தினத்தந்தி : காத்மாண்டு இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேற்கு மாவட்டமான ஜாஜர்கோட்டை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதன்படி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நேபாளத்தையொட்டி அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.
இதேபோல டெல்லியில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். அதே போல் பீகாரின் தலைநகர் பாட்னா உள்பட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந் ததாக தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் சுமார் 1 நிமிடம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் நிலநடுக்கம் ஏற்பட்டது நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து, தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் அவர்கள் தூக்கத்திலேயே இடிபாடுகளில் புதையுண்டனர்.
நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட், ருக்கும் ஆகிய 2 மாவட்டங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
முதலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுமார் 160 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் வீடுகளுக்குள் செல்ல பயந்த மக்கள் இரவு முழுவதையும் வீதிகளில் கழித்தனர்.
நேபாளத்தை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு 157 பேர் பலியானார்கள். கட்டிட இடிபாடுகளில் இருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 200-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், "நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. எங்களின் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக