செவ்வாய், 7 நவம்பர், 2023

இலங்கை விழாவில் ஸ்டாலினின் வாழ்த்து இடம்பெறாததற்கு மத்திய அரசின் தலையீடா? தங்கம் தென்னரசு பதில்

tamil.oneindia.com - Mani Singh S : விருதுநகர்: இலங்கையில் மலையக தமிழர்களின் 200வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவின் போது,
 தமிழக முதல்வரின் வாழ்த்து செய்தி என்ன காரணத்திற்காக ஒளிபரப்பப்படவில்லை என்பது எனக்கு தெரியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2ம் தேதி மலையக தமிழர்களின் 200ம் ஆண்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த விழாவில் தங்கம் தென்னரசு கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசியில் அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விழாவில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடைசியில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பாகவில்லை. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்த நிலையில் என்ன காரணத்திற்காக விழாவில் தமிழக முதல்வரின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படவில்லை என்று எனக்கு தெரியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் அவர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அனுமதி வரவில்லை: இலங்கை மலையக தமிழர்களின் 200வது ஆண்டு விழாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலினும் அழைக்கப்பட்டார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் செல்ல இயலாததால் அந்த விழாவுக்கு நான் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இறுதியில் நானும் இந்த விழாவில் பங்கேற்காதது குறித்து இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு அரசு சார்பில் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

மலையக விழாவில் ஸ்டாலின் உரையை ஒளிபரப்பாதது ஏன்? பாஜக அழுத்தமா? வைகோவுக்கு இலங்கை அமைச்சர் விளக்கம் மலையக விழாவில் ஸ்டாலின் உரையை ஒளிபரப்பாதது ஏன்? பாஜக அழுத்தமா? வைகோவுக்கு இலங்கை அமைச்சர் விளக்கம்

முதல்வர் ஸ்டாலின் அவர்களால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதால் அரசின் பிரதிநிதியாக என்னை இந்த விழாவில் பங்கேற்க பணிந்திருந்தார். அதன்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை முறைப்படி தெரிவித்தோம். இதையடுத்து நான் கலந்துகொள்வதற்கான விண்ணப்பம் கடந்த 28-ம் தேதி வந்தது. இதையடுத்து வெளியுறவுத்துறை அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.

வாழ்த்து செய்தி: விழா 2ம் தேதி மதியம் நடக்க இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு 9 மணி வரை எனக்கு மத்திய அரசின் அனுமதி வரவில்லை. இரவு 8.30 மணி வரை நான் தலைமை செயலகத்தில் தான் இருந்தேன். அப்போது இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அனுமதி வரவில்லை. இதன் பின்னர் அனுமதி கிடைப்பது கடினம் என்ற சூழலில் விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து நான் பயணம் மேற்கொள்ள முடியாது சூழலை விளக்கி கூறினேன்.

அதன்பிறகே நான் வீடு திரும்பினேன். இதன்பின்னர் இரவு 9.30 மணிக்கு அனுமதி கிடைத்தது. இதற்கு முன்னதாகவே நாங்கள் பயண ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டோம். இதனையடுத்து மறுநாள் முதல்வர் மு.க ஸ்டாலினின் வாழ்த்து செய்தி இடம்பெற வேண்டும் என்று கூறினார்கள். இதற்காக முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு பணிகள் இருந்தாலும் விழாவின் முக்கியத்துவம் கருதி இதற்காக நேரம் ஒதுக்கி வாழ்த்து செய்தி தயார் செய்து அனுப்பி வைத்தனர்.

நேரடியா சொல்ல விரும்பவில்லை: முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி பிற்பகல் 2 மணிக்கே அவர்களுக்கு கிடைத்து விட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி விழாவில் ஒளிபரப்பப்படும் என்று கூறினர். ஆனாலும் விழாவில் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படவில்லை. என்ன காரணத்திற்காகவோ ஒளிபரப்பப்படவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இதற்கான காரணத்தை உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஆனால், முதல்வரின் வாழ்த்து செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதை தான் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது செய்தியாளர்கள் இதில் மத்திய அரசின் தலையீடு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு, "நான் யாரையும் நேரடியா சொல்ல விரும்பவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படவில்லை என்று தெரியவில்லை" என்றார்

கருத்துகள் இல்லை: