வியாழன், 9 நவம்பர், 2023

கோவை: மாணவரை ராகிங் செய்த சீனியர்கள் - பாதிக்கப்பட்டவர் என்ன கூறுகிறார்?

bbc.com- ச.பிரசாந்த்  :    கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான பி.எஸ்.ஜி தனியார் பொறியியல் கல்லூரியில், ஜூனியர் மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி விடுதியில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி மொட்டை அடித்து ‘ரேகிங்’ செய்ததாக, ஏழு மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
அந்த ஜூனியர் மாணவருக்கு என்ன நடந்தது?
கோவை பீளமேடு பகுதியில், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவரை, மது குடிக்க பணம் தர மறுத்ததற்காக விடுதி அறையில் கட்டி வைத்து தாக்கி, மொட்டை அடித்து, கொடூரமாக ராகிங் செய்ததாக, செப்டம்பர் 8ஆம் தேதி ஏழு மாணவர்களை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.



இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவை,
கல்லூரி வளாகத்திற்குள் ஜூனியர் மாணவர் எப்படி ராகிங் செய்யப்பட்டார்? பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகார் என்ன? கல்வி நிறுவனங்களில் ராகிங் நடப்பதைத் தடுக்க உண்மையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா?
நவம்பர் 7ஆம் தேதி ராகிங் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்தும், பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகார் குறித்தும், பிபிசி தமிழிடம் பேசினார் பாதிக்கப்பட்ட மாணவர் தீபக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

‘‘திருப்பூரைச் சேர்ந்த நான் பி.எஸ்.ஜி கல்லூரியில், விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறேன். வழக்கம் போல் கல்லூரி முடிந்து, நவம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை விடுதியில் இருந்தேன். அன்று மாலை என்னிடம் வந்த சீனியர்கள், 'மது குடிக்கச் செல்கிறோம் அதற்கு பணம் வேண்டும்' எனக் கூறி என்னிடம் பணம் கேட்டுத் தொல்லை செய்தார்கள்.

என்னிடம் பணம் இல்லை எனக் கூறி நான் பணம் தர மறுத்தேன். அப்போது கோபமடைந்த அவர்கள் என்னை மிரட்டி அவர்களது அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினார்கள். இரவு 12:30 முதல் அதிகாலை சுமார் 4 மணி வரை அந்த அறையில் என்னைக் கட்டிப்போட்டு அடித்தார்கள்.
கோவை ரேகிங்
மேலும், எனது ஆடைகளைக் கழற்றி, முடியை டிரிம் செய்து மொட்டை அடித்து துன்புறுத்தினார்கள். பிறகு என்னை அவிழ்த்து விட்டபோது, உடனே எனது அறைக்கு வந்த நான் தொலைபேசி மூலம் என் அப்பாவிடம் நடந்ததைக் கூறினேன்.

அதன் பிறகு, நவம்பர் 7ஆம் தேதி காலையில் எனது தந்தையுடன் சென்று அவர்கள் மீது பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அவர்கள் ஏழு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்,’’ எனக் கூறினார்.
கோவையில் ஜூனியருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த சீனியர்கள் - என்ன நடந்தது?
ஏழு மாணவர்கள் கைது
சம்பவத்துக்குப் பிறகு அரசுத் சார்பிலோ, கல்லூரி அல்லது போலீஸார் சார்பிலோ, மருத்துவம் மற்றும் உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கப்பட்டதா எனக் கேட்டபோது அதற்கு, இதுவரை எந்தவிதமான ஆலோசனையும் தனக்கு வழங்கப்படவில்லை என்றே மாணவர் தீபக் கூறினார்.

தீபக் கொடுத்த புகாரின் பேரில், ஏழு மாணவர்களைக் கைது செய்த பீளமேடு போலீஸார், வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது, ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது போன்ற பிரிவுகளின் கீழ், இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி – 323, 324, 342, 143, 355, 506 (1) மற்றும் தமிழக ராகிங் தண்டனைச் சட்டம் 1997இன் 4வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகிங் செய்த, இரண்டாம் ஆண்டு மாணவர் இருவர், மூன்றாம் ஆண்டு பயிலும் இருவர், இறுதியாண்டு பயிலும் மூவர் ஆகிய 7 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பி.எஸ்.ஜி கல்லூரியின் விளக்கத்தைப் பெற அந்தக் கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் உமாவை நேற்று முதல் பலமுறை தொடர்புகொண்டோம். வாட்ஸ்ஆப் மெசேஜ் வாயிலாகப் பேசிய அவர், கேள்விகளை அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அவரிடம், "ராகிங் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மனதளவில் பாதித்துள்ள மாணவரின் தற்போதைய நிலை என்ன? அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா? கல்லூரியின் Anti – Ragging செயல்பாடு என்ன?" ஆகிய கேள்விகளைக் கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

ராகிங் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்திய பல்கலைக்கழக மானியக் குழு, ராகிங் குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்படுவோரை காக்கவும், ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர் அல்லது தலைவரின் தலைமையில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அடங்கிய Anti-ragging குழுவை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ராகிங் குற்றத்தால் பாதிக்கப்படுவோர் கல்லூரிகளில் உள்ள இந்தக் கமிட்டியில் புகாரளிக்கலாம்.

ஆன்லைன் அல்லது நேரில் புகாரளிப்பது தொடர்பான ஆலோசனைகளை, இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவான UGCயின் இலவச எண்ணான 1800 – 180 – 5522 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் என இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் உள்ள ராகிங் தடுப்பு கமிட்டிகளின் நிலை என்ன?

கல்லூரிகளில் ஆன்ட்யி-ராகிங் கமிட்டி உண்மையில் செயல்படுகிறதா? ராகிங் குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

இதுகுறித்து, பிபிசி தமிழிடம் விளக்கினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரையில் பள்ளி, கல்லூரிகளில் ஆன்டி-ராகிங் கமிட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, அவை உண்மையில் செயல்படுவதே இல்லை,” எனக் குற்றம் சாட்டினார்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழக உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திக், "கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் ஆன்டி-ராகிங் கமிட்டி அமைத்து அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற அரிதான சம்பவங்களில் ஆன்டி-ராகிங் கமிட்டி செயல்படாமல் இருந்தால், அதற்கு கல்லூரி முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள்தான் பொறுப்பு," என்றார்.

கோவையில் ஜூனியருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த சீனியர்கள்: என்ன நடந்தது?

மேலும் பேசிய அவர், “ஆன்டி-ராகிங் கமிட்டியின் உறுப்பினர்கள் யார், கமிட்டியில் புகாரளிப்பது எப்படி என்பன போன்ற தகவல்களை மாணவர்கள் பார்க்கும் வகையில் போஸ்டர் ஒட்டி, அறிவிப்புப் பலகைகளில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் இதை எத்தனை கல்வி நிறுவனங்கள் முறையாகச் செயல்படுத்தியுள்ளன என்று ஆய்வு செய்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த அளவுக்கு ஆன்டி-ராகிங் கமிட்டிகளின் செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன, தனியார் மட்டுமின்றி அரசு கல்வி நிறுவனங்களிலும் இதேநிலைதான்.

ராகிங் என்றால் என்ன? அதைச் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், என்ன தண்டனை கிடைக்கும்? புகாரளிப்பது எப்படி என்ற அடிப்படைத் தகவல்களே மாணவர்களுக்குத் தெரியாது என்பதுதான் இன்றைய உண்மைச்சூழல்,’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

'ராகிங் சாதாரண பிரச்னை இல்லை'

மேலும் தொடர்ந்த அவர், ‘‘சட்டம் தெரியாது என்பதற்காக தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால், இங்கு ரேகிங் குறித்தும் அதன் சட்டம் என்ன என்பது குறித்தும் இன்னமும் மாணவர்களுக்குத் தெரியாத நிலை நீடிப்பதுதான் வேதனையான விஷயம்.

மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல துறைகள் ராகிங் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஒரு அமைப்புகூட இதை முறையாகச் செய்வதில்லை. இதனால், ராகிங் நடந்தால் வெளியில் தெரிவதே இல்லை, பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நீதியும், உளவியல் ரீதியிலான உதவியும் கிடைப்பதில்லை,’’ என்றார்.

கோவையில் ஜூனியருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த சீனியர்கள் - என்ன நடந்தது?

மேலும், அரசு இனியாவது ராகிங் பிரச்னையைத் தீவிரமான சமூக பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

இதுகுறித்து விளக்கிய அவர், ‘‘கோவையில் மாணவரை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தும் அளவுக்கு மாணவர்களின் மனநிலை மோசமாக மாறியுள்ளதை, சாதாரண ராகிங்காக பார்க்காமல், சமூக பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும்.

இதை ஓர் எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு, தமிழக பள்ளி, கல்லூரிகளில் ராகிங் நடக்கும் சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். ராகிங் செய்வோர் ஏன் அந்த மனநிலையில் உள்ளார்கள், அவர்களின் குடும்ப சூழல் என்ன என்பதைக் கண்டறிவதுடன், பாதிக்கப்படும் மாணவருக்கு உளவியல் ரீதியில் ஆலோசனை வழங்கி பாதுகாக்க வேண்டும்.

இனியாவது அலட்சியத்தைக் கைவிட்டு அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள், ராகிங் குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும். ஆன்டி-ராகிங் கமிட்டியை முறையாகச் செயல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

கருத்துகள் இல்லை: