகுதியில் இதேபோன்ற வழக்கைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையத்தை அமைத்தது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குடும்பங்களுக்கு உதவும் மனித உரிமை ஆர்வலரான ஸசுலன் ஐத்மகம்பெதோவ், “பள்ளி அதிகாரிகளின் அழுத்தத்தின் கீழ் பெண்கள் தங்கள் ஹிஜாபை அகற்ற வேண்டிய பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மற்றவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். இந்த அழுத்தம் வகுப்பில் மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு வழி,” என்று கூறுகிறார்.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

கஜகஸ்தான் அரசு என்ன சொல்கிறது?

பள்ளிகளில் ஹிஜாப் பற்றிய கேள்விக்கு, கஜகஸ்தான் அரசாங்கம் மதச்சார்பற்ற நாடு என்றும் இதுகுறித்து அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு வலியுறுத்துகிறது. அதிபர் டோகாயேவ் கடந்த அக்டோபரில், “குழந்தைகள் கல்வி கற்க வரும் ஒரு கல்வி நிறுவனம் முதலில் பள்ளி என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் குழந்தைகள் வளர்ந்து உலகைப் பார்க்க ஒரு பாதை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அந்தப் பார்வையில், தங்கள் விருப்பு, வெறுப்புகளைத் தீர்மானிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

“மதச்சார்பற்ற நாடு என்றால் என்னவென்பது குறித்து வல்லுநர்கள் அல்லது அதிகாரிகளிடையே தெளிவான அல்லது உறுதியான வரையறை இல்லை,” என்று அல்மாட்டியில் உள்ள கோட்பாடுகளுக்கான நிறுவனத்தின் அரசியல் மற்றும் மத ஆய்வுகளின் ஆராய்ச்சியாளர் அசில்டே டாஸ்போலாட் கூறுகிறார்.

“நமது சமூகம் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை. விவாதத்தின் ஒவ்வொரு பக்கமும் மதச்சார்பின்மையை அதன் சொந்த வழியில் விளக்கப்படுகின்றன. சில குடிமக்கள், மதச்சார்பின்மை என்பதை நாத்திகம் என்று பொருள் கொள்கிறார்கள்,” என்று விளக்கினார் அவர்.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

பல நாடுகளில் ஹிஜாப் தடை

பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணிவதற்குப் பல நாடுகள் தடை விதித்துள்ளன. பொதுவாக, இந்தத் தடை முகத்தை மறைக்கும் நிகாப் மீதுதானே தவிர தலையை மறைக்கும் ஹிஜாப் மீது அல்ல. எந்தவொரு முஸ்லிம் பெரும்பான்மை நாட்டிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. அதில் கஜகஸ்தானி அண்டை நாடுகளான உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியவையும் அடங்கும்.

கஜகஸ்தானில் மதத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நடைமுறை சோவியத் யூனியன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. முன்னதாக, ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் மத விவகாரங்களை மேற்பார்வையிடுவது மத்திய ஆசியாவின் முஸ்லிகளின் ஆன்மீக நிர்வாகத்தின் பொறுப்பாக இருந்தது. அது 1943இல் நிறுவப்பட்டது. அந்த அமைப்பு மத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பிறகு, கஜகஸ்தானின் அரசு, மதத்தைப் பின்பற்றுபவர்களைத் தண்டிப்பதை நிறுத்தியது. இதன் காரணமாக, அதிகமான மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படையாகப் பின்பற்றத் தொடங்கினர். மசூதிகளைக் கட்டத் தொடங்கினார்கள். சோவியத் காலத்தில், ஒரு டஜன் அளவிலான மசூதிகள் மட்டுமே இருந்தன. அவற்றின் எண்ணிக்கை இன்று 3000ஐ எட்டியுள்ளது.

ஆனால், இப்போது முஸ்லிம்கள் ஆன்மீக நிர்வாகம் என்பதற்குப் பதிலாக கஜகஸ்தான் முஸ்லிம்களின் ஆன்மீக நிர்வாகம் என மாற்றப்பட்டுள்ளது. இது கஜகஸ்தானின் கலாசாரம், மதச்சார்பற்ற நாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இஸ்லாமிய பாரம்பரிய வடிவத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசு ஆதரவு நிறுவனமாகும்.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கஜகஸ்தான் அரசைப் பொறுத்தவரை, மதத்தின் மீதான கட்டுப்பாடு என்பது தேசிய பாதுகாப்புப் பிரச்னை. 2005ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதி மற்றும் சிரியா, இராக் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கின் கீழ், கஜகஸ்தானிலும் மத அடிப்படைவாதிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு கஜகஸ்தானில் முதல் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு ராணுவ தளம், ஆயுதக் கடை மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாம் மதத்தின் சலாபி பிரிவைப் பின்பற்றுபவர்கள் என்று அப்போதைய அதிபர் நர்சுல்தான் நசர்பயேவ் அறிவித்திருந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், மத நம்பிக்கைகள் தொடர்பான பல விஷயங்களில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. மத சமூகங்களைப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ கடமை மற்றும் ஒருவரின் சொந்த வீட்டில் மத கூட்டம் நடத்துவதைத் தடை செய்வதும் இதில் அடங்கும்.

இது நாட்டைத் ‘தீவிரமான’ கருத்துகளில் இருந்து பாதுகாக்கும் என்று வாதிடுவதன் மூலம் அரசு இந்தக் கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது. ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்டங்கள் மதத்தைக் கடைபிடிப்பவர்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதாகவும், மத பிரச்னைகளில் கடுமையான கட்டுப்பாட்டை நாட்டில் விதிக்கும் உரிமையை அரசுக்கு வழங்குவதாகவும் கூறுகிறார்கள்.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

‘பொது இடத்தில் ஹிஜாபை தடை செய்யும் எண்ணம் இல்லை’

பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு அறிவித்தது. கலாசாரம் மற்றும் தகவல் துறை அமைச்சர் அடா பலயேவாவின் கூற்றுப்படி, இந்தச் சட்டம் பொது இடங்களில் நிகாப் அல்லது வேறு எந்த வகையான முகத்தை மூடும் ஆடைக்கும் தடை விதிக்கும். ஆனால், ஹிஜாபை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.

அனிலியாவை பொறுத்தவரையில், பள்ளியில் ஹிஜாப் அணிந்ததற்காகப் பலமுறை கண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை போலட் மாசின் தனது மகளை வெளியேற்றுவது சட்டத்திற்கு எதிரானது என்று நம்புகிறார். மகளைப் பள்ளியிலிருந்து நீக்கிய உத்தரவை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனது மகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து, தம் மகளுக்கு ஏற்பட்ட இழப்பு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அதிகாரிகள் ஒன்று எங்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் திருப்பிவிடுகிறார்கள் அல்லது ஹிஜாபை அகற்றச் சொல்கிறார்கள். அரசாங்கத்திடம் இருந்து தெளிவான பதில் வேண்டும். மதத்தைப் பின்பற்றும் நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை எங்களுக்கு வழங்க வேண்டும். இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு மதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எங்கள் முன் வைத்துவிடாதீர்கள்,” என்று தெரிவித்தார்.

அனிலியா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்துக் கருத்து தெரிவிக்க என்.ஐ.எஸ் பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்தச் செய்தியை வெளியிடும் நேரம் வரை, பிபிசியின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் முஸ்லிம் நாடுகள் சொல்வது என்ன?

அரசை விமர்சிக்காமல் கஜகஸ்தான் முஸ்லிம்களின் ஆன்மீக நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. ஷரியாவின் கீழ் பெண்கள் பருவமடையும்போது ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று அவர்கள் கூறினர். இந்த வாதங்களுக்கு அரசு கவனம் செலுத்தும் என்று கஜகஸ்தான் முஸ்லிம்களின் ஆன்மீக நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர் ஸசுலன் ஐத்மகம்பெதோவ், இந்தக் கட்டுப்பாடுகளால் கரகாண்டாவில் மதத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் தங்கள் மகள்களுக்குக் கல்வி கற்பிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார். நாட்டின் பிற பகுதிகளில் பல தனியார் பெண்கள் பள்ளிகள் உள்ளன. ஆனால், அதன் கட்டணம் ஆண்டுக்கு 1,500 டாலர்கள் (சுமார் 1.25 லட்சம்). கஜகஸ்தானில் ஒன்பது மதரஸாக்கள் உள்ளன. ஆனால், அவற்றில் சில மதரஸாக்கள் பெண்களை அனுமதிப்பதில்லை.

மேலும் அவர், “நாங்கள் தொடர்ந்து இந்தப் பிரச்னையை எழுப்புகிறோம். அவர்கள் ஹிஜாப் தடை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் கல்வி பெறுவதற்கான மாற்று முறை பற்றிக் கூறவில்லை,” என்றார்.

என்.ஐ.எஸ் பள்ளியில் இருந்து அனிலியா வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது பெற்றோர் ஆன்லைனில் ரஷ்ய மொழி பேசும் ஆசிரியரை கண்டுபிடித்தனர். ஆனால், மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்காக அனிலியா தனது ஹிஜாபை அகற்ற முடிவு செய்தால், குடும்பம் தனது மகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவரது தந்தை கூறுகிறார்.

“ஜிஹாபை அகற்றுங்கள், மீண்டும் பள்ளிக்குச் செல்லுங்கள் அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று சொல்லும் பலரையும் நான் அறிவேன். ஆனால், எனக்கு அப்படித் தோன்றியதே இல்லை. ஏனெனில், ஹிஜாப் என்னில் ஒரு பகுதி,” என்கிறார் அனிலியா.

கருத்துகள் இல்லை: