சனி, 11 நவம்பர், 2023

ராஜஸ்தானில் - 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது

மாலைமலர் : ஜெய்ப்பூர ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பூபேந்திர சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தை ஒட்டிய வீட்டில் வசிக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

ஆனால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது சிலர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே பாரதிய ஜனதா எம்.பி. கிரோடி லால் மீனா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் கூறுகையில், தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளேன்.

அசோக் கெலாட் அரசின் திறமையின்மையால் எதேச்சதிகாரமாக மாறி உள்ள காவல்துறை, தேர்தல் போன்ற முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட அட்டூழியங்களை செய்ய தயங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும் என்றார்.
 

கருத்துகள் இல்லை: