திங்கள், 6 நவம்பர், 2023

தனியாக இருந்த சுரங்க துறை பெண் துணை இயக்குனருக்கு நேர்ந்த பயங்கரம் .. கர்நாடகா

மாலை மலர் :   கர்நாடகா மாநிலத்தின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பதவி வகித்தவர் பிரதிமா. இவர் அம்மாநிலத்தில் உள்ள சுப்ரமணியபுர காவல் எல்லைக்கு உட்பட்ட தொட்டகள்ளசண்ட்ராவில் தனது இல்லத்தில், தன் மகன் மற்றும் கணவருடன் சுமார் 8 வருடங்களாக வசித்து வந்தார்.
அவர் கணவரும், மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியில் ஒரு வேலையாக சென்றிருந்தனர். பிரதிமாவின் கார் டிரைவர் நேற்று முன்னிரவு சுமார் 08:00 மணியளவில் அவரது பணி முடிந்ததும் அவரை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.
நேற்றிரவு, பிரதிமாவின் சகோதரர் அவரை செல்போனில் பலமுறை அழைத்தார். ஆனால், பிரதிமா பதிலளிக்கவில்லை. இதையடுத்து, கவலையடைந்த அவரது சகோதரர் இன்று காலை பிரதிமாவை காண அவரது வீட்டிற்கே வந்தார்.

அப்போது அங்கு பிரதிமா இறந்து கிடந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு பிரதிமாவின் வீடும், சுற்றியுள்ள இடங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

"அவரது தொண்டை பகுதி அறுக்கப்பட்டுள்ளது. மேலும், கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 3 படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேற்கொண்டு தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்வோம். நகையோ, பணமோ களவாடப்படவில்லை" என தெற்கு பெங்களூரூ நகரத்தின் காவல்துறை துணை ஆணையர் ராகுல் குமார் ஷாஹாபுர்வாட் தெரிவித்தார்.

"விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்" என இச்சம்பவம் குறித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

நகரின் பிரதான பகுதியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு பெண் அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: