வெள்ளி, 23 ஜூன், 2023

மம்தா பானர்ஜி : பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தல்!

மின்னம்பலம் - Selvam  : நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அது தான் இந்தியாவின் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 23) பிகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாட்னாவில் நடந்த இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டம் பொது இயக்கமாக மாறும். கடந்த முறை டெல்லியில் நடந்த கூட்டம் திருப்திகரமாக அமையவில்லை.


இன்று பாட்னாவில் நடந்த கூட்டம் நல்லபடியாக முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவில் நடைபெறும் கடைசி பொதுத்தேர்தல் அதுவாக தான் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக பாஜகவிற்கு எதிராக போராட தயாராக உள்ளோம். வரலாறு பாட்னாவிலிருந்து துவங்குகிறது. பாஜக அரசு வரலாற்றை மாற்ற நினைக்கிறது.

ஆனால் நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் நோக்கம் பாசிச பாஜக அரசை தோற்கடிப்பதற்காக தான். பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். உடம்பில் ரத்தம் ஓடும் வரை இந்திய மக்களையும் நாட்டையும் காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்

கருத்துகள் இல்லை: